பிரவிணா மேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவிணா மேதா
மற்ற இரண்டு கட்டிடக் கலைஞர்களுடன் நவி மும்பை நகர்ப்புறத் திட்டமிடலின் பிரவீனா மேத்தாவின் குறிப்பிடத்தக்க வேலை

பிரவிணா மேதா (Pravina Mehta) என்பவர் மும்பையைச் சேர்ந்த முன்னணி இந்திய கட்டிடக்கலை நிபுணரும் திட்ட வரைவாளரும், மற்றும் ஒரு அரசியல் ஆர்வலரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் போது, அவர் சுதந்திர போராட்ட வீரரான சரோஜினி நாயுடுவினால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானியாவின் இந்திய அரசினை எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.[1] பின்னர், இவர் ஜே. ஜே கட்டிடக்கலைக் கல்லூரியல் கட்டிடக்கலை படிப்பினைப் படிப்பதற்காக சேர்ந்தார். 1964 ஆம் ஆண்டில் சார்லஸ் கொரியா மற்றும் ஷிரிஷ் பட்டேலுடன் இணைந்து நவி மும்பை திட்டத்தின் கருத்துருவாக்கம் மற்றும் முன்மொழிவு தயாரிப்பில் இவர் ஈடுபட்டார். இந்தத் திட்ட முன்மொழிவு நகரின் முதன்மை நிலப்பகுதியோடு இதன் கிழக்கே இருந்த தீவு நகரையும் இணைத்து விரிவாக்குவதை உள்ளடக்கிய திட்டமாகும்.[1] இந்த திட்டம் பம்பாய் கலை மற்றும் கட்டிடக்கலை இதழான மார்க்கில் வெளியிடப்பட்டது.[2] இவர், மினெட் த சில்வா மற்றும் யாஸ்மீன் லாரி ஆகியோருடன் சேர்ந்து, குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் மேம்பாட்டிலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விலும், குறைந்த விலை வீடுகளை உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழல் அம்சங்கள் உடன் நகர்ப்புறத் திட்டமிடும் குழுவினருடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டார். [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மேதா 1940 களில் சர் ஜேஜே கட்டிடக்கலை கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டியதால் தனது கல்வியை இடையில் நிறுத்தினார், பின்னர் கட்டிடக்கலை படிப்பை தொடர அமெரிக்கா சென்றார். விடுதலை இயக்கப் போராட்டங்களின் போது இவர் சிறைவாசம் கூட அனுபவித்தார். அமெரிக்காவிற்கு புறப்பட்டு, இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனில் கல்வி கற்றார், அங்கு இவர் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது கல்விக்குப் பிறகு, வாஷிங்டனில் [4] இரண்டு வருடங்கள் பயிற்சி மேற்கோண்டார். இவர் கட்டிடக்கலைத் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடர 1956 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார்.[5]

தொழில்முறை வாழ்க்கை[தொகு]

மேத்தா வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் வடிவமைப்பில் ஈடுபட்டார். ஆனால், இவருடைய கட்டமைப்புகள் தற்போது இல்லை. இவரது திட்டங்களில், அவர் அமெரிக்காவில் தனது படிப்பின் போது கட்டியமைக்கப்பட்ட கட்டடக்கலை வடிவமைப்புகளின் நவீன நடைமுறைகளை ஒரு சுதந்திரமான மற்றும் "எழுச்சி பெற்ற இந்தியாவிற்கு" ஏற்றுக்கொண்டார்.[1] அத்தகைய ஒரு நவீன தழுவலானது, படிக்கட்டுகளில் கலைநுட்பத்தைக் கொண்டு வர செம்மணற்கல்லைப் பயன்படுத்தியதாகும்.[5] இவரின் மாணவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, கட்டிடக் கலையின் அழகை, கட்டிடக்கலையில் ஒவ்வொரு பகுதியையும் இரசிக்கும் போது நாட்டியக்கலையின் அம்சங்களை இரசிப்பது போன்று இரசிக்க வேண்டும் என்று தங்களிடம் கூறியதாகக் கூறியுள்ளார்.

இவர் பம்பாய் நகரில் ஒரு ஆராய்ச்சி பிரிவுக்கு தலைமை தாங்கினார். பம்பாயில் மக்கள் தொகை பல சமூகங்களாக இருந்தது அந்நாளைய பம்பாயில் இருந்த சமூக-பொருளாதார பிரச்சினைகள் சிக்கலானவை. ஆராய்ச்சி பிரிவின் பணியானது நகரத்தின் பன்முகத்தன்மையைப் படித்தறிந்து கொண்டு, அதன் சமூக-கலாச்சார வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதோடு, வீட்டுத்திட்டம், சுகாதாரம், நீர் வழங்கல் மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்ய உகந்த நகரத் திட்டங்களை உருவாக்குவதாகும். கட்டிடக்கலை மற்றும் பிற கலை வடிவங்களுக்கிடையே ஒரு இணைப்பை நிறுவுவதையும் இவர் நோக்கமாகக் கொண்டிருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Woods, Mary N. "The Legacies of Architect Pravina Mehta for Feminism and Indian Modernity". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 16 September 2015.
  2. Prakash 2013.
  3. Smith 2008.
  4. 4.0 4.1 "Pravina Mehta" (PDF). Archnet Organization. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Building Blocks". http://www.mumbaimirror.com/others/sunday-read/Building-blocks/articleshow/15816295.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவிணா_மேதா&oldid=3765832" இலிருந்து மீள்விக்கப்பட்டது