உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகலாதபுரிகோவில் (முல்தான்)

ஆள்கூறுகள்: 30°11′52″N 71°28′11″E / 30.19778°N 71.46972°E / 30.19778; 71.46972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகலாதபுரிகோவில்
பிரகலாதபுரி கோவிலின் இடிபாடுகள்
பிரகலாதபுரிகோவில் is located in பாக்கித்தான்
பிரகலாதபுரிகோவில்
பிரகலாதபுரிகோவில்
Location within Pakistan
ஆள்கூறுகள்:30°11′52″N 71°28′11″E / 30.19778°N 71.46972°E / 30.19778; 71.46972
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரகலாதன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோவில்
இணையதளம்:http://www.pakistanhinducouncil.org/ Link

பிரகலாதபுரி கோவில் (Prahladpuri Temple) பாகிஸ்தானிய பஞ்சாபில், முல்தானிலுள்ள பழமையான இந்துக் கோவிலாகும். பிரகலாதன் பெயரிலமைந்துள்ள இக்கோவில் இறைவன் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்தியாவில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி தாக்கப்பட்டதன் எதிரொலியாக 1992 இல் பிரகலாதபுரி கோவில் தாக்கப்பட்டது. அதிலிருந்து இக்கோவில் இடிந்தநிலையில் உள்ளது.[1]

வரலாறு

[தொகு]

முல்தான் அரசன் இரணியகசிபுவின் மகனான பிரகலாதனால் பிரகலாதபுரியின் மூலக்கோவில் கட்டப்பட்டதாகவும்,[2] பிரகலாதனை அவனது தந்தையிடமிருந்து காக்க நரசிம்மராக அவதாரம் கொண்ட திருமாலுக்காக எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.[3][4][5][6]

முல்தானை இசுலாமியர் வென்றபின் முல்தான் சூரியக் கோவிலைப் போலவே இக்கோவிலும் அழிவுக்குள்ளானது. முல்தான் கோட்டைக்குள் ஹசரத் பாஹுல் ஹாக் சகாரியாவின் சமாதித் தூணுக்கு அடுத்ததாக, ஒரு உயர்ந்த மேடையின்மீது கட்டப்பட்டுள்ளது.[6] கோவிலையடுத்து பள்ளிவாசலொன்று அமைக்கப்பட்டுள்ளது.[7] ஏ. என். கானின் பதிவுகளின்படி, இப்பகுதி சீக்கியரின் ஆட்சியிலிருந்தபோது 1810 களில் இக்கோயில் மறுபடியும் கட்டப்பட்டது[6].

பயணியும் தேடலாய்வாளருமான அலெக்சாண்டர் பர்னசு 1831 இல் தான் சென்றபோது இக்கோயில் கவனிப்பாரற்று கூரையின்றி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1849 இல் பிரித்தானிய இராணுவம் முல்தான் கோட்டையை முற்றுகையிட்டபோது வீசப்பட்ட குண்டு கோட்டையினுள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இருப்பின் மேல் விழுந்து ஹசரத் பாஹுல் ஹாக் சகாரியா மற்றும் அவரது மகன்களின் சமாதிகளும், பிரகலாதபுரி கோவில் வளாகமும் தவிர கோட்டையின் பிற பகுதிகள் முழுவதும் அழிந்தது போயின.[8] அலெக்சாண்டர் கன்னிங்காம், 1853 இல் தான் பார்த்தபோது இக்கோவில் ”வேலைப்பாடுகளமைந்த மரத்தூண்களால் தாங்கப்பட்ட கூரைகொண்ட சதுர செங்கற் கட்டிடமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார் . [6][9]

தற்போதுள்ள கோவில் 1861 ஆம் ஆண்டு தலைமை குருக்கள் பால் ராம் தாசால் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையால் 11,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[6] 1872 இல் முல்தானின் இந்து குடிமக்களிடமிருந்தும் தாக்கூர் ஃபடே சந்த் தன்க்சாலியாவிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடையைக் கொண்டு மீண்டும் கட்டப்பட்டது.

1881 இல் கோவிலைப் புனரமைக்கும்போது கோவில் விமானத்தின் உயரம் மற்றும் அருகிலிருந்த இசுலாமிய சமாதித்தூண்களின் உயரம் குறித்து எழுந்த இந்து-இசுலாமிய சிக்கலால் கலவரம் ஏற்பட்டது. அக்கலவரத்தில் இரு பள்ளிவாசல்களும் 22 கோவில்களும் அழிக்கப்பட்டன. பஞ்சாபின் பிரித்தானிய அரசு இக்கலவரத்தை அடக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இக்கலவரத்தில் பிரகலாதபுரி கோவிலும் அழிந்தது.[4][10] எனினும் பிரகலாதபுரியின் முல்தானின் வசதிபடைத்த இந்து சமூகத்தினரால் இக்கோவில் மீண்டும் உடனடியாகக் கட்டப்பட்டது.[11]

அமைப்பு

[தொகு]

பிரகலாதபுரி கோவில் முல்தான் கோட்டையின் உட்புறம் ஒரு உயரமான மேடையின்மீது கட்டப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டுக்கு முன் இக்கோவில் முல்தானின் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்தது. இங்கு ஒரு முதன்மைக் கூடம், வானொளி அமைப்புகள், பெரிய மண்டபம் ஒன்று உள்ளன. நடுக்கூடத்தில் விதானத்தின் கீழ் உருவச்சிலையுள்ளது. கோவிலையொட்டி ஒரு தர்மசாலைக் கட்டிட வளாகம் அமைந்துள்ளது.[6] தூண்களால் தாங்கப்பட்ட அமைப்பாக மூலக் கோவில் இருந்தது எனவும், அத்தூண்களும் கூரையும் தங்கத்தால் ஆனவை எனவும் மரபுவழிச் செய்தி நிலவுகிறது.[6] மேலும், அறியப்படாத சில காரணங்களால் முழுக் கட்டிடமும் பூமிக்குள் புதைந்து போனது என்றும், அதே இடத்தில் புதுக்கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[12]

முக்கியத்துவம்

[தொகு]

பிரகலாதபுரி கோவில் மிகப் பழமையான இந்துக் கோவில். பிரகலாதனால் கட்டப்பட்ட மூலக்கோவில் அமைந்த இடத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்துசமயப் புராணக்கதைகளின்படி, இங்கு பிரகலாதனை அவன் தந்தை இரணியகசிபுவிடம் இருந்து நரசிம்மர் காப்பாற்றி, இரணியகசிபுவை வதம் செய்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது.[3][5] ஹோலிகா தகனப் பாரம்பரியமும் பண்டிகையும் இங்கு துவங்கியதாக இந்துக்கள் நம்புகின்றனர்.[1]

தற்போதைய நிலை

[தொகு]

1992 ஆம் ஆண்டு நடந்த வன்முறைத் தாக்குதலிலிருந்து இக்கோயில் அழிவுற்ற நிலையில் உள்ளது. 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இக்கோவில் வளாகத்தில் இசுலாமிய சமயம் தொடர்பான வசதிகளுக்கான கட்டிடங்கள் அமைக்கவும், அன்னதானக் கூடம் அமைக்கவும் அரசால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இம்முடிவை சில அரசு சார்பற்ற அமைப்புகளால் எதிர்த்தனர். பாக்கித்தான் அரசியலமைப்பின்படி, இதர சமய வழிபாட்டிடங்களில் இசுலாமியக் கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்பதை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தடையுத்தரவு வாங்கப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் பண்டைய சிறப்புப் பெற்ற இக்கோவிலை மீட்டெடுக்க வேண்டுமென்று பாக்கித்தானிய அரசிடம் பல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  2. Syad Muhammad Latif (1963). The early history of Multan. p. 3,54. Kasyapa, is believed, according to the Sanscrit texts, to have founded Kashyapa-pura (otherwise known as Multan
  3. 3.0 3.1 Gazetteer of the Multan District, 1923-24 Sir Edward Maclagan, Punjab (Pakistan). 1926. pp. 276–77.
  4. 4.0 4.1 Imperial rule in Punjab: the conquest and administration of Multan, 1818-1881 by J. Royal Roseberry. pp. 243, 263.
  5. 5.0 5.1 All the year round , Volume 51. Charles Dickens. 1883.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 [1] பரணிடப்பட்டது 2015-01-07 at the வந்தவழி இயந்திரம் Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archeology & Museums, Ministry of Culture, Government of Pakistan
  7. Muslim Saints of South Asia: The Eleventh to Fifteenth Centuries By Anna Suvorova. p. 153.
  8. MONUMENTS OF MULTAN Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archaeology & Museums, Ministry of Culture, Government of Pakistan
  9. Cunningham, 129
  10. ROSEBERRY, J. Royal. 1987. Imperial Rule in Punjab: The Conquest and Administration of Multan, 1818-1881. Manohar Publications (Delhi); 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-913215-23-6
  11. Ajudhia Das, who was formerly Mahant of two temples at Multan named Prahlad and N'arasingpuri, was removed from his office on January 23rd, 1913, by a Panchayat appointed at a mass meeting of Hindus which was convened on that date. All India reporter, Volume 3 by D.V. Chitaley, 1923
  12. Latif, 54

வெளியிணைப்புகள்

[தொகு]