பின்னி யங்கா
பின்னி யங்கா Binny Yanga | |
---|---|
![]() | |
பிறப்பு | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா | 7 சூலை 1958
இறப்பு | 3 செப்டம்பர் 2015 குவகாத்தி, இந்தியா | (அகவை 57)
பணி | சமூக சேவகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979–2015 |
பெற்றோர் | பினி இயைப்பு பினி யான்யா |
விருதுகள் | பத்மசிறீ மருத்துவர் துர்காபாய் தேசுமுக் விருது சிறு தொழில் சங்கங்களின் கழக தொழில்முனைவோர் விருது தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக விருது தேசிய பழங்குடியினர் விருது இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சககரித ரத்னா விருது கிழக்கு பனோரமா சாதனையாளர் விருது |
பின்னி யங்கா (Binny Yanga) இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகராவார். இந்திய தேசிய திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினராகவும்[1][2] அருணாச்சல பிரதேசத்தை தளமாகக் கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பான ஓச்சூ நலச் சங்கத்தின் நிறுவனராகவும் அறியப்படுகிறார்.[3][4][5][6] சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் நலனுக்காகவும், குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம் மற்றும் வரதட்சணை போன்ற சமூக நோய்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்.[7] 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை பின்னி யங்காவிற்கு வழங்கி கௌரவித்தது.[8]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பின்னி யங்கா, இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் முன்னாள் அரசியல் உதவியாளராக இருந்த மறைந்த பின்னி இயைப்பு மற்றும் பாரம்பரிய கைத்தறி மறுமலர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற பின்னி யான்யா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர்களது இரண்டு மகள்களில் இவர் மூத்த மகள் ஆவார். இளைய மகள் கும்ரி ரிங்கு, அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[9] இராசத்தானில் உள்ள பனசுதலி வித்யாபீடத்தில் தனது கல்வியை முடித்த பின்னி யங்கா, தனது மாணவப் பருவத்தில், அனைத்து சுபன்சிரி மாவட்ட பெண்கள் நலச் சங்கம் என்ற ஒரு பெண்கள் மன்றத்தை உருவாக்கினார்.[1] படிப்புக்குப் பிறகு, ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில், 1979 ஆம் ஆண்டில் ஒரு வயது வந்தோர் கல்வி மற்றும் மழலையர் காப்பக மையத்தையும், பின்னர், ஆதரவற்ற பெண்களுக்கான ஒரு தங்குமிடத்தையும் அமைத்தார்.[1] 1987 ஆம் ஆண்டு, யங்கா அருணாச்சல காவல் படையில் சேர்ந்தார். அப்போது 1987 ஆம் ஆண்டு மாநிலத்தில் முதல் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.[1][7] காவல் படையில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பிறகு, முழுநேர அடிப்படையில் சமூக சேவையில் ஈடுபடுவதற்காக 1988 ஆம் ஆண்டில் பதவி விலகினார்.[3]
2007 ஆம் ஆண்டில் பின்னி யாங்காவுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனாலும் இவர் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் நகர்லகுனில் வசித்து வந்தார். 200 தொழிலாளர்களைப் பணியமர்த்தும் ஒரு சிறிய நிறுவனமான ஓச்சு கைவினை மையத்தை வைத்திருந்தார்.[10] 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.[11]
ஓச்சூ நலச் சங்கமும் சமூக வாழ்க்கையும்
[தொகு]1979 ஆம் ஆண்டு தொடங்கிய வயது வந்தோர் கல்வி மற்றும் மழலையர் காப்பக மையத்தை 1988 ஆம் ஆண்டு ஓச்சூ நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கமாக பின்னி யங்கா பதிவு செய்தார்.[1][7] இந்த மையம் பல ஆண்டுகளாக பெரிய அளவிலான ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு அமைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக சேவை செய்யும் பல பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. செப்பாவில் 100 சிறுவர் மற்றும் சிறுமியர் மாணவர்களைக் கொண்ட ஓர் இலவச கல்வி நிறுவனம், 150 அனாதை குழந்தைகளைக் கொண்ட சிசு கிரே என்ற குழந்தைகள் இல்லம், 45 ஆதரவற்ற பெண்கள் அல்லது பெண்களை தங்க வைக்கும் திறன் கொண்ட தற்காலிக வசிப்பிடமான குறுகிய கால தங்குமிட இல்லம், பணிபுரியும் பெண்கள் விடுதி, குடும்ப ஆலோசனை மையம் மற்றும் பெண்கள் உதவி மையம் ஆகியவற்றை ஓச்சூ நலச்சங்கம் பராமரிக்கிறது.[1][3][5][7] தவாங் மாவட்டத்தில் இயாங்கில் கசுதூர்பா காந்தி பாலிகா வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியையும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியையும், ஒரு தொழிற்கல்வி மையத்தையும் ஓச்சூ நலச் சங்கம் நடத்துகிறது. சங்கத்தின் வளாகத்தில் மத்திய அரசு நிறுவனங்களையும், மாநில வள மையத்தையும் இச்சங்கம் நடத்துகிறது.
சுகாதாரம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கருத்தரங்குகளை பின்னி யங்கா ஏற்பாடு செய்தார். மேலும் இந்தியாவின் பாரம்பரிய கைவினைகளை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டார். இதற்காக கிராமப்புற கைவினைஞர்களுக்கான சந்தைப்படுத்தல் நிறுவனமான இம்கிரி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை நிறுவினார். இந்த சங்கம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பூட்டான் போன்ற நாடுகளில் பல தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளது.[3]
பதவிகள்
[தொகு]பின்னி யங்கா இந்திய தேசிய திட்டமிடல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். மேலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (இந்தியா) கீழ் இயங்கும் இயன் சிக்சன் சன்சுதான் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில வள மையத்தின் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார். தேசிய எழுத்தறிவு இயக்க ஆணையம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு[12] (பழங்குடியினர் விவகார அமைச்சகம்), இந்திய தொழில்முனைவோர் நிறுவனம்,[13] குவகாத்தி மற்றும் மாவட்ட கிராமப்புற சுகாதார இயக்கம் ஆகிய இயக்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.
விருதுகள்
[தொகு]பத்மசிறீ விருது, மருத்துவர் துர்காபாய் தேசுமுக் விருது, சிறு தொழில் சங்கங்களின் கழக தொழில்முனைவோர் விருது, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக விருது, தேசிய பழங்குடியினர் விருது, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சககரித ரத்னா விருது, கிழக்கு பனோரமா சாதனையாளர் விருது[14] என பல விருதுகளை பின்னி யங்கா பெற்றுள்ளார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Indian Express". Indian Express. 14 June 2013. Archived from the original on 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "OWA". OWA. 2014. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "IFFCO" (PDF). IFFCO. 2012. Archived from the original (PDF) on 9 December 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "TOI". TOI. 28 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ 5.0 5.1 "Tribune". Tribune. 19 November 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ Binni Yanga (16 August 2013). The Cruzader of the Destitute (Video Documentary). People's Friend Foundation.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Woman's Panorama". Woman's Panorama. 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "FIWE". FIWE. 2014. Archived from the original on 19 November 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "OCC". OCC. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "Arunachal activist Binny Yanga dies of illness". The Asian Age. Archived from the original on 2015-09-23.
- ↑ "TRIFED". TRIFED. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "IIE". IIE. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "Eastern Panorama". Eastern Panorama. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Civil Investiture Ceremony - Padma Shri". Video. YouTube. 4 April 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
- Binni Yanga (16 August 2013). The Cruzader of the Destitute (Video Documentary). People's Friend Foundation.