உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்டனின் பரோயே தீவுகள் ஆக்கிரமிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிரித்தானிய ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியப் படைகளுக்கும் பரோயே மக்களுமிடையே நிலவிய நல்லுறவை சித்தரிக்கும் அஞ்சல் தலை

இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் உள்ள பரோயே தீவுகள் பிரித்தானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இவ்வாக்கிரமிப்பு நிகழ்வு வாலண்டைன் நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் 9, 1940 அன்று நாசி ஜெர்மனி டென்மார்க் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியது. டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட பரோயே தீவுகள் ஜெர்மானியர்கள் கட்டுப்பாட்டில் வருவதைத் தவிர்க்க பிரித்தானியப் படைகள் அதனை ஆக்கிரமிக்க முடிவு செய்தன. ஏப்ரல் 11ம் தேதி பிரித்தானியப நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஜெர்மானியர்களின் பிடியில் பரோயே தீவுகள் சிக்காமல் இருக்கவே அதனை ஆக்கிரமிப்பதாக காரணம் சொன்னார். மேலும், போர் முடிந்து, டென்மார்க் நார் ஜெர்மனியிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பரோயே தீவுகள் மீண்டும் டென்மார்க் வசம் ஒப்படைக்கப்படுமென்று உறுதி கூறினார். நிகழப்போகும் படையெடுப்பு குறித்து பரோயே மக்களுக்கும் பிபிசி வானொலி மூலம் முன்னறிவுப்பு தரப்பட்டது.

பரோயே தீவுகளின் இருப்பிடம்

ஏப்ரல் 12ம் தேதி இரு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்கள் பரோயே தலைநகர் தூர்ஷானின் துறைமுகத்தை அடைந்தன. இது குறித்து விவாதித்த பரோயே நாடாளுமன்றம், பிரித்தானியர்களுக்கு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்தது. மறுநாள் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகள் தூர்ஷானை அடைந்தன. பரோயே தீவுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லையென பரோயே ஆட்சியாளர்களுக்கு உறுதியளித்த பிரித்தானியத் தளபதிகள், படைகளைத் தூர்ஷானில் தரையிறக்கினர். பிரித்தனின் பரோயே ஆக்கிரமிப்பு அமைதியாக இருந்தது. பரோயே நாடாளுமன்றத்துக்கு முழு சட்டமியற்றும் உரிமைகள் வழங்கப்பட்டன. உள்நாட்டு விசயங்களில் பிரித்தானியப் படைகள் தலையிடாததால், அவர்களுக்கும் பரோயே மக்களுமிடையே நல்லுறவு நீடித்தது. போர்க்காலத்தில் ஒரு சில முறை மட்டுமே ஜெர்மானிய வான்படையால் பரோயே தீவுகள் தாக்கப்பட்டன. போர் முடிந்தபின்னர், பிரித்தானியப் படைகள் பரோயே தீவுகளைக் காலி செய்தன. டென்மார்க்குடன் மீண்டும் இணைவதா அல்லது சுதந்திர நாடாக இருப்பதா என்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக டென்மார்க்கின் ஆளுகையின் கீழ் தொடர்வது, ஆனால் முழு தன்னாட்சியுடன் செயல்படுவது என பரோயே மக்கள் முடிவெடுத்தனர்.