பிபி கானிம் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிபி-கானிம் பள்ளிவாசல்' (பாரசீக மொழி: مسجد بی بی خانم‎; உசுபேகியம்: Bibi-Xonim masjidi; உருசியம்: Мечеть Бибиханым; இப்பள்ளிவாசல் கானும் / கானோம் / கானம் / சானும் / எனவும் அழைக்கப்படுகிறது) சமர்கந்தின் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இப்பள்ளிவாசல் 15 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய மற்றும் அற்புதமான பள்ளிவாசல்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அழிவில், அதன் கவனத்தைக் கவரும் பகுதிகளைத் தவிர்த்து மற்றவை அழிந்துவிட்டன, பள்ளிவாசலின் முக்கிய பகுதிகள் சோவியத் காலத்தில் திரும்பக் கட்டப்பட்டன.

வரலாறு[தொகு]

கல்லால் ஆன குர்ஆன் பலகை

1399 ஆம் ஆண்டில் தனது இந்தியப் படையெடுப்பிற்குப் பின், தைமூர் தனது புதிய தலைநகரான சமர்கந்தில் ஒரு பிரம்மாண்டமான பள்ளிவாசலைக் கட்ட முடிவு செய்தார்.[1] 1404 இல் தைமுர் தனது இராணுவத்துடன் படையெடுப்பிலிருந்து திரும்பியபோது பள்ளிவாசல் கட்டுமானம் கிட்டத்தட்ட நிறைவடைந்து இருந்தது. இருப்பினும், வடிவமைப்பில் தைமூர் மகிழ்ச்சியடையவில்லை, அவர் உடனடியாக பல்வேறு மாற்றங்களைச் செய்தார், குறிப்பாக முதன்மை முகப்பில் (cupola) மாற்றங்களைச்செய்தார்.[2]

இப்பள்ளிவாசலைக் கட்டத் தொடங்கியதிலிருந்து, கட்டமைப்பின் உறுதியிலிருந்த சிக்கல்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத்தொடங்கின. பள்ளிவாசலைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு புனரமைப்பு மற்றும் வலுவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, மிஹ்ராபின் மேலிருந்த பெரிய குவிமாடத்திலிருந்து செங்கற்கள் விழத் தொடங்கின.[3] தைமூரின் கட்டுமானத் திட்டங்கள் அந்தக் கால கட்டட நுட்பங்களை அவற்றின் உயர் எல்லைகளுக்கு உந்தித் தள்ளியது. அவசரமான கட்டுமானம் கட்டிடத்தின் உறுதித் தன்மையை சீர்குலைத்தது.[4][5]

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்துல்லா கான் (அப்துல்லா கான் ஓஸ்பெக்) (1533 / 4-1598), புகாரா நகரின் கடைசி சயாபனித்து வம்ச அரசர், பிபி-கானிம் பள்ளிவாசலின் நடைபெற்ற அனைத்து மறுசீரமைப்பு பணிகளையும் இரத்து செய்தார்.[6] அதன்பிறகு, பள்ளிவாசல் மெதுவாக மோசமடையத் தொடங்கியது. காற்று, வானிலை மற்றும் நிலநடுக்கங்களால் இடிபாடுகளாக மாறியது. பள்ளிவாசல் கட்டிடத்தின் உள் வளைவு 1897 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உடைந்து சரிந்தது.[7][8] பல நூற்றாண்டுகளில் சமர்கந்து நகர மக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான கட்டுமானப் பொருட்களை இப்பள்ளவாசலின் இடிபாடுகளிலிருந்து எடுத்துச் சென்றனர், குறிப்பாக அழகிய பளிங்கு கற்கள் பொறிக்கப்பட்ட வரிசையான காட்சியகச் செங்கல்களை எடுத்துச் சென்றனர்.

இப்பள்ளிவாசலின் இடிபாடுகளைப் பாதுகாப்பதற்கான முதல் நடவடிக்கை சோவியத்து யூனியன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உசுபெக்கிசுத்தான் அரசாங்கம் மூன்று குவிமாடம் கட்டிடங்கள், மற்றும் முதன்மை பள்ளிவாசல் அரங்கினை மீட்டெடுக்கத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத்து உசுபெக்கிசுத்தான் அரசினால் பள்ளிவாசலின் சிக்கலான புனரமைப்பைத் தொடங்கியது.[9] குவிமாடங்கள் மற்றும் முகப்புகளின் அலங்காரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு கூடுதல் அலங்காரங்கள் வழங்கப்பட்டன. இந்த மறுசீரமைப்புகளின் போது, குர்ஆனின் பகரா அத்தியாத்தைக் காட்சிப்படுத்தும் கல்வெட்டுகளின் தொகுப்பு பள்ளிவாசலின் முக்கிய அரங்கில் சேர்க்கப்பட்டது.[10] 2016 வரையிலும், பள்ளிவாசலில் மறுசீரமைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.[11]

கட்டிடக் கலை[தொகு]

முதன்மை குவிமாடம் 40 m உயரம் கொண்டது.

பழங்கால கையெழுத்துப் பிரதிகளின்படி, 1399-1405 ஆம் ஆண்டில் தைமூரின் ஆணையின் கீழ் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது இடைக்கால முசுலீம் கட்டிடங்களின் பல பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஐவனார்ட் அமைப்புகள்.[12] இப்பள்ளிவாசல் முற்றம் அமைப்புகள் கொண்ட பள்ளிகளின் அடிப்படை திட்டத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புற சுவர்கள் ஒரு செவ்வக பகுதியை சுற்றி அமைந்துள்ளன, செவ்வப் பகுதி 167 மீற்றர் (182.63 கெசம்) நீளமும் 109 மீற்றர் (119.20 கெசம்) அகலமும் கொண்டுள்ளது, கிப்லாவிற்கு ஏற்ப தோராயமாக வடகிழக்கிலிருந்து தென்மேற்காக அமைந்துள்ளது. இருப்பினும் மூடப்பட்ட காட்சியகங்கள் இல்லாத இடத்தின் அளவு 78 க்கு 64 மீற்றர் மட்டுமே உள்ளது.[13] வடகிழக்கில் அமைந்துள்ள விரிந்த வாயிலில் (35 மீற்றர் உயரம்)[14] தொடங்கும் பாதை முற்றத்தில் சென்று முடிவடைகிறது. இம்முற்றத்தின் எதிரில் 40 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான சதுர வடிவிலான குவிமாடம் அமைந்துள்ளது.[15] இக்குவிமாடம் தான் இப்பள்ளிவாசலின் மிகப் பெரிய குவிமாடம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Bibi-Khanym mosque". Skiouros.net. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 2. Зохидов, Пўлат: Темур даврининг меъморий кахкашони. Тошкент: Шарқ 1966. [Zakhidov, Pulat: Architectural glories of Temur’s era. Tashkent: Sharq 1996.] p. 58
 3. Самарканд. Бухара. Галина Пугаченкова. «Искусство» 1968 г. p. 30
 4. "Samarkand City". Stantours.com. April 24, 2002. Archived from the original on 3 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 5. "Highlights of CA" (PDF). Steppes Travel. March 22, 2006. Archived from the original (PDF) on September 30, 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 6. Зохидов, Пўлат: Темур даврининг меъморий кахкашони. Тошкент: Шарқ 1966. [Zakhidov, Pulat: Architectural glories of Temur’s era. Tashkent: Sharq 1996.] p. 59
 7. Зохидов, Пўлат: Темур даврининг меъморий кахкашони. Тошкент: Шарқ 1966. [Zakhidov, Pulat: Architectural glories of Temur’s era. Tashkent: Sharq 1996.] p. 57
 8. "Bibi Khanym Mosque". TripAdvisor.com. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 9. "Bibi Khanym Mosque". iExplore.com. July 14, 2001. Archived from the original on December 22, 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 10. Paskaleva, Elena. "Epigraphic restorations of Timurid architectural heritage" (PDF). iias.asia. International Institute for Asian Studies. Archived from the original (PDF) on 17 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
 11. S., Samhita (2016-06-13). "Photo: "restoration work in progress inside the mosque" (from review: "Very enchanting mosque: A must visit")". TripAdvisor. பார்க்கப்பட்ட நாள் 2018-07-18.
 12. "Convention Concerning the Protection of the World Cultural and National Heritage" (PDF). unesco.org. United Nations Educational, Scientific and Cultural Organization.
 13. Dmitriy Page. "Bibi-Khanym Mosque in Samarkand". பார்க்கப்பட்ட நாள் October 6, 2015.
 14. Carillet, Joel (June 6, 2006). "In Pictures: Samarkand, Uzbekistan". Gather.com. Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
 15. Muzey.uz, Соборная мечеть Биби-Ханым பரணிடப்பட்டது 2007-11-21 at the வந்தவழி இயந்திரம் (Bibi-Khanym Mosque) (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபி_கானிம்_பள்ளிவாசல்&oldid=3597458" இலிருந்து மீள்விக்கப்பட்டது