உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிபா நைத்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதிபா நைத்தானி
பிறப்புமும்பை, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிபேராசிரியர்
அமைப்பு(கள்)தூய சவேரியார் சேவியர் கல்லூரி
விருதுகள்மும்பையின் சிறந்த பெண் 2007; இந்தியாவின் சக்தி தெய்வம் 2005

பிரதிபா நைத்தானி (Pratibha Naitthani) என்பவர் இந்தியப் பேராசிரியரும் ஆர்வலரும் ஆவார். இந்தியத் தொலைக்காட்சியில் ஆபாசத்தையும் வன்முறையையும் எதிர்த்ததற்காக இவர் அறியப்படுகிறார்.[1]

இளமை

[தொகு]

பிரதிபா நைத்தானி இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவரது குடும்பம் உத்தராகண்டம் மாநிலம் பெளரி கர்வால் மாவட்டத்தினைச் சேர்ந்தது. இவரது தந்தை, பேராசிரியர் முனைவர் எசு. எசு. நைத்தானி, மும்பை பல்கலைக்கழகம், தூய சவேரியார் கல்லூரியில் இந்தித் துறையின் முன்னோடியாக இருந்தார். தொலைக்காட்சி அலைவரிசைகளில் வயதுவந்தோருக்கான திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவதற்கு எதிராக 2004ஆம் ஆண்டு[2] மும்பை உயர் நீதிமன்றத்தில் (பொதுநல வழக்கு எண். 1232) தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு மூலம் பிரதிபா மிகவும் பிரபலமானவர். இவரது முயற்சியால், பன்னாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகள் கூட இந்தியாவின் நிரலாக்கக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, மும்பை உயர் நீதிமன்றம் இவரது பொதுநல வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.[3]

தொழில்

[தொகு]

பிரதிபா நைத்தானி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இங்கு இவர் தூய சவேரியார் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார்.[4] பேராசிரியர் என்ற நிலையில் தனது கல்விப் பணியைத் தவிர, பெண்கள், குழந்தைகள், பழங்குடி மக்களின் நலன் தொடர்பான பிரச்சினைகளில் இவர் அக்கறை கொண்டுள்ளார். மும்பையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இலவச ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை வழங்கும் ஒரு தன்னார்வ அமைப்பான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ளார். மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அறக்கட்டளை முதன்மையாக இந்தச் சேவையைக் குழந்தைகளுக்கும் தீக்காயங்கள், விபத்துக்களால் ஏற்பட்ட காயங்கள், பிறப்பிலிருந்து உள்ள பிற உடல் குறைபாடுகள் அல்லது அமிலத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்குகிறது.

விளம்பரங்களைப் பார்த்து ஆபத்தினை அறியாமல் குழந்தைகள் அச்செயலில் ஈடுபடுவதால் உயிருக்கு ஆபத்தான செயல்களை ஏற்படுத்தும் விளம்பரங்களையும் ஊடகங்களில் பெண்களை அநாகரீகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற பிரச்சினைகளையும் கையில் எடுத்துத் தீர்வு காண்பதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

விருதுகள்

[தொகு]

2000ஆம் ஆண்டில், உத்தராகண்டத்தில் நந்தா தேவி பார்வதியின் யாத்திரையான நந்தா தேவி ராஜ் ஜாத்தில் பங்கேற்ற முதல் 7 பெண்களில் பிரதிபா நைத்தானியும் ஒருவர். இது 13 முதல் 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பயணமாகும். முன்னதாக, பெண்கள் பொதுவாக இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த யாத்திரை 280 கி.மீ. நீளத்திற்கு, கடல் மட்டத்திலிருந்து 17,500 அடி உயரம் வரை சென்று 22 நாட்களில் கால்நடையாக நடைபெறும் பயணமாகும்.

2005ஆம் ஆண்டு இந்தியா டுடேவால் இந்தியாவின் சக்தி தெய்வங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பெண்களில் இவரும் ஒருவர். சமூக சேவை மற்றும் ஊடகப் பிரச்சினைகளில் இவர் செய்த பங்களிப்புக்காகப் பல விருதுகளைத் தவிர, சமூக சேவைக்காக உதய்பூரில் உள்ள மகாராணா மேவார் அறக்கட்டளையால் இவருக்கு மதிப்புமிக்க பண்ணா தாய் விருது வழங்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று மும்பை மாநகரத் தந்தையால் "மும்பை நகரத்தின் சிறந்த பெண்மணி" என்று கௌரவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Telegraph - Calcutta : Nation". www.telegraphindia.com. Archived from the original on 30 September 2007. Retrieved 2018-08-28.
  2. "Pratibha Naitthani vs Union Of India (Uoi) And Ors. on 21 December, 2005". indiankanoon.org. Retrieved 2018-08-28.
  3. "Uttarakhand Worldwide - Kumaon and Garhwal - Pratibha Naithani". 2007-09-28. Archived from the original on 2007-09-28. Retrieved 2018-08-28.
  4. "Faculty of Arts - Senior College". xaviers.edu. Retrieved 2019-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_நைத்தானி&oldid=4203785" இலிருந்து மீள்விக்கப்பட்டது