பித் காகிதம்

பித் காகிதம் (Pith paper) என்பது கிழக்கு ஆசிய புதர்களின் ஒருவகை பேரினமான டெட்ராபானாக்சு பாப்பிரைஃபரின் உள்ளீட்டிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சீன காகித ஒப்புமை மற்றும் காகித கைவினைப் பொருளாகும். இந்தக் காகிதம் ஒளி ஊடுருவக்கூடியது, இயற்கையாகவே வெள்ளை நிறமானது, மென்மையானது மற்றும் மிகவும் நளினமானது; ஐரோப்பிய வர்த்தகர்கள் இது அரிசியால் ஆனது என்று கருதி, இதை அரிசிக் காகிதம் என்ற தவறான பெயரில் குறிப்பிட்டனர்.[1]
வரலாறு
[தொகு]சின் வம்சத்தின் ஆரம்பத்திலேயே பித் காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது, அப்போது சசன் பேரரசர் கூய், யுவான்காங் காலத்தில் (கி.பி. 299-300) பல வண்ண பித் காகிதப் பூக்களை வாங்கச் செய்தார். பித் காகிதப் பூக்கள் சீன கொண்டை ஊசிகளில் இடம்பெற்றன. மேலும் இவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் அணியப்பட்டன. மிங் வம்சத்தின் போது, பித் காகிதப் பூக்கள், முதன்மையாக சியாங்சுவில், அதிக அளவில் தயாரிக்கப்படத் தொடங்கின, மேலும் பூ கொண்டை ஊசிகள் பெண்களின் சிறப்பு நிகழ்வுகளுக்கான அணிகலனாக மாறின.[1][2]
19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், கான்டன் அமைப்பில் விற்பனை செய்யப்படும் நீர்வர்ணம், கௌவாசு, டெம்பரா மற்றும் மை ஓவியங்களுக்கு பித் காகிதம் ஒரு விருப்பமான ஓவியத் தாங்கியாக மாறியது. ஓவியத்தின் உள்ளார்ந்த மதிப்பைத் தவிர, பித் காகிதத்தின் தனித்துவமான குணங்கள் மற்றும் குறைந்த எடை ஆகியவை ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பித் காகித ஓவியங்களைப் பிரபலமாக்கின. ஓவியங்கள் பெரும்பாலும் பட்டு நாடாச் சட்டங்கள் கொண்ட படத்தொகுப்புகளில் ஒட்டப்பட்டன.[1][2][3][4][5]
தைவான் மற்றும் தெற்கு சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பித் காகிதம் தொடர்கிறது. தென் அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது.[2]
அரிசிக் காகிதம் தவறான பெயர்
[தொகு]19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு பித் காகித ஓவியங்கள் வந்தபோது, பித் காகிதம் மேற்கத்திய நாடுகளில் 'அாிசிக் காகிதம்' என்ற தவறான பெயராலும், டெட்ராபானாக்சு 'ரைசு-பேப்பர் பிளான்ட்' என்ற பெயராலும் அறியப்பட்டது. 1852 இல் பித் காகிதம் டெட்ராபானாக்சு பித்திலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை மேற்கத்திய உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமை பிரித்தானிய தாவரவியலாளர் வில்லியம் சாக்சன் கூக்கரைச் சேரும்.[1]

உற்பத்தி மற்றும் பயன்பாடுகள்
[தொகு]பாரம்பரிய பித் காகித உற்பத்தியானது, டெட்ராபானாக்சு மரக்கிளைகளைப் பட்டையிலிருந்து பித்தை விடுவிப்பதற்காகப் பல நாட்கள் ஊறவைப்பதன் மூலம் தொடங்குகிறது. நவீன பித் காகித உற்பத்தியானது, ஊறவைப்பதைத் தவிர்த்து, மரக்கட்டைகளிலிருந்து பித்தை சுத்தியலால் அடித்து வெளியே எடுக்கிறது.[2] பின்னர், பித் ஒரு கத்தியால் நீளவாக்கில் தாள்களாக உரிக்கப்படுகிறது. இவை இறுதியாக உலர்த்துவதற்கு முன்பு ஈரப்பதத்துடன் மேலும் வடிவமைக்கப்படலாம்.[1]
பித் காகிதம் உடையக்கூடியதாகவும், ஈரத்தை உறிஞ்சக்கூடியதாகவும் இருப்பதால், இதை மீண்டும் சரிசெய்வதையும் பாதுகாப்பதையும் கடினமாக்குகிறது. இருப்பினும், இந்த பண்பை நீர்வண்ணக் காகிதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் காகிதத்தின் வண்ணம் தீட்டப்பட்ட பகுதிகள் தங்களைத் தாங்களே புடைப்புச் சிற்பமாக மாற்றிக்கொள்ளும். பித் காகிதம், காகிதக் கைவினையில் பயன்படுத்தப்படும் சாயங்களையும் எளிதில் ஏற்றுக்கொள்கிறது.[3][5]
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 Chinese Pith Paintings, Faculty of Arts and Sciences, Harvard University, 2011
- 1 2 3 4 Tsai, Fei Wan (April 1999). "Historical Background of Tetrapanax Pith Paper Artifacts". The Ethnographic Conservation Newsletter (International Council of Museums) (19): 10-13. https://www.icom-cc.org/dlfile.aspx?file=https://www.icom-cc.org/docs/content/The-Ethnographic-Conservation-Newsletter-19_APRIL-1999.pdf.
- 1 2 Barnott-Clement, Rebecca; Chu, Cancy (June 2017), "Layered Decisions: A Pith Painting Treatment", AICCM National Newsletter, no. 138, Australian Institute for the Conservation of Cultural Material
- 1 2 Boone, Terry (May 2003), "Preserving Pith Paintings", Information Bulletin, U.S.A.: Library of Congress
- 1 2 Hasler, Eleanor (2017-05-26), Conserving Chinese pith paintings, The Royal Botanic Gardens, Kew