பிரான்சுவா மன்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்சுவா மன்சா (François Mansart, 23 சனவரி 1598 - 23 செப்டெம்பர் 1666) என்பவர் ஒரு பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞர். இவரே பிரான்சின் பரோக் கட்டிடக்கலையில் செந்நெறியியத்தை அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார். உயர் தரமான மெருகு, நயம், நேர்த்தி என்பவை பொருந்திய ஆக்கங்களை உருவாக்கிய இவரே 17 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞர் எனப் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

இவரைப் பொதுவாக மன்சா எனவே அழைத்தனர். கட்டிடங்களில் இரண்டு வெவ்வேறு சரிவுகளைக் கொண்ட, நாற்புறம் சரிந்த கூரைகளை இவர் பயன்படுத்தினார். கூடிய சரிவு கொண்ட கூரைப் பகுதியில் சாளரங்களை அமைத்து, உயரமான கூரைப் பகுதிக்குக் கீழ், மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்த இடவசதிகளை உருவாக்கினார். இவ்வாறான கூரைகள் பின்னர் இவரது பெயரில், மன்சார்ட் கூரை (mansard roof) எனப் பெயர்பெற்றது.

வாழ்க்கை[தொகு]

இவரது தந்தையார் பாரிசில் தலைமைத் தச்சராகப் பணிபுரிந்தார். இவர் ஒரு கட்டிடக்கலைஞராகப் பயிற்சி பெற்றவர் அல்ல. இவர் ஒரு கற்கொத்தனாராகவும், சிற்பியாகவும் பயிற்சிபெற இவரது உறவினர்கள் உதவினர். நான்காம் என்றியின் ஆட்சிக் காலத்தில் மிகப் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞராக விளங்கிய சலோமோன் டி புரோசு என்பவரின் கலைக்கூடத்திலேயே இவர் கட்டிடக்கலை தொடர்பான திறன்களைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படுகின்றது.

1620களில் இருந்து, ஒரு கட்டிடக்கலைஞராக இவரது திறமைக்காகவும், பாணிக்காகவும் இவர் பெரும் புகழ்பெற்று விளங்கினார். ஆனாலும், இவர் ஒரு பிடிவாதக்காரராகவும், கடும் செம்மைவாதியாகவும் மக்கள் இவரைப் பார்த்தனர். தான் விரும்பியபடி அமையாவிட்டால் கட்டிய கட்டிடங்களை இடித்துத் திரும்பவும் கட்டுபவர் எனக் கூறுகின்றனர். மன்சாவைப் பணிக்கமர்த்திக் கட்டிடங்களை அமைப்பது பெரும் செலவு பிடிக்கக்கூடியது என்பதால். பெரும் பணக்காரர்கள் மட்டுமே இவரைக் கொண்டு கட்டிடங்களை அமைப்பிக்கக் கூடியதாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சுவா_மன்சா&oldid=2844761" இருந்து மீள்விக்கப்பட்டது