பிரமனூர் கைலாசநாதர் கோவில்

ஆள்கூறுகள்: 9°46′14″N 78°16′34″E / 9.770419°N 78.276089°E / 9.770419; 78.276089
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகைலாசநாதர் கோவில்
ஸ்ரீகைலாசநாதர் கோவில் is located in தமிழ் நாடு
ஸ்ரீகைலாசநாதர் கோவில்
ஸ்ரீகைலாசநாதர் கோவில்
ஆள்கூறுகள்:9°46′14″N 78°16′34″E / 9.770419°N 78.276089°E / 9.770419; 78.276089
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவு:திருப்புவனம், தமிழ்நாடு, இந்தியா
கோயில் தகவல்கள்
உற்சவர்:கைலாசநாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

'பிரமனூர் கைலாசநாதர் கோவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் [1] அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது.

ஊர் சிறப்பு[தொகு]

பிரம்மதேவன் பூலோகம் வந்து கைலாய மலையிலிருந்து இறைவனை ஆராதனை செய்து லிங்கம் கொண்டுவந்து வணங்கி பூசித்தான். தன் திருநாமம் இந்த ஊருக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படக் காரணமாயிற்று.

தல வரலாறு[தொகு]

இறைவன் திருவிளையாடல் பல, அதில் அடிமுடி காணும் படலத்தின் வாயிலாக இறைவனின் சிறு திருவிளையாடல். காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கும், படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்குமிடையே யார் பெரியவன் என்ற போட்டி ஏற்படுகிறது. இதை தீர்த்துவைக்க யாராலும்  முடியவில்லை. அப்போது சிவபெருமான் நெருப்பு மலையாக தோன்றி காட்சி தருகிறார். இருவருக்கும் சர்ச்சை தீரவில்லை. உடனே சிவபெருமான் "யார் ஒருவர் என் சிரசையோ அல்லது பாதத்தையோ விரைவாக தரிசனம் செய்கிறாரோ அவரே பெரியவர் எனக்கூற, காக்கும் கடவுளாகிய விஷ்ணு பன்றி உருவம்பூண்டு பூமியை துளைத்து பாதத்தைப் பார்க்க செல்கிறார். படைக்கும் கடவுள் பிரம்மன் அன்ன வாகனம்பூண்டு ஆகாயம் நோக்கி முடியைக்காணச் செல்கிறார். ஆயினும் அவர்களால் சிவனின் சிரசையோ அல்லது பாதத்தையோ தரிசிக்க முடியவில்லை. பிரம்மதேவன் செல்லும் வழியில் சிவனின் சிரசிலிருந்து விழும் தாழம்பூவைச் சந்திக்க நேர்கிறது. உடனே பிரம்மன் தாழம்பூவிடம் தாம் சிவனின் சிரசைப் பார்த்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். தாழம்பூவும் சம்மதிக்கிறது. அதே சமயம் விஷ்ணுவோ எவ்வளவு முயன்றும் தம்மால் சிவனின் பாதத்தைக் காணமுடியாதது கண்டு தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைகிறார். பிரம்மதேவனோ தனக்கு சாட்சியாக தாழம்பூவை வைத்து சிரசை பார்த்ததாக கூற இறைவன் கோபம் கொண்டு பிரமனுக்கும் தாழம்பூவுக்கும் சாபம் கொடுக்கிறார். எனவே தான் பிரம்மதேவனை மூலவராகக் கொண்டு கோவில்களில் வழிபடும் பழக்கமில்லை.

சாப விமோசனம்[தொகு]

சாபவிமோசனம் வேண்டி நீ என்னை பூலோகம் சென்று வழிபட வேண்டும் எனவும், தாழம்பூ இனி சிவபூஜைக்கு ஆகாது எனவும் சிவபெருமான் கூறுகிறார். பிரம்மதேவன் கைலாயமலை சென்று அம்மை அப்பனை வணங்கி லிங்கம் கொண்டுவந்து வைத்து இத்தலத்தில் ஆராதனை செய்தமையால் இங்குள்ள மூலவர் கைலாசநாதர் எனப்படுகிறார்.

ஆலயச்சிறப்பு[தொகு]

இங்கு இறைவனுக்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது மற்றும் எல்லா விஷேட காலமும் பூஜை நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று தாழ மரத்தை நடுவில் ஊன்றி சொக்கப்பனை ஏற்றுவது இங்கு தனிச்சிறப்பு.

ஊரின் சிறப்புக்கென உள்ள பாடலொன்று உள்ளது[தொகு]

(செவிவழி கவிதை)

பாடல் பதினான் கென்ற பாண்டித் தலமதிலே
பார்வதியாள் தன் கணவன்
வாடிய நாரைக்கு முந்நாள் முக்தி அளித்ததொரு
மதுரை மாநகர் தனக்கு
நேராகத் தென் கிழக்கில் பனி ரெண்டு மைல் தூரம்
நிமலன் கைலாச நாதர்
சீராரும் காமாக்ஷி அம்மனுடன் வீற்றிருந்து
திருவோங்கித் தாள் வளரும்
வாவியுடன் ஏரியுமே ஊரதனையே சூழ்ந்து
வைகை நதி நீர் பாய்ந்தும்
காவிதழும் அல்லி செந்தாமரை கனாடெனவே
தான் மலர்ந்து கண் கொள்ளாக் காட்சியதாய்
கலை மகட்கோர் இருப்பிடமாய் நாலா வர்ணத்தாரும்
கல்வி தனிற் தான் சிறந்து
அலை கடலில் பள்ளிகொள்ளும் ஸ்ரீமன் நாராயணர்க்கு
அடியார்களாய் விளங்கும்
தான மதிலே சிறந்தது எந்நாளும் அதி சிரத்தையுடன்
வழியிலே தண்ணீரின் பந்தல் வைத்து
பானகம் நீர் மோர் பசித்து வந்தோர்க்கு அன்னம்
பரிவுடனே தானளித்து
அந்த மீனாக்ஷி சொக்கருக்கு அதிகாலையில் புரியும்
விளா பூஜை கட்டளைக்கு
தானாய் அமைந்ததொரு வளம் பொருந்தும் பிரமநகர்
தண்ணிலே வாசமுரும், நன்மக்கள்

தனிச்சிறப்பு[தொகு]

இவ்வாலயத்தில் சூரிய பகவான் சிலை மிகவும் பழமை வாய்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ளது. இதன் உயரம் சுமார் 6 அடி இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம் சுவாமியின் இடப்பாகம் உள்ளது. மிகவும் அரியது. இறைவனுக்கு வலப்பாகத்தில் தான் மற்ற இடங்களில் உள்ளது. அதிலும் 6 அடி உள்ளது மிகவும் அரிது. இதைப்போல் இந்தியாவில் வேறு எங்கும் இருப்பது அரிது.

பிரமனூரில் காணமல் போன கோவிந்தராஜ பெருமாள் கோயில் !!![தொகு]

பிரமனூரில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. அந்த கோயில் பற்றி அருட்கவி சீத்தாராமய்யங்கார் (1887-1961) அபிமான ஸ்தலங்களின் பாசுரங்கள் என்னும் தன்னுடைய திருவருட்பிரபந்தத்தில் இக்கோயிலைப்பற்றி ஒரு வெண்பா பாடியுள்ளார்.

(பக்கம் 273)
பிரமனூர்
இருவிகற்ப இன்னிசை வெண்பா'

இங்குமங்குஞ் சென்றுபக்த ரேமாந் துலையாமல்
சங்குஞ் சுதர்சநமுஞ் சார்ந்துயர்ந்த கோவிந்தன்
பின்னை வளரும் பிரமனூரிற் றாணுவுடன்
பொன்னுலகா யாக்கியதிப் பூ

உரை
தன் பக்தர்கள் இங்கும் அங்கும் சென்று ஏமாந்து வருந்தாமல் இருப்பதற்காகத் திருமால் சங்கும் சக்கரமும் ஏந்தித் திருமகள் வளர்கின்ற பிரமனூரில் சிவனுடன் விளங்கிப் பொன்னுலகு ஆக்குகிறார். திறமைகள் வளர்வதால் பிரமனூரில் மேன்மேலும் செல்வம் வளர்கிறது; தேவலோகம் (பொன்னுலகம்) போல் திகழ்கிறது

மேலும் அவரே அபிமான ஸ்தலங்களின் கீர்த்தனங்கள் என்னும் தன்னுடைய கீர்த்தனங்களுள் இக்கோயிலில் உறையும் பெருமாளைப் பற்றி பாடியுள்ளார்.

(பக்கம் 427)
பிரமனூர்
பல்லவி'
என்னைபாது காத்தருள்வாய் எழின்மிகுங் கோவிந்தா
அனுபல்லவி'
பின்னைவளரும் பிரமநூரில் பிரபலமாயுற்ற பிரபுவே
(என்)
சரணம்'

அன்னையுமப்பனும் அன்புடன்வளர்ப்பர்
அழிந்திடுமுடலை யவரென்னசெய்வர்
உன்னையன்றி உயர்ந்தவரீரேழு
உலகிலுமில்லை உத்தமனே நித்தியனே'' (என்)

உறவுறுமன்பர் உரமதில்மன்னி?
உயர்நிலையருளும் உம்பர்பிரானே
அறம்பொருளின்பம் அடைந்துயர்மோக்ஷம்
அருள்வதர்க்கேற்ற அமைப்பிலமைத்து (என்)
(பக்கம் 427)

உரை
திருமகள் வளர்கின்ற பிரமனூரில் புகழ் பெற்ற பிரபுவே! எழில் மிகு கோவிந்தா ! என்னைப் பாதுகாத்து அருள்வாய். தாயும் தந்தையும் அன்புடன் வளர்ப்பார்கள். உடல் அழிந்தால் அவர்கள் என்ன செய்யமுடியும்? உன்னையன்றி உயர்ந்தவர் ஈரேழு உலகிலும் இல்லை உத்தமனே ! நித்யனே ! உன் அன்பர்களின் நெஞ்சங்களில் நிலைபெற்று அவர்களுக்கு உயர்ந்த நிலையை அருளும் தேவர்களின் தலைவனே ! நான் அறம். பொருள், இன்பம் அடைந்து உயர்ந்த மோட்சத்தை எனக்கு அருள்வதற்கு ஏற்ற அமைப்பில் என்னை அமைத்துப் பாதுகாத்து அருள்வாய் ! எழில்மிகு கோவிந்தா!

கீர்த்தனையிலும் வெண்பாவிலும் பின்னைவளரும் எனத் திருமகள் (செல்வம்) வளர்கின்ற ஊராகப் பிரமனூரைப் போற்றிப் பாடுகிறார் சீதராம்ய்யாங்கார்.

பிரமனூரில் பெருமாளுக்கென்று ஒரு கோயில் இருந்ததும் அப்பெருமாள் கோயில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இருந்து வந்திருப்பதும் தெரிகிறது. ஆனால் இக்கோயில் தற்போது பிரமனூரில் இல்லை. சீத்தாராமய்யங்காரின் கவிதைகளே அதற்குச் சான்றுகளாய் நிற்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

பிரமனூரில் காணமல்போன பெருமாள் கோவிந்தராஜ பெருமாள் கோயில்
www.thiruvarutprabandam.in பரணிடப்பட்டது 2016-10-08 at the வந்தவழி இயந்திரம்