பிரம்மபுத்திரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரமபுத்திரா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி

பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இவ்வாறு திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது. ஆற்றால் உருவாக்கப்பட்ட தீவுகளில் இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே அசாமில் 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள போகிபல பாலம் 2002ல் திறக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டுக்கு வந்த9.15 கிமீ நீளமும் 12.9 மீ அகலமும் உடைய தோலா-சாதியா பாலம் அசாமையும் அருணாச்ச பிரதேசத்தையும் இணைக்கிறது, இது இந்தியாவின் நீளமான பாலம் ஆகும். அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் இரட்டை அடுக்கு பாலமாகும் கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது, இது 1998இல் திறக்கப்பட்டது.

இதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர் [1]. மழை காலத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இவ்வாறுக்கு அதிகம். சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.

இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.

புவியமைப்பு[தொகு]

ஆற்றின் ஓட்டம்[தொகு]

திபெத்[தொகு]

திபெத்தில் பிரம்ப்புத்திரா (சாங்போ)

பிரம்புத்திரா கைலை மலைக்கு அண்மையிலுள்ள சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக கருதப்படுகிறது. கைலை மலைக்கு சற்று தொலைவிலுள்ள ஆங்சி பனியாற்றில் இருந்து உருவாவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார்.[2]

உற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது.

இந்தியா[தொகு]

அருணாச்சலப் பிரதேசத்தில் இது சிஆங் என அழைக்கப்படுகிறது. திபெத்தில் உயரமான இடத்தில் பயணித்த ஆறு விரைவாக உயரம் இழந்து சமவெளியை அடைகிறது. அந்த சமவெளி டிகாங் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://gradeup.co/the-theory-of-everything-brahmaputra-river-i-5e5762f8-83ea-11e6-b230-7aadc38c326b
  2. "China maps Brahmaputra source, course". Assam Tribune. 24 August 2011. Archived from the original on 2012-07-22. https://web.archive.org/web/20120722144718/http://www.assamtribune.com/aug2411/at096.txt. பார்த்த நாள்: 2011-11-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மபுத்திரா_ஆறு&oldid=2527478" இருந்து மீள்விக்கப்பட்டது