பினகோல் இணைப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினகோல் பிணைப்பு வினைகள்

பினகோல் பிணைப்பு வினை (Pinacol coupling reaction) என்பது தனி உறுப்பு செயல்முறை ஒன்றில், ஒரு இலத்திரன் ஈனி முன்னிலையில் ஆல்டிகைடு அல்லது கீட்டோன் தொகுதிகளில் உள்ள கார்போனைல் தொகுதிகளுக்கிடையே கார்பன்-கார்பன் பிணைப்பு உருவாகக் கூடிய கரிம வினை ஆகும்.[1] இந்த வினையின் விளைபொருளானது அருகருகேயுள்ள டையால் ஆகும். இந்த வினையானது அசிட்டோனை வினைக்காரணியாக பயன்படுத்தும் வினையில் கிடைத்த விளைபொருளான பினகோல் (2,3-டைமெதில்-2,3-பியூட்டேன்டையால் அல்லது டெட்ராமெதிலீன் கிளைக்கால்) கிடைக்கப்பெற்றமையிலிருந்து பினகோல் இணைப்பு வினை என அழைக்கப்படுகிறது. வழக்கமாக இந்த வினையானது ஒரே விதமான மூலக்கூறுகளுக்கிடையேயான இணைப்பைக் கொண்டதாகும். இருப்பினும் வெவ்வேறு மூலக்கூறுகளுக்கிடை உருவாகும் கலப்பின பிணைப்பும் சாத்தியமாகும். பினகோலானது, 1859 ஆம் ஆண்டு வில்கெல்ம் ரூடால்ஃப் ஃபிட்டிங் என்பவரால் கண்டறியப்பட்டது.

வினை வழிமுறை[தொகு]

இந்த வினையின் முதல் படியானது, ஒரு கார்போனைல் தொகுதியானது மக்னீசியம் போன்ற ஒடுக்கும் வினைக்காரணியினால் ஒரு எலக்ட்ரான் ஒடுக்கத்திற்குட்பட்டு கீட்டைல் தனி உறுப்பு எதிரயனித் தொகுதியாக மாற்றப்படுவதாகும். இரண்டு கீட்டைல் தொகுதிகள் ஒரு பிணைப்பு வினையில் ஈடுபட்டு அருகருகாமையில் உள்ள டையாலைத் (இரண்டு ஐதராக்சில் தொகுதிகளும் புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டவை) தருகின்றன. நீர் அல்லது மற்றொரு புரோட்டான் ஈனியைச் சேர்ப்பது டையாலைத் தருகிறது. மக்னீசியத்தை இலத்திரன் ஈனியாகக் கொண்டிருக்கும் வினையில் தொடக்க விளைபொருளாளது 5-உறுப்பு வளைய சேர்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு ஆக்சிசன் அணுக்களுகம் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட Mg2+ அயனியோடு ஈந்திணைப்பிணைப்பில் உள்ளன. இந்த அணைவுச் சேர்மமும், நீரினால் சிதைந்து மெக்னீசியம் ஐதராக்சைடை உருவாக்குவதில் முடிவடைகிறது. பினகோல் இணைப்பு வினையானது பினகோல் மறுஒழுங்காக்கும் வினையால் பின்தொடரப்படுகிறது. இதை ஒத்த வினையான மெக்முர்ரே வினையானது, டைட்டானியம்(III) குளோரைடு அல்லது டைட்டானியம்(IV) குளோரைடு ஆகியவை ஒரு ஒடுக்கியின் உடன் வினைப்பட்டு உலோக-டையால் அணைவுச்சேர்மத்தை உருவாக்கும் வினையை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த வினையானது கூடுதலாக, ஒரு ஆல்க்கீனைத் தரும் பொருட்டு ஆக்சிசன் நீக்க வினைப்படி ஒன்றையும் கொண்டுள்ளது.

வாய்ப்பளவு[தொகு]

பென்சால்டிகைடானது பினகோல் இணைப்பில் ஒளிவேதியியல் வினை மூலமாகவோ [2] அல்லது வனேடியம்(III) குளோரைடு அல்லது அலுமினிய உலோகத்தை ஒடுக்கியாப் பயன்படுத்துவதன் மூலமாகவோ ஈடுபடுகிறது.[3] நீரில், அறை வெப்பநிலையில் நடைபெறக்கூடிய இந்த பலபடித்தான வினையானது, மூன்று நாட்களுக்குப் பிறகு வேற்றொளிமாற்றிய சேர்மம் (dl) மற்றும் உடனிசைவு மாற்றிய சேர்மம் (meso) ஆகியவை 56:44 என்ற இயைபில் 72% அளவிற்கு விளைபொருட்கள் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. R. Fittig (1859). "Ueber einige Producte der trockenen Destillation essigsaurer Salze". Justus Liebigs Ann. Chem. 110: 23–45. doi:10.1002/jlac.18591100103. 
  2. W. E. Bachmann (1943). "Benzopinacol". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0071. ; Collective Volume, vol. 2, p. 71
  3. Xiaoliang Xu; Toshikazu Hirao (2005). "Vanadium-Catalyzed Pinacol Coupling Reaction in Water". J. Org. Chem. 70 (21): 8594–96. doi:10.1021/jo051213f. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினகோல்_இணைப்பு_வினை&oldid=2662194" இலிருந்து மீள்விக்கப்பட்டது