பிளாக்பியர்ட்
பிளாக்பியர்ட் | |
---|---|
பிளாக்பியர்ட் (அண். 1736 யோன்சனின் "கடற் கொள்ளையர்களின் பொது வரலாறு" என்னும் நூலில் உள்ள படம்) | |
பிறப்பு | எட்வார்ட் டீச் அண். 1680 (நம்பிக்கை) பிரிஸ்டல், இங்கிலாந்து |
இறப்பு | (அகவை 35–40) ஆக்கிராக்கோக், வட கரோலினா மாகாணம் |
கடற் கொள்ளை தொடர்பில் | |
பட்டப்பெயர் | பிளாக்பியர்ட் |
இயங்கிய காலம் | 1716–1718 |
தரநிலை | தளபதி |
செயற்பாட்டுக் களம் | அத்திலாந்திக் மேற்கிந்தியத் தீவுகள் |
கட்டளைகள் | அரசி ஆனின் பழிவாங்கல், அட்வெஞ்சர் |
பிளாக்பியர்ட் (Blackbeard, அண். 1680 – 22 நவம்பர் 1718) எனப் பெரிதும் அறியப்பட்ட எட்வேர்ட் டீச் (Edward Teach) அல்லது எட்வேர்ட் தட்ச் (Edward Thatch) ஒரு ஆங்கிலேயக் கடற் கொள்ளைக்காரன். இவன், மேற்கிந்தியத் தீவுகளைச் சுற்றியும், பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களின் கரைகளை அண்டியும் இயங்கிவந்தான். இவனுடைய தொடக்ககால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அரசி ஆனின் போர்க் காலத்தில் அரசுக்காகப் பணிபுரிந்த தனியார் போர்க்கப்பல் ஒன்றில் இவன் மாலுமியாக இருந்திருக்கக்கூடும். பின்னர், தளபதி பெஞ்சமின் ஓர்னிகோல்ட்டின் தளமாக இருந்த நியூ புரொவிடென்சு என்னும் பகமாசுத் தீவில் குடியேறிய பிளாக்பியர்ட், 1716 இல் பெஞ்சமினின் பணிக்குழுவில் ஒருவனாக இணைந்துகொண்டான். ஓர்னிகோல்ட் தான் கைப்பற்றிய கப்பல் ஒன்றுக்குத் தளபதியாக பிளாக்பியர்டை நியமித்தான். இருவரும் பல கடற்கொள்ளைகளில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு கப்பல்களைச் சேர்த்துக்கொண்டதன் மூலம் அவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இவற்றுள் ஒன்று இசுட்டீட் பொனெட் என்பவனின் தலைமையில் இயங்கியது. 1717 ஆம் ஆண்டின் இறுதியில் ஓர்னிகோல்ட் கடற்கொள்ளை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டபோது இரண்டு கப்பல்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
டீச் பிரெஞ்சு வணிகக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றி அதை "அரசி ஆனின் பழிவாங்கல்" எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டு 40 சுடுகலன்களையும் அதில் பொருத்தினான். பெயர் பெற்ற கடற் கொள்ளையனான அவனது பட்டப் பெயர் அவனது அடர்த்தியான, பயமூட்டக்கூடிய கருமையான தாடியால் ஏற்பட்டது. அவன் கடற் கொள்ளையர்களின் கூட்டணி ஒன்றை உருவாக்கிக்கொண்டு தென் கரோலினாவின் சார்லசு டவுன் துறைமுகத்தைச் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். தனது கூட்டாளியான பொனெட்டுடனான கூட்டை முறித்துக்கொண்ட அவன், அரச பொதுமன்னிப்பை ஏற்றுக்கொண்டு பாத் டவுணில் குடியேறினான். ஆனால், விரைவிலேயே அவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான். வெர்சீனியாவின் ஆளுனரான அலெக்சாந்தர் இசுப்பொட்சுவூட் அவனைப் பிடிப்பதற்குப் படை வீரர்களையும் மாலுமிகளையும் கொண்ட குழுவொன்றை அமைத்தார். பலத்த சண்டை ஒன்றுக்குப் பின்னர் 1718 நவம்பர் 22 ஆம் தேதி, பிளாக்பியர்ட் பிடிபட்டான். பிளாக்பியர்டும் அவனது குழுவினரில் பலரும் ராபர்ட் மேனார்ட் என்பவரின் தலைமையிலான சிறிய படை ஒன்றினால் கொல்லப்பட்டனர்.
தந்திரமானவனும் எதையும் திட்டமிட்டுச் செய்யக்கூடியவனுமான ஒரு தலைவனாக இருந்த பிளாக்பியர்ட், பலத்தைப் பயன்படுத்துவதில் அதிக அக்கறை கொள்ளவில்லை. பதிலாக, அவனது பயங்கரமான தோற்றத்தைப் பயன்படுத்தி அவனிடம் பிடிபட்டவர்களிடம் இருந்து தான் விரும்பியதை அடையக்கூடியவனாக இருந்தான். முற்காலத்துக் கொடூரமான கடற்கொள்ளையர் தொடர்பில் நாம் கொண்டிருக்கும் மனப்பிம்பங்களுக்கு மாறாக, தனது குழுவினரின் விருப்பத்துக்கு அமைவாகவே கப்பல்களை அவன் நடத்திச் சென்றான். அவனிடம் பிடிபட்டவர்களைக் கொலை செய்ததாகவோ அல்லது உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியதாகவோ தகவல்கள் இல்லை. பிளாக்பியர்டின் இறப்பின் பின்னர் அவனை அடிப்படையாகக் கொண்டு பல வகையான கற்பனை ஆக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடக்க காலம்
[தொகு]இவனது வாழ்வின் தொடக்க காலம் பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இறக்கும்போது இவனுக்கு வயது 35க்கும் 40க்கும் இடையில் இருக்கக்கூடும் எனவும், அதனால் இவன் 1680 அளவில் பிறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.[1][2] இவனது சமகால ஆவணங்களில் இவன் பொதுவாக பிளாக்பியர்ட், எட்வார்ட் தட்ச், எட்வார்ட் டீச் ஆகிய பியர்களால் குறிப்பிடப்படுகிறான். இவற்றுள் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு பழைய மூலம் இவனது குடும்பப் பெயர் "ட்ருமொண்ட்" என்கிறது. ஆனாலும், இதற்கு வேறு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை. தமது குடும்பப் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்காகப் பெரும்பாலும் கடற்கொள்ளையர்கள் தமது உண்மையான குடும்பப் பெயரைப் பயன்படுத்தாதுகற்பனைப் பெயர்களையே பய்ன்படுத்துவர். இதனால் பிளாக்பியர்டின் உண்மைப் பெயர் தெரிய வருவதற்குச் சாத்தியங்கள் இல்லை.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Perry 2006, ப. 14
- ↑ Konstam 2007, ப. 10–12
- ↑ Lee 1974, ப. 3–4
- ↑ Wood, Peter H (2004), "Teach, Edward (Blackbeard) (d. 1718)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, பார்க்கப்பட்ட நாள் 9 June 2009
{{citation}}
: Unknown parameter|subscription=
ignored (help)
உசாத்துணைகள்
[தொகு]- Konstam, Angus (2007), Blackbeard: America's Most Notorious Pirate, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-12821-6
- Lee, Robert E. (1974), Blackbeard the Pirate (2002 ed.), North Carolina: John F. Blair, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89587-032-0
- Perry, Dan (2006), Blackbeard: The Real Pirate of the Caribbean, Thunder's Mouth Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56025-885-3