உள்ளடக்கத்துக்குச் செல்

பிரஜ்னபரமிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஜ்னபரமிதா
Prajñāpāramitā
Prajnaparamita
கிழக்கு ஜாவா பிரஜ்னபராமிதா சிலை
செய்பொருள்எரிமலைப் படிகப்பாறை
அளவுஉயரம் 126 செ.மீ., அகலம் 50 செ.மீ.
உருவாக்கம்13-ஆம் நூற்றாண்டு
கண்டுபிடிப்புசுங்குப் புத்திரி, சிங்காசாரி கோயில், கிழக்கு ஜாவா, மலாங், கிழக்கு ஜாவா, இந்தோனேசியா (1818)
தற்போதைய இடம்இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா

பிரஜ்னபரமிதா அல்லது ஜாவா பிரஜ்னபரமிதா சிலை (ஆங்கிலம்: Prajnaparamita, Prajñāpāramitā of Java; இந்தோனேசியம்: Prajñāpāramitā Jawa) என்பது இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, சிங்காசாரியைச் சேர்ந்த 13-ஆம் நூற்றாண்டு போதிசத்வ பிரஜ்னபரமிதா தேவியின் (ஆங்கிலம்: Bodhisattva Prajñāpāramitā Devi; சமசுகிருதம்: प्रज्ञापारमिता देवी) பிரபலமான சித்தரிப்புச் சிலையாகும்.[1]

வரலாற்றுச் சிறப்புமிகு இந்தச் சிலை, மிகுந்த அழகியல் கலைநயம் கொண்டது; மேலும் பண்டைய ஜாவாவின் பாரம்பரிய இந்து-பௌத்த கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.[2]

பொது

[தொகு]

கிழக்கு ஜாவாவில் 1818-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரஜ்னபரமிதா சிலை; கென் தெடிசுக்கு செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[3] அந்தச் சிலை கென் தெடிஸ் சாயலில் செய்யப்பட்டு, அவருடைய கல்லறையில் தெய்வீகச் சிலையாக வைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஜாவானிய மக்கள் நம்புகின்றனர். தற்போது இந்தச் சிலை இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது.[4]

விளக்கம்

[தொகு]

கிழக்கு ஜாவாவின் பிரஜ்னபரமிதாவின் சிலை, ஆழ்நிலை தெய்வீக ஞானத்தின் (Transcendental Wisdom) மிகவும் பிரபலமான சித்தரிப்பாக அறியப்படுகிறது. அவளுடைய அமைதியான வெளிப்பாடு; தியானநிலைத் தோரணை; மெய்யுடல் சைகை; செழுமை நிறைந்த மறைநிலைப் புதிர் வடிவிலான அணிகலன்கள்; அலங்காரங்களுக்கு மாறாக, அமைதியின் வெளிப்பாடு; மற்றும் ஆன்மீக தியான நிலை; இவை எல்லாம் ஒன்றிணைந்து உச்சத்தில் பரிணமிக்கின்றன.

இந்தச் சிலை, தெய்வ வஜ்ராசன தோரணை (Vajrasana Posture) எனப்படும் நேர்த்தியான தாமரை தியான நிலையில், ஒரு சதுர அடித்தளத்தின் மேல், பத்மாசனம் (Padmasana) எனப்படும் இரட்டைத் தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளது.[1] மேலும் இந்தச் சிலை, அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட ஒரு விண்வெளிக் கோளில் அமர்ந்திருப்பதாகவும் வடிவம் கண்டுள்ளது. இந்தச் சிலை 126 செ.மீ (50 அங்குலம்), அகலம் 55 செ.மீ (22 அங்குலம்) மற்றும் தடிமன் 55 செ.மீ (22 அங்குலம்) கொண்டது; வெளிர் சாம்பல் நிற எரிமலைப் படிகப் பாறையால் செதுக்கப்பட்டுள்ளது.[5]

காயத்திரி இராசபத்தினி

[தொகு]

இந்தச் சிலையின் தேவி; தர்மசக்கர-முத்ரா (Dharmachakra-mudra) எனும் தர்மச் சக்கரத்தைச் சுழற்றுவதைக் குறிக்கும் முத்திரையைச் செய்கிறாள்.[1] சிலையின் தலை மற்றும் முகம் மிக மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தேவி தன் தலைமுடியை உயரமாக அணிந்து, சடமகூட மகுடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைக்குப் பின்னால் பிரபமண்டலம் (Prabhamandala) எனும் உயர்ந்த ஞானத்தைக் குறிக்கும் தெய்வீக ஒளிவட்டம் (Aura) பிரகாசிக்கின்றது.[6]

கிழக்கு ஜாவா, மலாங்கில் உள்ள சிங்காசாரி கோயிலுக்கு அருகிலுள்ள சுங்குப் புத்ரி இடிபாடுகளில் (Cungkup Putri) இந்த சிலை, சேதம் அடையாத நிலையில்; கிட்டத்தட்ட நேர்த்தியான நிலையில் 1818-ஆம் ஆன்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் ஜாவானிய பாரம்பரியம் இந்தச் சிலையை, சிங்காசாரியின் முதல் அரசியான கென் தெடிஸ் அரசியுடன் தொடர்பு படுத்துகிறது. கென் தெடிஸ் அரசியின் தெய்வீகச் சித்தரிப்பாக இருக்கலாம் என்று கருதப்படும் அதே வேளையில்,[1] இந்தச் சிலை மஜபாகித்தின் முதல் அரசரான ராதன் விஜயனின் மனைவியான காயத்திரி இராசபத்தினியுடன் இணைக்கப் படுகிறது.[2][7]

கண்டுபிடிப்பு

[தொகு]

பிரஜ்னபரமிதா சிலை, 1818 அல்லது 1819-ஆம் ஆண்டுகளில் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் அதிகாரியான டி. மொன்னெறு (D. Monnereau) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1820-ஆம் ஆண்டில் மொன்னெறு அந்த சிலையை சி.ஜி.சி. ரெய்ன்வார்ட் (Caspar Georg Karl Reinwardt) என்பவரிடம் ஒப்படைத்தார். பின்னர் ரெய்ன்வார்ட், பிரஜ்னபரமிதா சிலையை நெதர்லாந்திற்கு கொண்டு சென்றார். லைடனில் உள்ள நெதர்லாந்து தேசிய இனவியல் அருங்காட்சியகத்தில் மதிப்புமிக்க உடைமையாகப் பாதுகாக்கப்பட்டது.[2] 158 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜ்னபரமிதா சிலை நெதர்லாந்தின் லைடன் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் இருந்தது.

சனவரி 1978-இல், நெதர்லாந்தின் அரசி ஜூலியானா முன்னாள் இடச்சு குடியேற்ற நாடான இந்தோனேசியாவுக்கு அரச பயணம் செய்தபோது, ​​நெதர்லாந்து அரசாங்கம் பிரஜ்னபரமிதா சிலையை இந்தோனேசிய குடியரசிற்குத் திருப்பிக் கொடுத்தது.

தற்போது இந்தச் சிலை, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் 4-ஆவது மாடியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பிரஜ்னபரமிதா சிலை, அழகியல் அமைப்பில் ஆன்மீகத்தை நேர்த்தியாக இணைக்கும் அரிய கலைச் சின்னங்களில் ஒன்றாகவும்; பண்டைய இந்தோனேசிய பாரம்பரியக் கலையில் ஓர் உயரிய வரலாற்றுச் சின்னமாகவும் புகழ் பெற்றுள்ளது.[8]

காட்சியகம்

[தொகு]

பிரஜ்னபரமிதா காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Collectionː Prajnaparamita". National Museum of Indonesia. Archived from the original on 9 January 2015. Retrieved 17 May 2015.
  2. 2.0 2.1 2.2 "Prajnaparamita". Virtual Collections of Asian Masterpieces. Retrieved 17 May 2015.
  3. "Surviving Legend, Surviving 'Unity in Diversity' a Reading of Ken Arok and Ken Dedes Narratives'" (PDF). Novita Dewi: National University of Singapore. Retrieved 25 February 2025.
  4. "Ken Arok Ken Dedes Pdf Downloadl". sites.google.com. Retrieved 25 February 2025.
  5. "Arca Prajnyaparamita Koleksi Museum Nasional Nomor Inventaris 17774". Sistem Registrasi Nasional Cagar Budaya (in இந்தோனேஷியன்). Retrieved 2020-04-06.
  6. Ann R. Kinney; Marijke J. Klokke; Lydia Kieven (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press. ISBN 9780824827793. Retrieved 17 May 2015.
  7. Drake, Earl (2012). Gayatri Rajapatni, Perempuan di Balik Kejayaan Majapahit. Yogyakarta: Ombak.
  8. "Worshipping the Source: The Buddhist Goddess Prajnaparamita". egregores. 25 September 2009. Retrieved 17 May 2015.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்னபரமிதா&oldid=4216022" இலிருந்து மீள்விக்கப்பட்டது