பிணை (கூத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிணை என்னும் சொல் தழுவி ஒழுகுதலைக் குறிக்கும். திருமணமான புதுமணப் பெண்ணை வாழ்த்தும் மக்களைப் பெற்ற மகளிர் வாழ்த்தும்போது பெற்றோர் விரும்பும் பிணைப்புடன் வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர்.[1] பிணை என்பது பிணையூப விளையாட்டாகவும், பிணையூஉ என்னும் கூத்தாகவும் பழங்காலத்தில் ஆடப்பட்டுவந்தது.

பிணையூபம் என்பது ஆளேற்றத் தூண் விளையாட்டு. சாரணர் சிறுவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறிப் பிரமிட் செய்து காட்டுவர். மதுரைக்காஞ்சி இந்த்த் திளைப்பு விளையாட்டை விளக்குகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றாலம் அருவி கொட்டும் பொதியமலைப் போரில் வென்றான். அந்தப் போரில் விழுந்துகிடப்போரின் புலாலை வாயில் அதவிக்கொண்டு பேய்மகளிர் கூட்டொலி எழுப்பிக்கொண்டு இரண்டின் தோள்மேல் மற்றொன்று என்று ஏறி யூபம்(தூண்) விளையாட்டு விளையாடித் திளைத்தனவாம்.[2]

இது பிணையூஉ என்னும் மகளிர் கூத்தாகவும் நிகழும். முருகன் புகழைப் பாடிக்கொண்டு பொது மன்றங்களில் மகளிர் இந்தக் கூத்தினை ஆடுவர். அப்போது ஒருவரோடு ஒருவர் தழுவிப் பிணைந்து அசைந்தாடுவர்.[3]

அடிக்குறிப்பு[தொகு]

 1. 'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
  பெற்றோற் பெட்கும் பிணையை ஆக' அகநானூறு 86
 2. நிணம் வாய் பெய்த பேய் மகளிர்
  இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
  பிணை யூபம் எழுந்து ஆட மதுரைக்காஞ்சி 25-27
 3. கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
  சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
  மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும் மதுரைக்காஞ்சி 613-615
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணை_(கூத்து)&oldid=3501726" இலிருந்து மீள்விக்கப்பட்டது