பிரிட்டனியர் (பழங்காலம்)

.
பிரிட்டனியர் அல்லது பிரிட்டன்கள் எனப்படுவோர் பெரிய பிரித்தானியாவில் பிரித்தானிய இரும்புக் காலத்தில் இருந்து நடுக்காலத்தின் தொடக்கப் பகுதி வரை பண்பாட்டு அடிப்படையில் ஆதிக்கம் செலுத்திய செல்ட்டிய மக்கள் ஆவர்.[1] இவர்கள், பிரித்தோனிய மொழி எனப்படும் தீவுசார் செல்ட்டிய மொழியைப் பேசினர். இவர்கள் பர்த் ஆற்றுக் கழிமுகத்துக்குத் தெற்கே பிரித்தானியா முழுவதும் பரந்து வாழ்ந்தனர். 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கண்ட ஐரோப்பாவுக்கும் இடம்பெயர்ந்தனர். அங்கே பிரான்சில் உள்ள பிரிட்டனி என்னும் குடியேற்றத்தையும், எசுப்பெயினில் தற்போது கலிசியா என அழைக்கப்படும் முந்தைய பிரிட்டோனியா என்னும் குடியேற்றத்தையும் நிறுவினர்.[1] போர்த் ஆற்றுக்கு வடக்கே வாழ்ந்த பிக்டியர்களுடனான பிரிட்டனியர்களுடைய தொடர்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அக் காலத்தில் பிக்டிய மொழி ஒரு வகையான பிரித்தோனிய மொழி என்பதே பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தாக உள்ளது.
இரும்புக் காலத்தைச் சேர்ந்த மூலங்களிலேயே முதன் முதலாக பிரிட்டனியர் பற்றியும் அவர்கள் பேசிய பிரித்தோனிய மொழி பற்றியும் சான்றுகள் கிடைக்கின்றன. பிரித்தானியாவை கிபி 43ல் ரோமர்கள் கைப்பற்றிய பின்னர் ரோம-பிரித்தானியப் பண்பாடு ஒன்று உருவாகத் தொடங்கியது. எனினும், 5 ஆம் நூற்றாண்டில் ஆங்கில-சக்சன் குடியேற்றங்கள் உருவான போது பிரிட்டனியர்களின் பண்பாடும் மொழியும் பலவறாகப் பிரிவுற்றன. 11 ஆம் நூற்றாண்டளவில், இவர்களுடைய வழியினர் வெல்சியர், கோர்னிசியர், பிரெட்டனியர், என் ஆக்லெட்டுகள் எனப் பல தனித்தனியான குழுக்கள் ஆகக் காணப்பட்டனர். பிரித்தோனிய மொழியும் வெல்சிய மொழி, கோர்னிசிய மொழி, பிரெட்டனிய மொழி, கும்பிரிக்கு மொழி எனப் பல்வேறு தனித்தனிக் கிளைகளாகப் பிரிந்து விட்டது.[1]
குறிப்புகள்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- பிபிசி - வரலாறு - பிரித்தானியாவின் தாயக மக்கள் (ஆங்கில மொழியில்)
- பிரிட்டனிய இனத்தவரின் டி.என்.ஏ அயர்லாந்தில் கண்டுபிடிக்கப்பிடிப்பு (ஆங்கில மொழியில்)