பிரேமா (கன்னட நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேமா
பிறப்புநெரவந்தா செட்டிச்சா பிரேமா
6 சனவரி 1977 (1977-01-06) (அகவை 47)
பெங்களூர், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–2009
2017– தற்போது வரை

பிரேமா (Prema) (1977 சனவரி 6) நெரவந்தா செட்டிச்சா பிரேமா இந்தியாவைச் சேர்ந்த நடிகையாவார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களைத் தவிர ஏராளமான கன்னடப் படங்களில் முன்னணி நடிகையாக பணியாற்றியுள்ளார். இவர் வணிக ரீதியாக வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார். சிறந்த கன்னட கதாநாயகியான இவர் கன்னட படங்களில் நடித்ததற்காக கர்நாடக மாநில திரைப்பட விருது, பிலிம்பேர் சிறந்த நடிகை போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். ஓம், யஜமானா போன்ற பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படங்களில் நடித்தார். இவர் கன்னடத்தில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தெலுங்கில் 28க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர், விஷ்ணுவர்தன், சிவ ராஜ்குமார், வீ. ரவிச்சந்திரன், உபேந்திரா, சாய்குமார், ரமேஷ் அரவிந்த், மோகன்லால், விக்ரம், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, மோகன் பாபு போன்ற பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், பல புதிய நடிகர்களுக்கு இணையாகவும் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பிரேமா, 1977 சனவரி 6 அன்று பெங்களூரில் உள்ள இராணுவ மருத்துவமனையில், செட்டிச்சா மற்றும் காவேரிக்கு பிறந்தார். இவர், மகிலா சேவா சமாஜம் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரிக்கு முன்னதான கல்வியை குடகு மாவட்டத்தின் முரநாடு இளையோர் கல்லூரியில் படித்தார். ஒரு மாணவராக இவர் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தேசிய அளவில் உயரம் தாண்டுதல், கைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் தனது பள்ளியையும் கல்லூரியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் கர்நாடகாவை பிரதிநிதித்துவப்படுத்திய துடுப்பாட்ட வீரர் நெரவந்தா ஐயப்பா இவரது தம்பியாவார். இவரது தங்கை இந்து துபாயில் வசிக்கிறார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

பிரேமா, 1995ஆம் ஆண்டில் நடிகர் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமாருடன் சவ்வியாசாச்சி என்ற படத்திலும், ராகவேந்திர ராஜ்குமாருடன் ஆட்டா ஹுடுகாதா என்ற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் வணிக ரீதியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், உபேந்திரா இயக்கி சிவராஜ்குமாருடன் நடித்த ஓம் என்ற படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டது. இந்த படம் ஒரு பெரிய வெற்றியாக மாறியதுடன், சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில விருதையும் இவருக்குப் பெற்றுத் தந்தது.

1996 ஆம் ஆண்டில் சுனில்குமார் தேசாய் இயக்கிய நம்மூரா மந்தாரா ஹூவே என்ற படத்தில் சிவ ராஜ்குமார் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதே ஆண்டில், இவர் மலையாளம், தெலுங்குத் திரைப்படத் துறையில் நடிக்க ஆரம்பித்தார். மோகன்லால் ஜோடியாக தி பிரின்ஸ் படத்தில் இவரது மலையாள அறிமுகம் இருந்தது. தர்ம சக்கரம் இவரது தெலுங்கு அறிமுகப் படமாகும்.

1999 ஆம் ஆண்டில் இவர் சந்திரமுகி பிரணசாகி, உபேந்திரா, வி.ரவிச்சந்திரனுடன் நானு நன்னா ஹெந்திரு போன்ற கன்னடப் படங்களில் நடித்தார். தெலுங்கில் இவர் நடித்த தேவி என்ற படம் திரையரங்கில் 18 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் பாலிவுட்டிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இவர் நடித்த ஆறு படங்கள் வெளிவந்தன. அதில் விஷ்ணுவர்தனுக்கு இணையாக யஜமானா என்ற படம் ஒரு பெரிய வெற்றி பெற்றது

2001 ஆம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற தமிழ்த் திரைபடத்தின் மறு ஆக்கமான கானசுகரா 2001 ஆம் ஆண்டு வெளியானது இது இவருக்கு பிலிம்பேர் விருதுகளில் மீண்டும் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுத் தந்தது. பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் இவர், பிரபலமான பாடகியாக மாறும் ஒரு எளிய பெண்ணின் சித்தரிப்புக்காக விருதினை வென்றார்.

2002 ஆம் ஆண்டில் விஷ்ணுவர்தன், ரோஜா செல்வமணி ஆகியோர் இணைந்து நடித்த சுனில் குமார் தேசாயின் இயக்கத்தில் வெளிவந்த இசைப் படமான பர்வா இவரது முக்கிய வெளியீடாக இருந்தது. 2003 ஆம் ஆண்டில், வெளியான சிங்காரவ்வா என்ற படத்தில் இவரது சிக்கலான பாத்திரத்திற்காக விமர்சகர்களால் பாராட்டப்பட்டார். 2004 ஆம் ஆண்டில், இயக்குநர் பி. வாசுவின் மணிச்சித்ரதாழ் என்ற மலையாளத் திரைபடத்தின் மறு ஆக்கமான ஆப்தமித்ரா என்ற படத்தில் இவர் ஒரு முன்னணி வேடத்தில் நடித்தார்.

இவர், யஜமானா, ஆப்தமித்ரா, ஜமீந்தாரு, ஷனா ஷனா, ஏகாந்தா, பர்வா எல்லரனதல்லா நன்னா கன்டா போன்ற ஏழு படங்களில் நடிகர் விஷ்ணுவர்தனுடன் நடித்துள்ளார்.

திருமணம்[தொகு]

பிரேமா ஜீவன் அப்பாச்சு என்பவரை மணந்தார். ஆனால் தற்போது தம்பதிகள் விவாகரத்து கோரியுள்ளனர். [2] [3] 2006 ஆம் ஆண்டில் திருமணத்திற்குப் பிறகு, பிரேமா தனது திரைப்பட பணிகளை குறைத்துக் கொண்டார். 2009இல் இவரது கடைசி வெளியீடாக ஷிஷிரா இருந்தது. ஆனாலும், 2017ஆம் ஆண்டில் இவர் உபேந்திர மட்டே பா என்ற படத்தில் மீண்டும் தோன்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lasrado, Richard. "Madikeri: Keen on a Silver-screen Comeback, Talented Prema Trashes Rumours of Illness". mangalorean.com. Archived from the original on 26 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Actress Prema files for divorce". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  3. "Kannada actress Prema files for divorce". International Business Times, India Edition (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமா_(கன்னட_நடிகை)&oldid=3719751" இலிருந்து மீள்விக்கப்பட்டது