பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், புவனேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்திய இயற்கை வரலாற்று பிராந்திய அருங்காட்சியகம், புவனேஸ்வர்

பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Regional Museum of Natural History, Bhubaneswar) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில், இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் காணப்படுகின்ற தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியியல் சார்பான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புவனேஸ்வரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 2004 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. [1] இதை இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மேற்கொண்டது. இந்த அருங்காட்சியகம் புவனேஸ்வரில் உள்ள சச்சிவாலயா மார்க் என்னும் இடத்தில் ஆச்சார்யா விஹார் சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

காட்சிப்பொருள்கள்[தொகு]

தேசிய அளவிலான நிறுவனம் என்ற முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில், தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராந்திய மாநில அளவிலும், பிராந்திய அளவிலும் அலுவலகங்களை அமைக்கவேண்டும் என்று ஏழாம் திட்டத்தில் அரசு முடிவெடுத்ததன் அடிப்படையிலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வினைக் கொணரும் வகையிலும் அமைக்க முடிவெடுத்ததன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. கலை ரசனையோடு அமைக்கப்பட்ட அருங்காட்சியகக் கட்டடம் மற்றும் அது அமைந்தள்ள இடம் இயற்கைப் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூலைப் பாதுகாப்பதையும் உணர்த்துகின்ற எண்ணத்தைக் கொண்டனவாக அமைந்துள்ளன. விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிய பல அரிய உண்மைகளை நேருக்கு நேர் புரிந்துகொள்ளும் வகையிலான சூழலை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்குத் தருகிறது. [2] இந்த அருங்காட்சியகத்தில் ஒடிசா, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியியல் சார்ந்த கூறுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காட்சிக்கூடங்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் தொடர்பை சித்தரிப்பதை மட்டுமன்றி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. பார்வைத் திறன் குன்றிய மாணவர்கள் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலங்குகளின் கண்காட்சியை உணரும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பள்ளிகளுக்கு செயல்பாட்டு நிலையிலான நடவடிக்கைகளை வழங்குகிறது மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் உள்ள அருங்காட்சியகத்திலேயே மிகப்பெரியதாக கருதப்படும் பலீன் திமிங்கிலத்தின் எலும்புக்கூடு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மே, 2017 ஆம் ஆண்டு முதல், இந்த அருங்காட்சியகம் சூரிய மின்சக்தி உற்பத்தி இருந்த போதிலும் பசுமை ஆற்றலை உருவாக்கி பயன்படுத்திய இந்தியாவின் முதல் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பினைப் பெறுகிறது. இந்த கட்டடத்தில் இணைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் மாதத்திற்கு 189 KvA மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டு அமைந்ததாகும். இவ்வாறான மிகப்பெரிய கூரை சூரிய மின் நிலையத்தைக் கொண்ட அமைப்பு ஒடிசாவில் இங்குதான் மிகவும் உர்ந்த இடத்தில் கூரையினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், புவனேஸ்வர் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அவ்வாறே புவனேஸ்வர் ஆகாய விமான நிலையத்திற்கு அருகே உள்ளது. பேருந்தில் வருவோர் ஆச்சார்யா விஹாரில் இறங்கி இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்ல முடியும். மகிழ்வுந்து, சிற்றுந்து வசதிகளையும் பயன்படுத்தி இந்த அருங்காட்சியகத்தை அடையலாம். [3] காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். [4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Regional Museum of Natural History, Bhubaneswar". National Museum of Natural History, Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
  2. National Museum of Natural History
  3. Odisha Tourism Development Corporation Ltd, Regional Museum of Natural History
  4. Trip Advisor, Regional Museum of Natural History

வெளி இணைப்புகள்[தொகு]