உள்ளடக்கத்துக்குச் செல்

பின்வாங்கு முரசறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது தில்லியில் பின்வாங்கு சடங்கு நடக்கும் இராஜ்பத்தில் உள்ள விசய் சவுக் (வெற்றி சதுக்கம்) - பின்னணியில் இருபுறமும் அரசுத் தலைமைச் செயலகக் கட்டிடங்கள்

பின்வாங்கு முரசறை (Beating Retreat) 16வது நூற்றாண்டு இங்கிலாந்தின் படைத்துறைச் சடங்கு ஆகும். இது அண்மைப்பகுதிக்கு இரோந்துப் பணிக்காக சென்ற படைகளை கோட்டைக்கு மீட்டு அழைக்க முதலில் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாட்டங்களின் அலுவல்முறையான முடிவுறலாக இது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் கழிந்த மூன்றாம் நாள், சனவரி 29, மாலையில் விசய் சவுக்கில் முரசறையப்பட்டு இச்சடங்கு நடந்தேறுகிறது. இச்சமயத்தில் இந்தியப் படைத்துறையின் மூன்று அங்கங்களான இந்தியத் தரைப்படை, இந்தியக் கடற்படை, இந்திய வான்படையின் இசைக் கலைஞர்கள் இசைக்கின்றனர். இராஜ்பத்தின் கோடியில் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே ரைய்சினா ஹில்சில் அமைந்துள்ள விசய் சதுக்கத்தில் இச்சடங்கு நடக்கிறது.

இச்சடங்கு 1950இல் இந்தியப் படைத்துறையின் வெவ்வேறு பிரிவுகளின் முரசறை இசைக்குழுக்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் மேஜர் இராபர்ட்சால் வடிவமைக்கப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]

துவக்கத்தில் இது கடிகாரம் அமைத்தல் எனப்பட்டது. இது மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது இதற்கான மாலைத் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டை சுடுவதாக இருந்தது.

சூன் 18, 1690இல் இரண்டாம் ஜேம்சு இட்ட ஆணையின்படி தங்கள் படைகளை பின்வாங்க முரசறையப்பட்டன. 1694இல் வில்லியம் III இட்ட ஆணைப்படி இது சடங்கான படைத்துறை இசை ஆயிற்று.

2013ஆம் ஆண்டு ஹௌஸ்-ஹோல்ட் மாஸ்டு பாண்டுக் குழுவினரின் நிகழ்ச்சி

சூன் 5, 2008இல் முதல்முறையாக ஓர் வெளிநாட்டு இசைக்குழு பின்வாங்கு முரசறை வாசிக்க அனுமதிக்கப்பட்டனர்.[2] இது இலண்டன் பாதுகாப்பில் உதவும் இராயல் மலாய் ரெஜிமன்ட்டின் இசைக்குழுவாகும்.[2]

இந்தியச் சடங்கு

[தொகு]

பின்வாங்கு முரசறை அலுவல்முறையாக குடியரசு நாள் விழாவின் இறுதியைக் குறிக்கிறது. சனவரி 26 முதல் சனவரி 29 வரை அனைத்து முக்கியமான அரசாங்க கட்டிடங்கள் விளக்குகள் மூலம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. குடியரசு நாள் கழிந்த மூன்றாம் நாள், சனவரி 29 அன்று மாலை 5 மணிக்கு விழா துவங்குகின்றது. இதன் முதன்மை விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் விளங்குகிறார்; தமது ஆபத்துதவிகளின் குதிரை அணிவகுப்பினூடே குடியரசுத்தலைவர் வருகை புரிகிறார். அப்போது பிரிகேடு ஆப் தி கார்ட்சு தங்கள் ஊதுகொம்பு கொண்டு பேன்பேர் என்ற இசைத்துண்டை வாசிக்கின்றனர். அடுத்து தேசிய வணக்கம் செலுத்தப்பட்டு நாட்டுப்பண்ணுடன் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

தரைப்படை, வான்படை, கடற்படையின் முரசறைவோர், ஊதுகுழல் கலைஞர்கள், எக்காளக் கலைஞர்கள் வரிசையாக தங்கள் திறனைக் காட்டியவண்ணம் அணிவகுக்கின்றனர். ஒவ்வொரு குழுவின் கட்டியக்காரராக வருபவரின் கம்பாட்டம் காண இனிமையாக இருக்கும். புகழ்பெற்ற பாடல்களான கர்னல் போகி மார்ச்சு, சன்சு ஆஃப் தி பிரேவ் போன்ற ஆங்கிலப் பாடல்களும் கதம் கதம் படாயே ஜா போன்ற இந்தப் பாடல்களும் இடம் பெறும். இசைக்குழு ஒவ்வொன்றும் தங்கள் நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவரின் அண்மையில் உள்ள இடத்தில் நிற்பர். முரசறைவோர் தனியாவர்த்தனமாக டிரம்மர்சு கால் என்ற இசையை வாசிப்பர். பின்னர் பின்வாங்கலுக்கான எக்காள இசை எழுப்பப்படும்.இதனைத் தொடர்ந்து கொடிகள் ஒவ்வொன்றாக கீழிறக்கப்படும். பின்னர் பேண்டு மாஸ்டர் தமது இசைக்குழுக்கள் கலைந்து செல்ல குடியரசுத் தலைவரின் அனுமதிக் கோருகின்றார். அனுமதி பெற்று குடியரசுநாள் சடங்குகள் முடிந்ததாக அறிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து இசைக்குழுக்கள் பாடல்களை வாசித்தபடியே கலைந்து செல்கின்றன; தரைப்படை வழமையாக சாரே சகாங் சே அச்சா என்ற பாடலை வாசிக்கின்றனர். அவர்கள் ரைய்சினா குன்றைக் கடந்ததும் தலைமைச் செயலகத்தின் வடக்கு,தெற்கு வளாகக் கட்டிடங்கள் ஒளிவெள்ளத்தில் மூழ்குகின்றன. ஆபத்துதவிகளின் படைகள் வந்திறங்க, நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது;குடியரசுத் தலைவர் தமது இல்லத்திற்குத் திரும்புகின்றார்.[3][4]

1950 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தச் சடங்கு இதுவரை இரண்டு முறை இரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக குசராத்தில் 2001இல் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரிடரை அடுத்து 2001இல் நிறுத்தப்பட்டது; பின்னர் சனவரி 27, 2009இல் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மறைந்ததை அடுத்து அந்தாண்டும் இச்சடங்கு நடைபெறவில்லை[5]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Curtain Raiser – Beating Retreat Ceremony 2011". Ministry of Defence. 28 January 2011.
  2. 2.0 2.1 "Guard changes for May 2008" (PDF). Archived from the original (pdf) on 2008-11-13. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
  3. "Beating Retreat weaves soul-stirring musical evening". The Times of India. 29 January 2011. http://timesofindia.indiatimes.com/india/Beating-Retreat-weaves-soul-stirring-musical-evening/articleshow/7386283.cms. 
  4. "Martial music rings down the curtain". The Times of India. 30 January 2011 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104134834/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-30/delhi/28374820_1_republic-day-celebrations-bands-ceremony. 
  5. http://hindi.oneindia.in/news/2009/01/27/1233023655.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்வாங்கு_முரசறை&oldid=3715927" இலிருந்து மீள்விக்கப்பட்டது