பிரம்ம சூத்திர விளக்க உரை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரம்ம சூத்திர விளக்க உரை (நூல்)
பிரம்ம சூத்திர விளக்க உரை நூலின் அட்டைப் படம்
நூலாசிரியர்பாதராயணர்
உண்மையான தலைப்புபிரம்ம சூத்திரம்
மொழிபெயர்ப்பாளர்பி. எஸ். ஆச்சாரியா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைவேதாந்தம்
வெளியீட்டாளர்நர்மதா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை 600017
வெளியிடப்பட்ட நாள்
சனவரி, 2012
பக்கங்கள்400
ISBN81-8201-119-1

பிரம்ம சூத்திர விளக்க உரை (நூல்) பாதராயணர் வட மொழியான சமசுகிருதத்தில் 555 சுலோகங்களுடன் எழுதியதை, ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் மற்றும் பலர் இந்நூலுக்கு சமசுகிருத மொழியில் விளக்க உரை எழுதியுள்ளனர். இவற்றுள் ஆதிசங்கரரின் விளக்க உரைகளே இந்நூலில் அதிகம் கையாளப்பட்டுள்ளது. ஆன்ம அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் இந்நூலை படிப்பது அவசியம்.

தமிழில் இந்நூலை பி. எஸ். ஆச்சார்யா மொழிபெயர்த்து, நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மூல நூலாசிரியரின் காலம்[தொகு]

பிரம்ம சூத்திரத்தின் மூல நூலின் ஆசிரியரான பாதராயணரின் வாழ்ந்த காலம் கி. மு., இரண்டாம் நூற்றாண்டு என கணக்கிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் பிரம்ம சூத்திரம் நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் வருவதால் இது கீதைக்கு முற்பட்டதெனத் தெளிவாகிறது.

நூலின் அமைப்பு[தொகு]

பிரம்ம சூத்திரம் நூல் நான்கு அத்தியாங்களுடன், ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களுடன்; மொத்தம் 187 அதிகரணங்கள் (தலைப்புகள்) மற்றும் 550 சூத்திரங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக 1.1.1 என்றால் முதல் அத்தியாயம், முதல் பாதம், முதல் சூத்திரம் ஆகும். ஆனால் இந்நூலில் 550 சூத்திரங்களுக்கு மட்டுமே விளக்க உரைகள் அமைந்துள்ளது.

 1. . சமன்வய அத்தியாயம் = பிரம்மம் குறித்தான கருத்துக்களை சமன் படுத்துதல்
 2. . அவிரோத அத்தியாயம் = பிரம்மம் குறித்தான எதிர்வாதிகளின் கருத்துக்களை நீக்குதல்.
 3. . சாதனா அத்தியாயம் = பிரம்மத்தை அறிவதற்கான முறைகள்.
 4. . பவா அத்தியாயம் = இதனை அறிவதால் உண்டாகும் சீவ முக்தி மற்றும் விதேக முக்தி எனும் பலன்கள்

நூலின் சிறப்பு[தொகு]

 • சூத்திரம் என்றாலே சுருங்கக் கூறுவது. மிகப்பெரிய உண்மைகளை மிகச் சில வார்த்தைகளில் சொல்வது.

பிரம்ம சூத்திரம் நூலின் வேறு சிறப்பு பெயர்கள்[தொகு]

பிரம்ம சூத்திரம் எனும் நூலுக்கு வேறு பல சிறப்பு பெயர்களும் உள்ளது.

 1. பிரம்ம வித்தியா (பிரம்மத்தை குறித்த அறிவு).
 2. வேதாந்த சூத்திரம் (வேதம் கூறும் முடிவான முடிவு).
 3. வேதாந்த தரிசனம் (பார்த்தவற்றின் உட்பொருளை அறிதல்).
 4. உத்தர மீமாம்சா சூத்திரம் (ஆழமாக சிந்தித்தல், ஆராய்தல், விவாதித்தல்).
 5. பிட்சு சூத்திரம்
 6. சாரீரக சூத்திரம்

நூலின் உள்ளடக்கம்[தொகு]

பிரம்ம சூத்திரம் விளக்க உரை நூலானது பிரம்மம், பிரபஞ்சம், ஜீவாத்மா, மற்ற சீவராசிகள், மறுபிறவி, மற்றும் முக்தி பற்றி பிரதட்சம் (நேரில் பார்த்து அறிதல்), தர்க்கம், யுக்தி மற்றும் அனுமானம் போன்ற வழிகளில் விஞ்ஞான ரீதியாக விரிவாக ஆராய்கிறது.

இந்நூலின் தமிழ் தொகுப்பாசிரியர், பிரம்ம சூத்திர விளக்க உரைக்கு சங்கரரின் விளக்க உரையையே அதிகமாக கையாண்டுள்ளார். எனவே இந்நூலுக்கு ஆதிசங்கரர் அளித்துள்ள சில விளக்கங்களை காண்போம்.

 • கடவுள், இறைவன், சிவன், நாராயணன், முருகன், சக்தி என்று பெயர்கள் பலவாயினும் அவை யாவும் பிரம்மத்தையே காட்டுகிறது.
 • எது என்றும் உள்ளதோ, ஒளிமயமானதோ, இரண்டற்றதோ, ஞான உருவோ, எல்லையற்ற ஆனந்தமயமானதோ, முழுமையானதோ அதுவே பிரம்மம். பிரம்மம் சத் சித் அனந்தமயமானது (சச்சிதானந்தம்).
 • உலக உயிர்கள் அனைத்துமே பிரம்மத்துடன் தொடர்புடையவை. அந்தத் தொடர்பை அறிய பிரம்மத்தை அறிய வேண்டும். பிரம்மத்தை அறிய பிரம்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம் இன்றியமையாதது.
 • பிரம்மம், உலகைப் படைத்து காக்கும் ஈசுவரன் அல்ல. கடவுளுக்கு நாம் குணங்களைச் சொல்கிறோம். ஆனால் பிரம்மம் குணங்களை கடந்தது; செயல் அற்றது; உருவம் அற்றது.
 • வடிவங்களுடனும், குணங்களுடனும் காட்சி தரும் கடவுள்கள் (சகுணப் பிரம்மம்) இரண்டாம் பட்சமே. அவைகளை நாம் வழிபாட்டிற்கும், நிர்குண பிரம்மத்தை அடையதற்கும் வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.
 • பிரம்ம சூத்திரம் வலியுறுத்தும் கீழ் கண்ட மகா வாக்கியங்களை சங்கரர் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
 1. ‘ஏகமேவ அத்விதீயம்’ (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)
 2. தத்துவமசி - நீ அதுவாக இருக்கிறாய்.
 3. அஹம் பிரம்மாஸ்மி - நானே பிரம்மம்.
 4. சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம் (சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) - பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.
 5. சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்.
 6. ஈசா வாஸ்யம் இதம் சர்வம் - பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.
 7. ’நேதி நேதி’ - (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.
 8. ’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ - பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது. ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]