பிரித்தனின் கோர்தெலியா
இராணி கோர்தெலியா (Queen Cordelia) என்பவர் மோன்மவுத்தின் ஜெப்ரி என்ற வரலாற்று ஆசிரியர் விவரித்தபடி, பிரித்தானியர்களில் புகழ்பெற்ற இராணி ஆவார். இவர் இலியர் அரசனின் இளைய மகளாகவும், உரோமானியத்திற்கு முந்தைய பிரித்தனின் இரண்டாவது ஆளும் இராணியுமாவார். இவர் இருந்ததற்கு சுயாதீனமான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை. கோர்தெலியா என்பது பெண்ணியத்தால் கொடுக்கப்பட்ட பெயராகும். இந்தப் பெயர் நிச்சயமற்ற தோற்றம் கொண்டது. இது இலத்தீன் மொழியில் "இதயம்" என்பதுடன் பிரபலமாக தொடர்புடையது, மேலும் வேல்சின் பெயரான கிரெய்டிலாடுனும் இணைக்கப்பட்டுள்ளது. இது "கடலின் நகை" எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது பிரெஞ்சு மொழியில் 'கோயூர் டி லயன்' ("சிங்கத்தின் இதயம்") என்பதிலிருந்து வந்திருக்கலாம்.[1] பொய்கள், வஞ்சகம் மற்றும் பேராசை ஆகியவற்றில் அன்பு, விசுவாசம் மற்றும் மன்னிப்பு எவ்வாறு வெற்றி பெறுகின்றன என்பதும், ஒரு பெண் தான் நேசித்த தந்தைக்கு ஆதரவாக போராடுவதற்கு ஆயுதங்களை எடுத்தது மற்றும் பிரிட்டனின் புகழ்பெற்ற போர்வீரர் பெண்களில் ஒருவரானதும் இது ஒரு கதை.[2]
புராணங்கள்
[தொகு]கோனெரில் மற்றும் இரீகனுக்கு தங்கை என்பதால் கோர்தெலியா மன்னர் இலியருக்கு பிடித்த மகளாவார். இலியர் தனது இராச்சியத்தை தனது மகள்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு பிரிக்க முடிவு செய்தபோது, கோர்தெலியா அவரைப் புகழ்ந்து பேச மறுத்துவிட்டார். அதற்கு இலியர், பிரித்தனில் உள்ள நிலத்தை வழங்க மறுத்து அவளுக்கு திருமணம் செய்து தராமலும் இருந்து விட்டார். இதை பொருட்படுத்தாமல், பிராங்க்சு நாட்டின் அரசனான அகனிப்பசு கோர்தெலியாவை நேசித்தார். பின்னர், இலியர் திருமணத்த்திற்கு ஒப்பூக்கொண்டார். ஆனால் அவருக்கு வரதட்சணையை தர மறுத்தார். பின்னர், கோர்தெலியா கௌலுக்கு குடிபெயர்ந்து அங்கே பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
இலியர் பிரித்தனில் இருந்து நாடுகடத்தப்பட்டு, தனது மற்ற மகள்களின் கணவர்களால் கைப்பற்றப்பட்ட தனது சிம்மாசனத்தை மீட்டெடுக்கக் கோரி கௌலில் உள்ள கோதெலியாவிடம் தஞ்சம் அடைந்தார். கோதெலியா ஒரு இராணுவத்தை அனுப்பி பிரித்தனை முற்றுகையிட்டு, ஆளும் பிரபுக்களை தோற்கடித்து இலியரின் அரச பதவியை மீட்டெடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலியரின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் அகனிப்பசும் இறந்தார். பின்னர், கோர்தெலியா பிரித்தனுக்குத் திரும்பி இராணியாக முடிசூட்டப்பட்டார்.
கோர்தெலியா தனது சகோதரிகளின் மகன்களான குனேதேசியசு மற்றும் மார்கனசு ஆகிய இருவருக்கும் உரிய வயது வரும் வரை ஐந்து ஆண்டுகள் அமைதியாக ஆட்சி செய்தார். கார்ன்வால் மற்றும் அல்பானி பகுதிகளின் பிரபுக்கள், ஒரு பெண்ணான இவரது ஆட்சியை வெறுத்தனர். அவர்கள் கோர்தெலியாவுக்கு எதிராக படையெடுத்தனர். பல போர்களில் கோர்தெலியா தானே நேரடியாக அவர்களுக்கு எதிராக போராடினார். பின்னர், தனது மருமகன்களால் தோற்கடிக்கபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் வருத்தமுற்ற கோர்தெலியா தற்கொலை செய்து கொண்டார். அம்பரின் தென்மேற்கே உள்ள நாடுகளில் பிரித்தனின் அரசாட்சியில் குனேதேசியசு இவளுக்குப் பின் வந்தான். மார்கனசு அம்பரின் வடகிழக்கு பகுதியை ஆட்சி செய்தன். விரைவில் அவர்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. மார்கனசு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
கலாச்சாரத்தில்
[தொகு]இந்த கதையை வில்லியம் சேக்சுபியர் தனது கிங் இலியர் என்ற நாடகத்தில் பயன்படுத்தினார். சேக்சுபியரின் பதிப்பில், கோர்தெலியாவின் பிரித்தன் மீதான படையெடுப்பு தோல்வியுறுகிறது; அவள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறாள். கோர்தெலியா அவளுடைய தந்தையின் சிம்மாசனத்தை திரும்பப் பெறவில்லை. தந்தையை உண்மையாக நேசித்த மகள் கோர்தெலியா தூக்கிலிடப்பட்டபோது, கிங் லியர் தானே துக்கத்தால் இறந்துவிடுகிறார். சேக்சுபியருக்கு முன்பு, இந்த கதை எட்மண்ட் எசுபென்சர் என்பவரின் காவியமான தி பீரி குயின் மற்றும் அநாமதேய நாடகமான கிங் இலியர் என்பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் கோர்தெலியாவின் புகழ் அநேகமாக ஒரு வீரமிக்க இராணியாக இவரது பாத்திரம் முதலாம் எலிசபெத் மகாராணியுடன் ஒப்பிடத்தக்கது.[3]