பிடன் டி லா ஃபோர்னைஸ்

பிடன் டி லா ஃபோர்னைஸ் (Piton de la Fournaise) என்பது இந்தியப் பெருங்கடலில் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கேடய எரிமலையாகும். அவாயித் தீவுகளில் உள்ள கிலாயூயா, இத்தாலியில் ஸ்ட்ரோம்போலி, எட்னா எரிமலைகள், அந்தாட்டிக்காவில் உள்ள மவுண்ட் எரெபஸ் ஆகியவை போன்று இது உலகில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும். இதன் முந்தைய எரிமலை வெடிப்பு 2006 ஆகத்தில் தொடங்கி 2007 சனவரியில் முடிந்தது. அந்த எரிமலை மீண்டும் 2007 பிப்ரவரி 21 2008 செப்டம்பர், 2010 திசம்பர் 9 (இது இரண்டு நாட்கள் நீடித்தது) [1] மேலும் 2015 ஆகத்து 1 ஆகிய நாட்களில் மீண்டும் வெடித்தது. [2] மிக அத்ணைய வெடிப்பு 2022 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. [3] இந்த எரிமலை உலக பாரம்பரிய தளமான ரீயூனியன் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது.
ரீயூனியனில் வசிப்பவர்கள் சில சமயங்களில் பிடன் டி லா ஃபோர்னைஸை வெறுமனே லெ வோல்கன் ("எரிமலை") என்று குறிப்பிடுகின்றனர். இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
புவியியல்
[தொகு]எரிமலையின் உயரமான பகுதியை, 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) அகலமுள்ள என்க்ளோஸ் ஃபோக்வேவால் என்னும் எரிமலைப் பெருவாய் ஆக்கிரமித்துள்ளது. பிரெஞ்சு மொழியில் ரெம்பார்ட்ஸ் என்று அழைக்கப்படும் உயரமான பாறைகள் எரிமலைக் குழியின் விளிம்பாக உள்ளன. அந்த எரிமலைவாய் தென்கிழக்கு திசையில் கடலை நோக்கிப் பிளவுபட்டுள்ளது. எரிமலையின் கிழக்குப் பகுதி நிலையற்றதாக உள்ளது. மேலும் நிலச்சரிவின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது இறுதியில் இந்தியப் பெருங்கடலில் சரிந்து விழும், மேலும் பாறைச்சரிவு ஏற்பட்டால், அது ஒரு மாபெரும் ஆழிப்பேரலையை உருவாக்கக்கூடும். [4] நீருக்கடியில் உள்ள சரிவுகளிலும் சுற்றியுள்ள ஆழ்கடல் சமவெளியிலும் முந்தைய சரிவுகளுக்கான சான்றுகளாக உள்ளன. கீழ் சரிவுகள் கிராண்ட் புரூலே ("பெரிய எரிந்த பகுதி") என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான எரிமலை வெடிப்புகள் எரிமலைவாய் பகுதிக்குள்ளேயே கட்டுப்படுகின்றன.
அந்த எரிமலைக் குழியின் உள்ளே டோலோமியூ எனப்படும் 400 மீட்டர் உயரமுள்ள (1,300 அடி) ஒரு எரிமலைக் கேடயம் உள்ளது. இந்த எரிமலைக் கேடயத்தின் உச்சியில் போரி பள்ளம் ( க்ரேட்டேர் போரி ) மற்றும் டோலோமியூ பள்ளம் ( க்ரேட்டேர் டோலோமியூ ) ஆகியவை அமைந்துள்ளன. இவ்விரண்டில் டோலோமியூ பள்ளமே பரப்பளவில் மிகவும் பெரியது. இது பிரெஞ்சு புவியியலாளர் டியோடாட் கிராடெட் டி டோலோமியூ என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

எரிமலைப் பெருவாய்க்கு உள்ளேயும் எரிமலையின் உயரமான சரிவுகளிலும் பல எரிமலைக் குழிகளும் சிதறிய கூம்பு வடிவப் பாறை அமைப்புகளும் காணப்படுகின்றன. அதிக செறிவுள்ள இரிடியம் கொண்ட எரிமலைக்குழம்புகள் இந்த துவாரங்கள் வழியாக தொடர்ந்து வெளியேறுகின்றன. உச்சிக்குச் செல்லும் பாதையின் தொடக்கத்தில், பார்மிகா லியோ என்றழைக்கப்படும் ஒரு சிறிய, குறிப்பிடத்தக்க பள்ளம் அமைந்துள்ளது; இது குழிநரியின் மணல் குழிப் பொறி போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் அப்பெயரைப் பெற்றது.
முக்கிய எரிமலைப் பெருவாயின் வெளியே அமைந்துள்ள காமர்சன் கிரீடர், செயலற்ற ஒரு எரிமலைப் பெருவாயாகும். இது குறிப்பாக வெப்பமண்டலப் புயல்களின் போது அதிக மழைப்பொழிவைப் பெறுவதற்காகப் புகழ்பெற்றது. 1980 சனவரியில் ஏற்பட்ட ஹயாசிந்த் புயலின் போது, அதில் 15 நாட்களில் 6,433 மில்லிமீட்டர் (253.3 அங்குலம்) மழை பொழிந்தது. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு வெப்பமண்டலப் புயலால் பெய்த அதிகபட்ச மழையாகும். [5]
எரிமலைக்கு அருகிலுள்ள சில கடற்கரைகள், பிக்ரைட் பசால்ட் லாவாவிலிருந்து உருவாகும் ஆலிவின் மணல் காரணமாக, பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. கிராண்ட் ப்ரூலே, பலநூறாயிரம் ஆண்டுகளாக குவிந்த உறைந்த எரிமலைக்குழம்பு பாறைகளால் உருவாகியுள்ளது; இவற்றில் மிக அண்மைக் காலத்தவை பெரும்பாலும் மிகவும் கருமையாகவும் தாவரங்கள் அற்றவையாகவும் இருக்கின்றன. அதே சமயம் பழைய பாறைகள் அடர்ந்த இயற்கைத் தாவரங்கள் நிறைந்தவையாக உள்ளன.
இந்த எரிமலை 530,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. மேலும் அதன் வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும், அதன் எரிமலைக் குழம்புப் பாய்ந்து, ரீயூனியன் தீவின் வடமேற்கு பகுதியில் மூன்றில் இரண்டு பகுதியை உருவாக்கிய, பெரிய, பழமையான மற்றும் பெரிதும் அரிக்கப்பட்ட செயலற்ற எரிமலையான பிட்டன் டெஸ் நீஜசின் பாய்வுகளுடன் கலந்திருந்தன. 250,000, 65,000 மற்றும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று முறை எரிமலைவாய் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த எரிமலை ரீயூனியன் ஈர்ப்பிடத்தால் உருவானது. இது கடந்த 66 மில்லியன் ஆண்டுகளாக செயலில் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சீற்றங்களுக்குச் சான்றுகள் உள்ளன. சுமார் 4,700 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பெரும் எரிமலை வெடிப்பின் எரிமலை வெடிப்புத் தன்மைக் குறி (VEI) 5 ஆக இருந்திருக்கலாம், இது 1980 மே 18 அன்று புனித எலன்சு மலை எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பின் வெடிப்புத் தன்மைக் குறிக்குச் சமமானதாகும்.
வெடிப்புகள்
[தொகு]


பிடோன் டி லா ஃபோர்னைசின் பெரும்பாலான வெடிப்புகள் ஹவாய் பாணியில் நிகழ்கின்றன: நீர்ம நிலையில் உள்ள பசால்டிக் எரிமலைக்குழம்பு வெளியேறி, எரிமலை வாயில் நீரூற்று போல தீப்பிழம்புகள் பீறிட்டு எழுகின்றன. எப்போதாவது, நீராவி வெடிப்புகளும் (நிலத்தடி நீராவியால் உருவாகும் வெடிப்புகள்) ஏற்படுகின்றன. கிராண்ட் ப்ரூலே வழியாகப் பாயும் எரிமலைக் குழம்புகள் அவ்வப்போது கடலை அடைகின்றன. பிட்டன் டி லா ஃபோர்னைஸ் உலகின் மிகவும் உயிர்ப்புள்ள எரிமலைகளில் ஒன்றாகும்; 17 ஆம் நூற்றாண்டு முதல் இதில் 150-க்கும் மேற்பட்ட எரிமலை வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எரிமலைப் பெருவாயிக்குள் ஏற்படும் வெடிப்புகள் தீவு மக்களுக்கு குறைந்த அச்சுறுத்தலையே ஏற்படுத்துகின்றன. எரிமலைப் பெருவாயில் மக்கள் வசிக்காதது, மேலும் நெடுஞ்சாலையைத் தவிர வேறு எந்த உள்கட்டமைப்பும் அங்கு இல்லாதது ஒரு காரணம் ஆகும். பொதுவாக எரிமலைக் குழம்புப் பாய்வுகள் எரிமலை வாய்க்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும், சில சமயங்களில் அவை என்2 நெடுஞ்சாலையைக் கடந்து சென்றதும் அறியப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் சாலை சேதமடைந்த பகுதிகளில், சாலை புனரமைக்கப்பட்ட பிறகு, எரிமலை வெடித்த ஆண்டைக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படுகின்றன. 2000-களின் முற்பகுதியில், அந்த நெடுஞ்சாலை ஆண்டுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சேதமடைந்தது. ஒவ்வொரு முறையும், எரிமலைக் குழம்பு குளிர்ந்த பிறகு, பொறியியல் துறையினர் சாலையைச் சீரமைத்தனர். எரிமலை வெடிப்புக்குப் பிறகு, எரிமலைக் குழம்பு பாய்ந்த சில பகுதிகள் பல மாதங்களுக்கு வெப்பமாகவே இருந்துள்ளன; மழைக்காலத்தில் அந்தப் பகுதிகளிலிருந்து நீராவி வெளியேறியதே இதற்குச் சான்றாகும்.
எரிமலைப் பெருவாயிக்கு வெளியே ஏற்படும் எரிமலை வெடிப்புகள் மக்களுக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கக்கூடும், ஆனால் அவை அரிதானவை. எரிமலைப் பெருவாயிக்கு வெளியே ஆறு எரிமலை வெடிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் கடைசியாக 1986-ல் நிகழ்ந்தது. எரிமலைப் பெருவாயிக்கு வெளியே ஆறு வெடிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 1977-ல், பிட்டன்-செயின்ட்-ரோஸ் கிராமம், பல கட்டிடங்களை அழித்த ஒரு எரிமலைக் குழம்புப் பெருக்கினால் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த எரிமலைக் குழம்புப் பெருக்கானது நெடுஞ்சாலையைக் கடந்து, உள்ளூர் தேவாலயத்தைச் சூழ்ந்து, அதன் முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது. பின்னர், கட்டடத்தை அழிக்காமல் நின்றுவிட்டது. பின்னர், முன் வாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டது, மேலும் அந்த தேவாலயம் 'நோட்ரே-டேம் டெஸ் லாவ்ஸ்' ("எரிமலைக் குழம்புகளின் அன்னை") என்ற பெயரில் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
2007 ஏப்ரலில் நடந்த வெடிப்பின் போது, ஒரு நாளைக்கு சுமார் 3,000,000 கன மீட்டர்கள் (110 மில்லியன் கன அடி) எரிமலைக் குழம்பு வெளியேறியது. அந்த வெடிப்பின் போது, டோலோமியூ எரிமலைவாயில் ஒன்பது நாட்களுக்கு மேல் படிப்படியான சரிவு ஏற்பட்டது. [6] இந்தச் சரிவின் காரணமாக, 0.8 கி.மீ × 1.1 கி.மீ (0.50 மைல் × 0.68 மைல்) பரப்பளவுள்ள தரைப்பகுதி 330 மீட்டர் (1,080 அடி) கீழே சரிந்தது, இதன் கன அளவு 120 மில்லியன் கன மீட்டராகும் (4.2 பில்லியன் கன அடி).
உள்ளூர் நேரப்படி 2023 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் காலை 8:30 மணிக்கு ஒரு எரிமலை வெடிப்பு தொடங்கியது. [3] 2026 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் மற்றொரு எரிமலை வெடிப்பு தொடங்கியது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Le Piton de la Fournaise en direct (9 December 2010 – 9 April 2011)" (in பிரெஞ்சு). Observatoire volcanologique du Piton de la Fournaise, Institut de Physique du Globe de Paris. Archived from the original on 27 April 2011.
- ↑ Klemetti, Erik (2014). "New Eruption at Piton de la Fournaise on Reunion Island". Wired. Archived from the original on 22 June 2014.
- 1 2 "Première éruption 2023 du piton de la Fournaise". Île de la Réunion Tourisme (in பிரெஞ்சு). 2023-07-03. Retrieved 2023-07-13.
- ↑ "Science of Tsunami Hazards" (PDF). Journal of Tsunami Society International. University of Oregon. 2013. Retrieved 2025-10-05.
- ↑ Landsea, Christopher W; Hurricane Research Division (12 March 2007). "Subject: E4) What are the largest rainfalls associated with tropical cyclones?". Tropical Cyclone Frequently Asked Questions. Archived from the original on 3 December 2013. Retrieved 12 April 2013.
- ↑ "Le Piton de la Fournaise en direct (9 December 2010 – 9 April 2011)" (in பிரெஞ்சு). Observatoire volcanologique du Piton de la Fournaise, Institut de Physique du Globe de Paris. Archived from the original on 27 April 2011.
- ↑ "Le Piton de la Fournaise en direct (9 December 2010 – 9 April 2011)" (in பிரெஞ்சு). Observatoire volcanologique du Piton de la Fournaise, Institut de Physique du Globe de Paris. Archived from the original on 27 April 2011.