பிலிப்பீன் அகழி
பிலிப்பீன் அகழி ( Philippine Trench) என்பது பிலிப்பீன்சுக்கு கிழக்கில் உள்ள ஒரு கடலடி அகழியாகும். இவ்வகழி பிலிப்பீன் ஆழம், மிண்டானௌ அகழி மற்றும் மிண்டானௌ ஆழம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
பிலிப்பீன்சிலுள்ள மிகப்பெரிய தீவான லூசோனின் மத்தியப்பகுதியில் தொடங்கி, தென் கிழக்காக இந்தோனேசியாவின் மலுக்குத் தீவுகளுக்கு வடக்கில் உள்ள ஆல்மயெரா தீவு வரை நீண்டிருக்கும் பிலிப்பீன் அகழி தோராயமாக 1320 கி.மீ (820 மைல்) நீளம் மற்றும் 30 கி.மீ அகலம் (19 மைல்) கொண்டதாக உள்ளது.
பிலிப்பீன் அகழியின் ஆழமான பகுதி காலாத்தியா ஆழம் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆழம் 34,580 அடிகள் அல்லது 5760 பாதோம் ஆகும். உலகத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்ற ஆழமாகும்.
பிலிப்பீன் அகழிக்கு வடக்கில் சட்டென கிழக்கு லூசோன் அகழி காணப்படுகிறது[1]. இவை இரண்டும் பிலிப்பீன் கடல் தட்டின் மேலுள்ள பென்னாம் பீடபூமியால் தடுக்கப்பட்டும் பிரிக்கப்பட்டும் தனித்தனியாக உள்ளன.
புவிமேலோட்டுத் தட்டுகள் மோதலின் விளைவாகவே பிலிப்பீன் அகழி தோன்றியிருக்கலாம். பிலிப்பீன் கடல் தட்டு, பிலிப்பீன் நகரும் திட்டுகளுக்கு அடியில் ஆண்டுக்கு 16 செ.மீ என்ற அளவில் மேலும் கடலுக்குள் அமிழ்ந்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Deschamps; Lallemand (2003). Intra-Oceanic Subduction Systems: Tectonic and Magmatic Processes. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86239-147-5.