பிள்ளைப்பூச்சி
பிள்ளைப்பூச்சி[தொகு]

மண்ணினுள் விரைவாகத் துளைத்துச் செல்லும் ஒருவகைப் பூச்சி. இப்பூச்சி கடிக்கும் தாடையுள்ளது. முன் இறக்கை ஒவ்வொன்றும் நேர்நேராக நீளத்தில் மடிந்திருக்கும். பின் இறக்கைகள் முன் இறக்கைகளின் பின் நீண்டு நிற்கும்.
அமைப்பு[தொகு]
செடிகளின் வேர்களைக் கடிக்கும் இப்பூச்சி மண்ணினுள் தொளைத்துச் செல்வதற்கும் வேர்களை வெட்டுவதற்கும் ஏற்றவாறு முன்கால்கள் அமைந்திருக்கின்றன. முன்னங்கால் பாதத்துடன் கத்தரிபோல் வேலை செய்கின்றது. முன்னங்கால்களை கூர்ந்து கவனித்தால் அங்கே பூச்சியின் ஒலியை உணரும் அங்கமாகிய காது வைக்கப்பட்டிருக்கக் காணலாம்.
குடும்பம்[தொகு]
இன்வெர்ட்டிப்ரேட்டா என்னும் முதுகெலும்புப் பிராணிகளிலே ஆர்த்ரோப்ரேட்டா என்னும் கணுக்காலித் தொகுதியிலே, இன்செக்ட்டா என்னும் பூச்சி வகுப்பிலே ஆர்த்தாப்டீரா என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு பிராணி. இந்தக் குடும்பத்துப் பிராணிகளுக்கு பின்கால்கள் மிகவும் நீளமாக இருக்கும். அவற்றின் உதவியால் இவை துள்ளித் துள்ளிப் பாய்ந்து இயங்கும்.
உணர்கொம்புகள்[தொகு]
உணர்கொம்புகள் மிக மெல்லியதாகவும், நீளமாகவும் இருக்கும். உடம்பின் கடைசியில் இரண்டு உணர்கொம்பு போன்ற நீட்சிகள் மிக நீளமாக இருக்கும். சிறகுகள் நீளத்தில் மடிந்து முதுகின்மேல் படிந்திருக்கும்.
தனித் தன்மை[தொகு]
1-2 அங்குலம் நீளம் இருக்கும். நிலத்தினுள்ளே வளை செய்துகொண்டு வாழும். கண்கள் சிறுத்திருக்கும். முன் சிறகுகள் சிறியவை. பின் சிறகுகள் சற்றுப் பெரியவை. வீட்டிலும் ஈரமான இருட்டிடங்களுக்கும் வருவதுண்டு. மழை பெய்து நிலத்தில் நீர் தேங்கும் போது பிள்ளைப்பூச்சி நெண்டிக்கொண்டு வருவதை சில சமயங்களில் காணலாம். நீரில் நீந்தக்கூடும். உடம்பில் மிக மெதுவான வெல்வெட்டு போன்ற பழுப்பு மயிர் வளர்ந்திருக்கும்.
உணவு[தொகு]
சிறு பூச்சிகள், புழு பருவத்திலுள்ள பூச்சிகள், மண் புழு முதலியவற்றைத் தின்னும். இது பயிருண்ணியும் ஆகும். பயிர்களின் வேர், கிழங்கைத் தின்னும். இது தன் இரையைத் தேடிப்போகும்போது தோட்டப் பயிர்களின் வேரை கத்தரித்து விடுகிறது. பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்குக் கேடு செய்கின்றது.
இனப்பெருக்கம்[தொகு]
இதன் வளை பூமியில் நேராகக் கீழே செல்லும். அந்த நேர் வளையிலிருந்து பக்கங்களுக்கு ஆங்காங்கே கிளை வளைகள் போகும். வளையினுள்ளே 200-400 முட்டைகளிடும். தாய்ப்பூச்சி முட்டைகளை அவை பொரிக்கும் வரையில் வளையின் அருகிலேயே எச்சரிக்கையுடன் காத்து வரும். முட்டையிலிருந்து வரும் இளம்பூச்சிகளுக்கும், முதல் தோல் உரிக்கும் வரையில் உணவு கொடுத்துக் காப்பாற்றும்.