உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி பிரம்மானந்தர்
சென்னையில் சுவாமி பிரம்மானந்தர் 1908
பிறப்பு(1863-01-21)சனவரி 21, 1863
இறப்பு10 ஏப்ரல் 1922(1922-04-10) (அகவை 59)
உத்போதன், கல்கத்தா.
இயற்பெயர்ராக்கால் சந்திர கோஷ்
குருஸ்ரீராமகிருஷ்ணர்
மேற்கோள்"வெறுமனே ஏதாவதொரு வேலையைச் செய்வது போதாது. எந்த வேலையானாலும் அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும்; சொந்த நோக்கம் எதுவும் இல்லாமல், இறைவனுக்குச் செய்யப்படும் சேவையாகச் செய்ய வேண்டும்..."[1]

சுவாமி பிரம்மானந்தர் (ஜனவரி 21, 1863 - ஏப்ரல் 10 1922) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை காளியிடம், எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கும் பையனை தமக்குத் துணையாக அனுப்பிவைக்கச் சொன்ன பிரார்த்தனைக்குப் பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிகப் புதல்வராக வந்தவர் இவர். இவரது தந்தை ஆனந்த மோகன் கோஷ், தாயார் கைலாஷ் காமினி. இவரது தாயார் கிருஷ்ண பக்தை என்பதால் இடைச்சிறுவன் என்ற பொருளில் ’ராக்கால்’ என்ற பெயரை மகனுக்குச் சூட்டினார்.

இளமைக்காலம்

[தொகு]

சுவாமி பிரம்மானந்தரின் ஐந்தாவது வயதில் அவரது தாயார் பிரசவத்தின்போது இறந்துவிட்டார். இவரையும் பிறந்த மற்ற நான்கு குழந்தைகளையும் நல்லபடி கவனித்துக்கொள்ள, தந்தையார் ஹேமாங்கினி சேன் எனும் பெண்மணியை மறுமணம் செய்துகொண்டார். ராக்கால் சிறுவயதிலிருந்தே பக்திப்பாடல்களைப் பாடுவதில் ஈடுபாடும், தியானம் பழகுவதுமாக இருந்தார்.

கல்கத்தாவிற்கு பள்ளி மேற்படிப்பிற்காகச் சென்று தங்கியபோது உடற்பயிற்சி நிலையத்தில் நரேந்திரரைச் சந்தித்தார். ஒத்தவயதினராகவும், ஆன்மிக ஈடுபாடும் கொண்டிருந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். நரேந்திரரால், பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார்.

மகனது அதிக அளவிலான ஆன்மிக ஈடுபாட்டைக் கண்ட தந்தையார் அவசர அவசரமாக திருமண ஏற்பாட்டைச் செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற பக்தர் மனமோகன் மித்ராவின் சகோதரி விஷ்வேஷ்வரி மித்ரா தான் இவரது துணைவியார். மனமோகன் மித்ரா மூலம் தான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்

[தொகு]

ஸ்ரீராமகிருஷ்ணர் இவரை ஆன்மிக சாதனைகளில் பலவிதங்களில் தயார்படுத்தினார்.ஸ்ரீராமகிருஷ்ணரால் தமது சீடர்களுள் ஈஸ்வரகோடிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட ஆறு சீடர்களுள் ஒருவர் இவர்.[2]

ராக்கால் உருவக்கடவுளை வணங்கும் பிரிவினர். தமது குரு ஸ்ரீராமகிருஷ்ணருடன் கோயிலுக்குப் போகும் போது கடவுளர்களின் திருவுருவங்களை வணங்குவார். பிரம்மசமாஜ விதிமுறைகளுக்கு எதிரான இந்த செயலுக்காக ராக்காலை, நரேந்திரர் கடுமையாக கோபித்தார்.மென்மையான மனப்பான்மை கொண்ட ராக்கால் அதிலிருந்து நரேந்திரரை கண்டால் தவிர்க்க ஆரம்பித்தார். அவரது தர்மசங்கடமான நிலை உணர்ந்து குருதேவர் உதவிக்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர், நரேந்திரரிடம், ராக்காலுக்கு பரிந்து பேசினார்.

ராக்காலுக்கு ராஜாவிற்கு உரிய தகுதிகள் உள்ளன, அவரால் பெரிய ராஜ்ஜியத்தையே ஆளமுடியும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ்ந்து கூறியதைக் கேட்ட நரேந்திரர் இனி அவரை ’ராஜா’ என்று அழைப்போம் என்று கூறினார். அதன்படியே பின்னாளில் சுவாமி பிரம்மானந்தர் ’ராஜா மகராஜ்’ என்றும் ’மஹராஜ்’ என்றும் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் மகா சமாதிக்குப் பின்னர்

[தொகு]

குருதேவரின் மகாசமாதிக்குப் பின்னர், வராக நகரில் சுவாமி பிரம்மானந்தர் என்னும் துறவிப் பெயர் ஏற்று வாழத்துவங்கினார். அங்கே ஜப, தியானங்களில் ஈடுபட்டார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் புனிதப் பயணம் மேற்கொண்டார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாடும் மேல்நாட்டு சுற்றுப் பயணமும் முடிந்து 1897 இல் தாயகம் திரும்பிய போது, சுவாமி பிரம்மானந்தரைப் பார்த்து ’குருவின் மகனை குருவாகவே எண்ணிப் போற்ற வேண்டும்" என்று கூறி வணங்கினார். பதிலுக்கு சுவாமி பிரம்மானந்தர், ’மூத்த சகோதரனைத் தந்தையாக அல்லவா எண்ணி மரியாதை செலுத்த வேண்டும்’ என்று கூறி அவரை வணங்கினார்.

சுவாமி விவேகானந்தர், இவரது செயல்திறன் குறித்து பெரிதும் புகழ்ந்துள்ளார். சுவாமி விவேகானந்தருக்கும் இவருக்கும் நடுவில் உறுதியான பரஸ்பர நம்பிக்கை அடித்தளமாக இருந்தது. ’எல்லோரும் என்னைக் கைவிட்டாலும் ராஜா கடைசிவரை எனக்குத் தோள் கொடுப்பான்’ என்று சுவாமி விவேகானந்தரே குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் மறைவுக்குப் பின்னர் சுவாமி பிரம்மானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அன்னை சாரதா தேவியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

சென்னையில்

[தொகு]
  • 1908 ஆம் வருடம் சுவாமி ராமகிருஷ்ணானந்தர், சுவாமி பிரம்மானந்தரை சென்னைக்கு அழைத்து வந்தார். அப்போது ராமேஸ்வரம், மதுரை, காஞ்சிபுரம் போன்ற கோயில் திருநகரங்களுக்கு சென்று வந்தார்.
  • 1916 ஆம் வருடம் சென்னை வந்த போது சென்னை மயிலாப்பூரில் மடத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மைசூர் சாமுண்டி தேவி ஆலயம், திருவனந்தபுர பத்மனாப சுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், திருப்பதி என்று பல இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
  • சுவாமி சிவானந்தருடன் 1921 ஆம் வருடம் சென்னை வந்தபோது, ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தை ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார்.

உதவி நூல்

[தொகு]
  • கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை

மேற்கோள்கள்

[தொகு]
  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள் 1. ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை. p. 43.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-01. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மானந்தர்&oldid=3563509" இலிருந்து மீள்விக்கப்பட்டது