பியர் கோல்ட்மன்

பியர் கோல்ட்மேன் (Pierre Goldman ; 22 சூன் 1944 - 20 செப்டம்பர் 1979) என்பவர் ஒரு பிரெஞ்சு இடதுசாரி அறிவுஜீவி ஆவார். பிரான்சில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டி எழுப்ப இவர் முயற்சிகள் மேற்கொண்டார். அதிகார வர்கத்துக்கு எதிராக பல கொள்ளைகளில் ஈடுபட்டார். பொய்யான கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார். பின்னர் மருமமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் எசுபானிய கொலைக் குழுக்கள் ஜி.ஏ.எல் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஜீன்-ஜாக்ஸ் கோல்ட்மேன் ஒரு பிரபலமான பிரெஞ்சு பாடகராவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1944 சூன் 22 அன்று பிரான்சில் உள்ள லியோனில் பியர் கோல்ட்மேன் பிறந்தார். இவர் போலந்து யூதர்களான ஆல்டர் மோஜ் கோல்ட்மேன் மற்றும் ஜானின் சோச்சாக்செவ்ஸ்கா ஆகியோரின் மகனாவார். அவர்கள் எப்.டி.பி-எம்.ஒ.ஐ எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர்.[1][2] பிரான்சின் விடுதலைக்குப் பிறகு, இவரது பெற்றோர் பிரிந்தனர்.
பல்வேறு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், கோல்ட்மேன் இளங்கலைப் பட்டம் பெற்று சோர்போனில் ஒரு சுயாதீன தணிக்கையாளராகப் படிப்பைத் தொடர்ந்தார். இவர் 1963 இல் கம்யூனிஸ்ட் மாணவர் ஒன்றியத்தில் சேர்ந்தார். 1966 இல், இவர் கட்டாய இராணுவ சேவையைச் செய்ய மறுத்து, அதற்கு பதிலாக கியூபாவுக்குச் சென்றார். அங்கு 1966 சனவரியில் நடந்த டிரிகோன்டினென்டல் மாநாட்டில் பிடல் காஸ்ட்ரோவின் பேச்சைக் கேட்டார்.[2] சே குவேராவின் மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்காக அவானாவில் இருந்த இவர், இடைத்தரகர் ரெஜிஸ் டெப்ரே மூலம் பல வெனிசுலா கெரில்லரோக்களை சந்தித்தார்.[2]
பாரிசுக்குத் திரும்பிய இவர், மே 1968 போராட்டங்களில் இருந்து விலகி இருந்தார். 1968 சூனில் வெனிசுலாவுக்குச் சென்று அங்கு ஒரு ஆண்டு கொரில்லா நடவடிக்கைகளில் கழித்தார். 1969 சூன் 11 அன்று, ஒரு ஆயுதக் கிடங்கின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இவரது குழு சியராவிற்குள் பின்வாங்கியது.வெனிசுலா அரசாங்கத்தின் பக்கம் கியூபா சாய்ந்ததால் இவரது குழு கியூபாவின் அனைத்து ஆதரவையும் இழந்தது. பின்னர் கோல்ட்மேன் 1969 சூன் 11 அன்று புவேர்ட்டோ லா குரூஸில் உள்ள கனேடியன் ராயல் வங்கியைக் கொள்ளையடித்து, 2.6 மில்லியன் பொலிவார்களை (அந்த ஆண்டின் மிகப்பெரிய கொள்ளை) கை கொண்டார். பின்னர் எம்.ஏ.எல்.என் கெரில்லாக்களால் ஒரு கொள்ளைக்கான பொறுப்பு ஏற்கப்பட்டது.[2] இவரது தோழர்களில், கோல்ட்மேன் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை, செப்டம்பரில் பாரிசுக்கு தப்பிச் சென்றார்.[2]
தான் பெற்ற போராட்ட அனுபவங்களைக் கொண்டு பிரான்சில் புரச்சிகர இயக்கம் ஒன்றை கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். தன்னிடம் எஞ்சியுள்ள பணம் காலியான நிலையில் இவர், 1969 திசம்பர் மற்றும் 1970 சனவரியில் சிறு வணிகங்களில் பல கொள்ளைகளை நிகழ்த்தினார். இந்த காலகட்டத்தில், எழுத்தாளர் ஜீன்-எடர்ன் ஹாலியரை கடத்துவது குறித்து இவர் பரிசீலித்ததாக கூறப்படுகிறது, அவரை இவர் மிகவும் வெறுத்தார். 1969 திசம்பர் 19 அன்று பவுல்வர்டு ரிச்சர்ட்-லெனோயரில் இரண்டு மருந்தாளுநர்கள் கொல்லப்பட்ட ஒரு இரத்தக்களரியான கொள்ளையில் 1974 ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், பாரிஸ் கோர்ட் டி'அசிஸ்ஸால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இவர் தான் முன்பு நிகழ்த்திய மூன்று கொள்ளைகளை ஒப்புக்கொண்ட போதிலும், மருந்தாளுநர்கள் கொல்லப்பட்ட அந்தக் கொள்ளையில் ஈடுபடவில்லை என்று மறுத்தார்.[2] மற்ற மூன்று கொள்ளைகளுக்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1969 திசம்பர் கொலைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[2]
சிறையில் கழித்த ஐந்து ஆண்டுகளில், கோல்ட்மன் மெய்யியல் மற்றும் எசுபானிய மொழியைக் கற்றார். மேலும் தனது சொந்த வழக்கு குறித்து Souvenirs obscurs d'un juif polonais né en France ( பிரான்சில் பிறந்த ஒரு போலந்து யூதரின் தெளிவற்ற நினைவுகள் ) என்ற புத்தகத்தை எழுதினார். இப்பத்தகம் 1975 இல் வெளியானது. நடிகை சிமோன் சிக்னோரெட், எழுத்தாளர் பிரான்சுவா சாகன், இழான் பவுல் சார்த்ர, ரெஜிஸ் டெப்ரே உள்ளிட்ட சில பிரெஞ்சு அறிவுஜீவிகள் மற்றும் ஆளுமைகள் மீது இந்தப் புத்தகம் தாக்கம் ஏற்படுத்தியது. மேலும் விசாரணையின் போது நடந்த பல முரண்பாடுகள் இரண்டாவது விசாரணைக்கு காரணமாயிற்று. இது 1976 ஏப்ரல் 26 அன்று தொடங்கியது. நீதிமன்றத்தில் நான், நிரபராதி ஏனென்றால் நான் நிரபராதியாக இருக்கிறேன் என்ற கோல்ட்மனின் வாதம், பிரான்சின் ஆளும் அமைப்பு குறித்த அவரது விளக்கங்களும் அன்றைய இளம் தலைமுறையினர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[3] இறுதியில் இவர் 1976 அக்டோபரில் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலையானார்.[2] பின்னர், இவர் இடதுசாரி செய்தித்தாள்களில் பங்களித்தார். டெம்ப்ஸ் மாடர்ன்ஸ் மற்றும் லிபரேசன் இதழ்களில் இணைந்து பணியாற்றினார்.[2]
படுகொலை
[தொகு]பாரிசில் 1979 செப்டம்பர் 20 அன்று கோல்ட்மேன் தோலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். எசுபானியர்களைப் போன்ற சாயலுடைய மூன்று பேரைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். காவல்துறை முதலில் மாஃபியாவை சந்தேகித்தது; இருப்பினும், இந்தக் கொலைக்கு அறியப்படாத தீவிர வலதுசாரிக் குழுவான ஹொன்னூர் டி லா போலீஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. கோல்ட்மேனின் இறுதிச் சடங்கில் 15,000 பேர் கலந்து கொண்டனர். இவர் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இவரின் மனைவி கிறிஸ்டியானே மானுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தார்.
கோல்ட்மேனின் கொலைக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு கோட்பாடுகள் நீடிக்கின்றன, அவற்றில் மிகவும் தீவிரமானது மார்சேயின் குற்றவியல் ரகசியத்தை சுட்டிக்காட்டுகிறது, இது 1980 களில் எட்டா அமைப்பை எதிர்த்துப் போராட எசுபானிய அதிகாரிகளால் அமைக்கப்பட்ட ஒரு கொலைக் குழுவான ஜி.ஏ.எல் என்ற கூலிப்படை அமைப்பினால் அவரைக் கொன்றிருக்கலாம். கோல்ட்மேன் எட்டாவுக்கு ஆயுதங்களை வாங்க உதவியதாகவும், ஜி.ஏ.எல் ஐ எதிர்த்துப் போராட ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.[சான்று தேவை]
திரைப்படம்
[தொகு]2023 இல் வெளியான தி கோல்ட்மன் கேஸ், என்ற திரைப்படம் 1976 ஆம் ஆண்டு கொலைக் குற்றத்திற்காக கோல்ட்மேனின் தொடுக்கபட்டு நடந்த மறு விசாரணையை அடிப்படையாகக் கொண்டது.
எழுதிய நூல் பட்டியல்
[தொகு]- Souvenirs obscurs d'un juif polonais né en France, Le Seuil, 1975.
- L'ordinaire mésaventure d'Archibald Rapoport, 1977.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Qui était Pierre Goldman ?".
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Michaël Prazan, L'assassinat de Pierre Goldman (2005) - film documentary
- ↑ Author, Guest (2026-03-07). "போராட்ட நாயகன் பியர் கோல்ட்மன் | நூல் நயம்". Hindu Tamil Thisai. Retrieved 2026-03-09.
{{cite web}}:|last=has generic name (help)