உள்ளடக்கத்துக்குச் செல்

பிசிசுட்ரேடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசிசுட்ரேடசு
19 ஆம் நூற்றாண்டின் சித்தரிப்பு
பதவியில்
கி.மு. 561, கி.மு. 559–556, கி.மு. 545–527
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புc. கி.மு 600 [1]
ஏதென்ஸ், கிரேக்கம்
இறப்புகி.மு. 527 வசந்த காலம்[2]
ஏதென்ஸ், கிரேக்கம்

பிசிசுட்ரோசு (Pisistratus அல்லது Peisistratus ( கிரேக்கம்: Πεισίστρατος Peisistratos ; c. கி.மு 600 – 527 ) என்பவர் கி.மு. 561 முதல் 527 இற்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய ஏதென்சின் ஆட்சியாளராக இருந்தவராவார். ஏதென்சை உளடக்கிய கிரேக்கத்தின் முக்கோண தீபகற்பமான அட்டிகாவை ஒன்றிணைத்து, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாடுகளுடன் உருவாக்கி, பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சின் பிற்கால முக்கியத்துவத்திற்கான அடித்தளத்தை இவர் உருவாக்கினார்.[3] இவர் பனாதெனிக் விளையாட்டுகளில் பரிசு பெற்றவர். மேலும் இவர் ஓமரின் காவியங்களின் இறுதியான பதிப்பை அறிஞர் குழுவைக்கொண்டு உருவாக்கினார். ஏதென்சின் அடித்தட்டு வகுப்பினரின் ஆதரவைப் பெற்ற பீசிசுட்ராடோசு சனரஞ்சகத்தின் ஆரம்ப கால உதாரணம்.[4] ஆட்சியில் இருந்தபோது, உயர்குடியினரை எதிர்கொண்டு அவர்களின் சலுகைகளை வெகுவாகக் குறைத்து, அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்கவும் தயங்கவில்லை. பெய்சிசுட்ராடோசு பல சமய மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிதியளித்தார்.[5] பொருளாதாரத்தை மேம்படுத்தி, ஏதெனியன் மக்களிடையே பொருளாதார சமநிலையே ஏற்படுத்தினார்.

பெய்சிசுட்ராடிட்சு என்பது மூன்று சர்வாதிகாரிகளுக்கான பொதுவான குடும்பம் அல்லது குலப்பெயர் ஆகும். அவர்கள் கிமு 546 முதல் 510 வரை ஏதென்சில் ஆட்சி செய்தனர். இது பெய்சிசுட்ராடோசு மற்றும் அவரது இரண்டு மகன்களான இப்பார்கோசு மற்றும் இப்பியாசைக் குறிக்கிறது .

பின்னணி

[தொகு]

பண்டைய கிரேக்க அரசாங்கங்கள் பாரம்பரியமாக முடியாட்சி அடிப்படையிலானவை. அவை கிமு 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை.[6] பண்டைய காலத்தில் அதாவது கி.மு. 7 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் , கிரேக்க நகர அரசுகள் உருவாகத் தொடங்கின. அரசியலில் செல்வம், நிலம், சமயம், அரசியல் போன்றவற்றில் உயர்குடி குடும்பங்களே அதிகாரம் செலுத்தின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க குடும்பங்களாக ஹெராக்கிள்ஸ் (ஹெராக்கிள்ஸ்) அல்லது திரோயன் போரில் கலந்துகொண்ட மூதாதையர் போன்ற ஒரு பழம்பெரும் அல்லது தொன்மங்களில் கூறப்பட்ட நிறுவனர்/மன்னர்களின் வம்சாவளியாக தங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.[7][8] கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில், ஏதென்சின் முக்கிய பிரபுத்துவ குடும்பங்களாக பீசிஸ்ட்ராடிட்ஸ், பிலாய்ட்ஸ், அல்க்மியோனிட்ஸ் போன்றவை இருந்தன.[9] பெய்சிஸ்ட்ராடிட் குலம் முதலில் கிரீஸின் மெசேனியா பகுதியில் அமைந்துள்ள வெண்கலக் கால நகரமான பைலோசின் மைசீனியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்களின் வம்சாவளியானது பைலோசின் தொன்மவியல் மன்னர் நெலியசிடம் இருந்து கொடர்புபடுத்தப்பட்டது. மன்னர் நெலியசின் மகன் நெஸ்டர் திரோயன் போரில் போராடியவர்.[10][11]

இரண்டாவது குலம், அல்க்மியோனிட்ஸ் ஆகும். கிமு 6 ஆம் நூற்றாண்டில் அந்தக் குலத்தின் பெயர் அல்க்மியோன் மற்றும் அவரது மகன் மெகாக்லெஸ் வாழ்ந்த காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. பீசிஸ்ட்ராடோசின் ஆட்சியின் பல்வேறு கட்டங்களில் அவரைபீசிஸ்ட்ரை எதிர்த்தனர் மற்றும் ஆதரித்தனர். அக்காலகட்டத்தில் பிரபுத்துவ குடும்பங்களுக்கு இடையேயான உட்பூசல் மற்றும் ஒழுங்கை பராமரிக்க இயலா நிலை இருந்துவந்தது. இச்சூழலானது ஏழைகள் மற்றும் உரிமையற்றவர்களின் அதிருப்தி நிலையைப் பயன்படுத்தி கொடுங்கோலர் ஒருவர் அதிகாரத்திற்கு வருவதற்கான நல்ல சந்தர்ப்பம் இருந்தது.[12][6] பண்டைய காலத்தில் குறிப்பாக கிரேக்கத்தின் தொன்மையான காலத்தில், கொடுங்கோலர் என்வர் நவீன வரையறையின் பொருளில் பார்க்கப்படவில்லை. மாறாக, அரசியலமைப்பிற்கு முரணாக அதிகாரத்தைப் பெற்ற ஒரு ஆட்சியாளர். பொதுவாக பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தை மரபுரிமையாகப் பெறுவதைக் குறித்தது.[13] ஏதெனியன் கொடுங்கோன்மையின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வில், எரோடோட்டசு கி.மு. 636 அல்லது 632 இல், அக்ரோபோலிசை ஆக்கிரமித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில், ஈடுபட்ட ஒரு பண்டைய ஒலிம்பிக் விளையாட்டு வாகையரான கைலோனின் கதையை குறிப்பிடுகிறார். அவரது முயற்சி தோல்வியுற்றது. கைலோனும் அவரது ஆதரவாளர்களும் அல்க்மியோனிட்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏதெனிய அரசியல்வாதியும், சட்டமியற்றுபவரான சோலோன் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏதென்சின் சமூக வர்க்க அமைப்பை மறுசீரமைத்தார். மேலும் திராகோவால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பை சீர்திருத்தினார். அவரது பல சீர்திருத்தங்களில், கடனை திருப்பி செலுத்த இயலாமல் அடிமையாக்கபட்டவர்களை விடுவித்தார். இது பெரும்பான்மையாக இருந்த ஏழை ஏதெனியர்களுக்கு நல்லதாக இருந்தது. மேலும் நகர அரசின் பொது மக்களான டெமோக்களுக்கு உள்நாட்டுப் போரைத் தடுப்பதற்கும் சலுகைகளை வழங்கினார்.[14] இந்தப் பின்னணியில் இந்த ஏழை வர்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவைப் பெற்று அவர்களின் துணையோடு பெய்சிசுட்ராடோசு ஆட்சிக்கு வந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், அதிகாரத்திற்கு உயர்தலும்

[தொகு]
கிரேக்கத்தின் நிலப்பரப்பில் உள்ள அட்டிகா பகுதியின் இருப்பிடம்

பெய்சிசுட்ராடோசின் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இவரது தந்தை இப்போகிரட்டீஸ் 608 அல்லது 604 இல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். அவருக்கு பெய்சிசுட்ராடோசு என்ற மகன் பிறந்தான்.[15]

முதலில், பெய்சிசுட்ராடோசு ஏதெனியன் ஒரு ஜெனரலாக அறியப்பட்டார். இவர் கிமு 565 இல் அருகிலுள்ள நகர அரசான மெகாராவில் உள்ள நிசியா (அல்லது நிசியா) துறைமுகத்தைக் கைப்பற்றினார்.[16][15] இந்த வெற்றியால், முந்தைய பல தசாப்தங்களில் ஏதென்சில் உணவுப் பற்றாக்குறைக்கு காரணமாக இருந்த அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகத் தடை நீங்கி பொருட்கள் தாராளமாக கிடைத்தன.[17]

சோலோன் ஏதென்சிலிருந்து வெளியேறிய அடுத்ததடுத்த ஆண்டுகளில், ஏதென்சு நகரம் மேலும் பிளவுபட்டதாகவும் கொந்தளிப்பில் இருந்ததாகவும் அரிசுட்டாட்டில் தெரிவித்துள்ளார். ஏதென்சின் அரசதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர மூன்று தனித்துவமான அரசியல் பிரிவுகள் போட்டியிட்டதாக பல இரண்டாம் நிலை ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் புவியியல் (கீழே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது) மற்றும் பொருளாதார உணர்வு ஆகிய இரண்டிலும் பிரிக்கப்பட்டிருந்தன. சமவெளி மற்றும் கடற்கரையை அடிப்படையாகக் கொண்ட முதல் இரண்டு பிரிவுகள், மூன்றாவது பிரிவு உருவாவதற்கு முன்பே தோன்றியவை. ஹைலேண்ட்ஸ் (அல்லது மலை) என்று குறிப்பிடப்படும் மூன்றாவது குழுவினர் ஆவர். இந்த மூன்றாவது பிரிவினர் பெய்சிசுட்ராடோசுடன் இணைந்து செயல்படுவதற்கு அணியமாக இருந்தனர். இந்தப் பிரிவில் வறுமையில் இருந்த சாதாரண மக்கள், குடியுரிமையை இழக்க நேரிடும் என்று அஞ்சும் அண்மையில் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் கடன்களை திரும்ப அளிக்கும் திறன் இல்லாதவர்கள் போன்றோராவர்.[18] போட்டியிடும் பிரிவுகளின் பெயர்கள் அவர்களைக் குறிப்பிட்டுள்ள மூலத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன. சில குறிப்புகள் ஒவ்வொரு குழுவின் அமைப்பு பற்றிய விவரங்களை வழங்குகின்றன, மற்றவை இல்லை:

  • பீடியர் (Pedieis அல்லது Pediakoi): பிரிவினர் பிரபுக்கள் பிரிவனராவர். இவர்கள் சமவெளிகளில் வசிப்பவர்களாகவும், நில புலன்களின் உரிமையாளர்களாக இருந்து தானியங்களை உற்பத்தி செய்து வசதியாக வாழும் பிரிவினர். இவர்கள் லைகர்கஸ் தலைமையில் திரண்டனர்.[19]
  • பரலியோய் (Paralioi அல்லது Paraloi): இவர்கள் கடற்கரையை ஒட்டி வாழ்கின்ற மக்களாவர். இவர்கள் மெகாகிள்ஸ், அல்க்மேயோனிட், தலைமையில் இருந்தனர். பராலியோய் பிரிவினர் பீடியர்களைப் போல வலுவானவர்களாக இல்லை.[19] இம்மக்கள் கடலோரமாக வணிகத்தில் ஈடுபடுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், துண்டு நிலங்களை உடையவர்கள் ஆவர்.
  • ஹைபராக்ரியோய் (Hyperakrioi) : இந்தப் பிரிவினர் மலைப்பகுதிகளிலும், மேட்டுப்பாங்கான இடங்களிலும் வாழ்பவர்கள். மேலும் ஏதெனியன் மக்களில் மிகவும் ஏழ்மையானவர்கள். தேன், கம்பளி போன்ற பொருட்களை பண்டமாற்று முறையில் கொடுத்து தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்பவர்கள்.[19] பெய்சிஸ்ட்ராடோஸ் இவர்களை மூன்றாவது பிரிவாக, ஹைபராக்ரியோய் அல்லது மலைவாசிகளாக ஒண்றிணைத்தார். இந்த பிரிவினர் மற்ற இரண்டு பிரிவினரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தனர்.[17] ஆர். ஜே. ஹாப்பர் இந்தப் பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான பெயர்களை வழங்குகிறார். மேலும் அட்டிகாவில் உள்ள அவர்களின் பகுதியின்படி பெடியன், பராலியா, டியாக்ரியா என்று வகைப்படுத்துகிறார்.[20]

பொமரோயும் அவரது சக மூன்று எழுத்தாளர்களும் ஏதென்சின் மூன்று பிரிவினரை பின்வருமாறு கூறுகின்றனர்:

  • சமவெளி மக்கள்: இந்த மக்களில் பெரும்பாலும் பெரிய நில உரிமையாளர்கள் இருந்தனர்.
  • கடற்கரை மக்கள்: மீனவர்கள் மற்றும் கைவினைஞர்கள் உட்பட மக்கள்.
  • தி மென் ஆஃப் தி ஹில்: அட்டிக் ஹைலேண்ட்ஸில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் அட்டிகா நகரங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்டவர்கள்.[21]

ஹெரோடோடஸ் மூன்று குழுக்களைப் பற்றிய பின்வரும் தகவல்களை வழங்குகிறார்:

  • சமவெளி மாவட்டம்: அரிஸ்டோலைட்சின் மகன் லைகோர்கோஸ் தலைமையில்.
  • கடலோர மாவட்டம்: அல்க்மியோனின் மகன் மெகாக்லெஸ் தலைமையில்.
  • மலை மாவட்டம்: ஏதென்ஸின் சர்வாதிகாரி ஆவதற்கான முயற்சியில் உள்ள பீசிஸ்ட்ராடோசால் உருவாக்கப்பட்டது.[15]

மெகாரியன் போரில் பீசிஸ்ட்ராடோசின் பங்கானது ஏதென்சில் புகழ் பெற்றது. ஆனால் அரசு அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் செல்வாக்கு அவரிடம் இல்லை. கிமு 561 ஆம் ஆண்டில், பெய்சிஸ்ட்ராடோஸ் தன்னையும் தனது கோவேறு கழுதைகளையும் வேண்டுமென்றே காயப்படுத்திக் கொண்டதாக எரோடோடஸ் எழுதுகிறார். பின்னர் மக்கள் மன்றத்தின் நேர்நின்று ஏதெனிய பொதுமக்களுக்கு தான் பரிந்து பேசுவதை தன் எதிரிகள் விரும்பவில்லை. இதனால் ஊருக்கு வெளியே தன் எதிரிகளால் தாக்கப்பட்டதாகவும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முறையிட்டார். மேலும் தன் பாதுகாப்பிற்காக மெய்க்காப்பாளர்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நிசியா துறைமுகத்தை கைப்பற்றியது உட்பட அவரது முந்தைய சாதனைகளை நினைவுபடுத்தினார். அதற்கு ஏற்ப இவரது தண்பர் ஒருவர் பெய்சிஸ்ட்ராடோசுக்க ஐம்பது பேர்கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை வைத்துக் கொள்ள அனுமதிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அவையில் கொண்டுவந்தார். அவையும் அதை ஏற்றுக்கொண்டது. பின்னர் ஐம்பது பேரை நானூறு பேர்களாக அதிகரித்துக் கொண்டார். இப்படியே தன் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டும், ஏராளமான ஏழை மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதன் மூலமும் இவர் அக்ரோபோலிஸ் அவையை கைப்பற்றி, அரசாங்கத்தின் ஆட்சியைப் பிடித்தார். முந்தைய காலத்தில் பிரபுத்துவ குலங்களுக்கிடையில் போட்டிகள் கடுமையாக இருந்தன. இதுவே ஒற்றை சர்வாதிகாரியாக இவரை உயர்த்தும் நிலையை உண்டாக்கியது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளான சாத்தியமான ஸ்திரத்தன்மை, உள்நாட்டு அமைதிக்கான வாக்குறுதியுடன், பீசிஸ்ட்ராடோஸின் சூழ்ச்சிகளால் தனக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிக்கொண்டார்.[22] அக்ரோபோலிஸ் அவை தனது வசம் இருந்ததாலும், தனது மெய்க்காப்பாளரின் ஆதரவுடனும், இவர் தன்னை சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்டார்.[23]

அதிகாரத்தின் காலம்/சர்வாதிகாரத்தனத்துக்கான மூன்று முயற்சிகள்

[தொகு]
பண்டைய ஏதென்ஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள். காட்டப்பட்ட நீண்ட சுவர்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்படவில்லை.

அதிகாரத்துக்கு வந்த முதல் காலம்

[தொகு]

பெய்சிஸ்ட்ராடோஸ் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அதிகாரத்துக்கு வந்தார். அரசியல் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது முதல் அதிகாரப் பயணம் 561 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. லைகர்கஸ் தலைமையிலான சமவெளி மக்களும், மெகாக்லெஸ் தலைமையிலான கடலோர மக்களும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையிலும், ஒன்றிணைந்து இவரை அதிகாரத்தில் இருந்து அகற்றியதே இவர் பதவியில் இருந்து முதன் முதலில் வெளியேற்றப்பட்டது கிமு 556/555 ஆகும்.[24] பல்வேறு சான்றுகள் பீசிஸ்ட்ராடோசின் ஆட்சிக் காலங்கள் குறித்து முரண்பட்ட அல்லது சரிவர தெரிவிக்காத கால இடைவெளிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மெகாக்லெஸ் மற்றும் லைகோர்கோசின் ஆதரவாளர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு பீசிஸ்ட்ராடோசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றினார்கள் என்று எரோடோடஸ் எழுதுகிறார்.[25] ஏதென்சில் தனது முதல் சர்வாதிகார ஆட்சியை இவர் முதலில் ஏற்றுக்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெஜிசியாஸ் ஆட்சியின் போது பெய்சிஸ்ட்ராடோஸ் வெளியேற்றப்பட்டார் என்று அரிஸ்டாட்டில் கருத்து தெரிவிக்கிறார்.[26]

நாடுகடத்தல் மற்றும் இரண்டாவது அதிகார காலம்

[தொகு]
கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோடசின் விவரித்தபடி, ஏதென்சுக்கு ஏதெனா உடையணிந்த ஒரு பெண்ணுடன் பிசிசுட்ரேடசு திரும்பியதைச் சித்தரிக்கும் எம்.ஏ. பார்த் 1838 ஆம் ஆண்டு வரைந்த விளக்க ஓவியம்

இவர் மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்யப்பட்டார். இச்சமயத்தின் போது பெடியிஸ் (சமவெளி மக்கள்) மற்றும் பரலியோய் (கடலோர மக்கள்) இடையேயான ஒப்பந்தம் முறிந்தது.[27] அதன் பிறகு விரைவில், கிமு 556 அல்லது அதற்குப் பிறகு, மெகாக்லெஸ் பீசிஸ்ட்ராடோசை மீண்டும் அதிகாரத்திற்கு வருமாறு அழைத்தார். ஏதென்சில் ஒரு திருவிழா நடந்த சமயத்தில் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஊர்வலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன. அச்சமயத்தில் டெம் அல்லது கிராமப்புறமான பியானியாவைச் சேர்ந்த பை என்ற உயரமான, ஏறக்குறைய ஆறடி உயர பெண்ணை, ஏதெனா தெய்வம் போன்று வேடமிடவைத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு வந்தாள். கூடவே கட்டியக்கார் சிலர் 'ஓ ஏதென்சு மக்களே பீசிஸ்ட்ராடோசுக்கு நல்வரவு கூறுங்கள். ஏதெனா தெய்வத்தின் விசுவாசத்தைப் பெற்றிருக்கிற இவரை தேவதையே இபோது அக்ரோபோலிசுக்கு அழைத்து வரப்படுகிறார்' என்று கூறியபடி வந்தனர். இவர்களை அடுத்து பீசிசுட்ராட்டசு தன் பராவாரங்களுன் வந்தார். இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திகைத்தனர். உண்மையில் ஏதனா தெய்வமே வந்திருப்பதாக நம்பிவிட்டர். இதன் விளைவாக, பிரமிப்புக்குள்ளான ஏதெனியர்களால் மீண்டும் பீசிஸ்ட்ராடோஸ் வரவேற்கப்பட்டார்.

மோதல், இரண்டாவது முறை நாடுகடத்தப்படுதல், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருதல்

[தொகு]

முதல் திருமணமாகி இரண்டு வளர்ந்த மகன்கள் உள்ள நிலையில் பெய்சிஸ்ட்ராடோஸ், தனது புதிய மனைவியான மெகாக்லெசின் மகளான புதிய மனைவியன் மூலமாக குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என்றும், மரபான முறையில் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை என்று எரோடோடஸ் தெரிவிக்கிறார். காரணம் பெசிஸ்ட்ராடோஸ் தனது மகன்களான இப்பார்கஸ் மற்றும் இப்பியாஸ் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்துடன் விளையாட விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த மெகாக்லெஸ், பெய்சிஸ்ட்ராடோசுடனான இந்த குறுகிய கால கூட்டணியை முறித்துக்கொண்டு, பீசிஸ்ட்ராடோசின் எதிரிகளின் உதவியுடன் இவரை இரண்டாவது முறையாக ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்வித்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நீடித்த இவரது நாடுகடத்தலின் போது, பெய்சிஸ்ட்ராடோஸ் ரைசெலஸ் அல்லது ரைசெலசுக்கு இடம்பெயர்ந்தார். அப்பகுதி வேளாண்மைக்கு ஏற்ற பகுதி என்று குறிப்பிடத்தக்கது. இறுதியில் வடக்கு கிரேக்கத்தின் ஸ்ட்ரைமோன் ஆற்றுப் பகுதியில், பாங்கேயஸ் அல்லது பாங்கயான் மலைக்கு அருகில் குடியேறி, அருகில் அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்களின் வழியாக செல்வத்தைக் குவித்தார்.[28] தங்க, வெள்ளிச் சுரங்ங்களின் மூலம் ஈட்டிய பணதைக் கொண்டு, கூலிப்படையினரை பணிக்கு அமர்த்திக் கொண்டார். மேலும் தீபன்கள் மற்றும் நக்சோஸ் தீவின் வசதியான லிக்டாமிகள் போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். பின்னர் இவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர தெற்கு நோக்கி படைகளுடன் திரும்பினார்.

கிமு 546 இல், எரேட்ரியாவை தளமாகப் பயன்படுத்தி, எரிட்ரியன் குதிரைப்படையின் ஆதரவுடன், பீசிஸ்ட்ராடோஸ் அட்டிகாவின் வடக்குப் பகுதியில் உள்ள மராத்தானில் இறங்கி ஏதென்சு மற்றும் அதைச் சுற்றியுள்ள சில உள்ளூர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஏதென்சு நோக்கி முன்னேறினார். இவரது படைகள் முன்னேறி, மதிய உணவிற்குப் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஏதெனியப் படைகளைத் தாக்கின. ஏதெனியர்கள் பின்வாங்கிய போது அவர்கள் தங்கள் படைகளை ஒழுங்குபடுத்துவதைத் தடுக்க, பீசிஸ்ட்ராடோஸ் தன் மகன்களை ஏதெனியர்களின் படைகளை பின்தொடர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இறுதியில் பீசிஸ்ட்ராடோஸ் ஏதென்சின் ஆட்சியாளராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்று சர்வாதிகாரியாக ஆளத் தொடங்கினார். இவருடைய ஆட்சி கிமு 546 முதல் கிமு 528/527 இல் இறக்கும் வரை நீடித்தது.

மூன்றாவது மற்றும் இறுதி சர்வாதிகார ஆட்சியின் போது ஏதென்சுக்கு செய்த பங்களிப்புகளும், சாதனைகளும்

[தொகு]
பண்டைய கிரீஸ் மற்றும் அண்டை நாடுகளின் நகரங்களின் இடம்; பாங்கேயஸ் மலை

கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையிலான பெய்சிஸ்ட்ராடோஸின் மூன்று ஆட்சிகளின் போதும், ஏதென்சு அட்டிக் தீபகற்பத்தில் உள்ள நகரங்களில் மிகப்பெரியதானதாகவும், ஆதிக்கம் செலுத்தும் நகரமாகவும் மாறத் தொடங்கியது. அண்டை கிராமங்கள் ஏதென்சுடன் முன்பு கொண்டிருந்த தளர்வான தொடர்பிலிருந்து, ஏதென்சின் நகரத்தின் கட்டமைப்பிற்குள் ஒன்றிணைந்து வரத் தொடங்கியதாக ஸ்டார் கூறுகிறார்.[29] ஏதென்ஸுக்கு தென்மேற்கே 5 மைல் தொலைவில் உள்ள அட்டிகாவின் முக்கிய துறைமுக நகரமான பிரேயஸ் முக்கியத்துவமானதாக இருந்திருக்கலாம். மேலும் இந்த துறைமுக இடமானது ஏதென்சுக்கு கடல்சார் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கடல் பாதைகளை எளிதாக அணுகுவதற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.[30] அட்டிகாவில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க நகரங்களில் மாரத்தான், எலியூசிஸ் ஆகியவை அடங்கும்.

இவரது ஆட்சியை, பிற்காலத்தில் அரிசுட்டாட்டில் பீசிசுட்ராட்டசின் ஆட்சி கொடுங்கோலனுடைய ஆட்சியார் இருக்கவில்லை; ஒரு இராசதந்திரியினுடைய ஆட்சியாய் இருந்தது புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். பிசிசுட்ரேடசு காலத்தை அனுசரித்து காரியங்கள் செய்தார். தன்னை எதிர்த்தவர்களை கடுமையாக நடத்தவில்லை. அவர்களை தன் அன்பினால் வசப்படுத்தினார். அப்படியும் வசப்படாதவர்களை நாடு கடத்தினார்; அவர்களின் நில புலன்களை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். தரைப்படையும் கடற்படையையும் ஒழுங்கு படுத்தினார். பொதுவாக சோலோன் நாட்டைவிட்டு வெளியோறியபிறகு பிளவுற்றிருந்த மக்கள் பிரிவினரால் நாட்டில் அமைதியை உருவாக்கினார்.

பிசிசுட்ரேடசு சோலோனிய அரசியலமைப்பில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. அரியோபாகசு அவை, நூனூற்றுவர் அவை, மக்கள் அவை போன்றவை அனைத்தும் தங்கள் கடமையைச் செய்துவந்தன. ஆனால் இந்த அவைகளில் பிசிசுட்ரேடசின் வாக்குகளுக்கு செல்வாக்கு இருப்பதை உறுதிப்படுத்தினார். பிசிசுட்ரேடசு நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்குமாறு செய்தார். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார்.

பிசிசுட்ரேடசின் முயற்சியால் ஏதென்சில் அழகிய கோயில்கள் கட்டப்பட்டன. இராச்சியத்தில் பாதைகளை உருவாக்கினார். நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்கள் செய்து அதன் வழியாக ஏதென்சின் வணிக வளத்தை தெருக்கினார்.

பண்பாடு, சமயம், கலை

[தொகு]

ஏதென்சு நகரத்தை ஒரு கலாச்சார மையமாக மேம்படுத்துவதற்கும், அதன் கௌரவத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பீசிஸ்ட்ராடோஸ் இறை விழாக்களுக்கான ஆதரவையும், கலைகளுக்கான ஆதரவையும் அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். வாய்ப்பாடமாக சொல்லப்பட்டுவந்த இலக்கியமாக இருந்த ஓமரின் இலியட், ஒடிசி ஆகிய வீர காவியங்களின் பாட பேதத்தை ஓழிக்க நிபுணர்களை நியமித்து, அவற்றை எழுத்து வடிவில் கொண்டுவந்து பாதுகாத்தார். மேலும் இவர் பனாதெனிக் திருவிழாவின் முக்கியத்துவத்தைக் கூட்டினார். அதன் தோற்றம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகும். அது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. பனாதெனிக் திருவிழாவுக்கு கொடுக்கபட்ட முக்கியத்துவம், விரிவாக்கத்தின் காரணமாக, ஏதென்சின் மிகவும் மதிக்கப்படும் தெய்வமாக ஏதீனா ஆனார். சாராம்சத்தில் நகர அரசின் காவல் தெய்வமானார். மேலும் திருவிழாவின் முடிவில் அக்ரோபோலிசில் உள்ள ஏதீனாவின் கோவிலுக்கு ஒரு அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஓமரிக் கவிதைகளை ஓதுதல், தடகள போட்டிகள் போன்றவை விழாவின் ஒரு பகுதியாக மாறியது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மது மற்றும் இன்பத்தின் கடவுளான டயோனிசைக் கௌரவிக்கும் வகையில் டயோனிசியா என்ற பெரிய மற்றும் சிறிய புதிய திருவிழாக்கள் தொடங்கப்பட்டன. அன்றைய குடிப்பழக்கம் மற்றும் உற்சாகமான கொண்டாட்டக் காட்சிகளை அந்தக் காலத்தின் குவளை ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.[31] டயோனிசியா திருவிழாவில், டயோனிசைப் பாடியதற்காக பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கிமு 534 முதல் துன்பியல் நாடகங்களுக்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டது.[31]

குறிப்புகள்

[தொகு]
  1. "Pisistratus", Oxford Encyclopedia of Ancient Greece and Rome
  2. D.M. Lewis, "The tyranny of the Pisistratidae", Cambridge Ancient History, vol. IV, p. 287
  3. Starr, Chester (April 2019). "Peisistratus: TYRANT OF ATHENS". Encyclopedia Britannica.
  4. Holladay, James (Apr 1977). "The Followers of Peisistratus". Greece & Rome (Cambridge University Press) 24 (1): 40–56. doi:10.1017/S0017383500019628. https://www.jstor.org/stable/642688. பார்த்த நாள்: May 22, 2021. 
  5. Shanaysha M. Furlow Sauls, The Concept of Instability and the Theory of Democracy in the Federalist, (PhD diss., Duke University, 2008), p. 77
  6. 6.0 6.1 "Tyrant, ancient Greece". Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  7. The Landmark Herodotus, The Histories, Appendix L.
  8. The Landmark Herodotus, The Histories, Appendix T.
  9. The Landmark Herodotus, The Histories, Appendix L.
  10. Macquire, Kelly (October 6, 2020). "Pylos". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் June 3, 2021.
  11. Homer: The Iliad.
  12. "The Tyrants". Encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் April 30, 2021.
  13. Cartwright, Mark (March 20, 2018). "Ancient Greek Government". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் May 7, 2021.
  14. "Ancient Greek Poleis Systems of Government: Athens and Sparta" (PDF). p. 6. பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.
  15. 15.0 15.1 15.2 Herodotus (2007). Strassler, Robert B. (ed.). The Landmark Herodotus, The Histories. trans. Andrea L. Purvis. New York: Anchor Books. 1.59.
  16. Chester G. Starr, ENCYCLOPÆDIA BRITANNICA Peisistratus TYRANT OF ATHENS பரணிடப்பட்டது 2016-07-01 at the வந்தவழி இயந்திரம்
  17. 17.0 17.1 "Ancient Greek Poleis Systems of Government: Athens and Sparta" (PDF). p. 6-7. பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.
  18. Aristotle (1914). Aristotle on the Athenian Constitution. trans. F. G. Kenyon. London, England: G. Bell and Sons, LTD. pp. 21–23.
  19. 19.0 19.1 19.2 French, A. (1959). "The Party of Peisistratos". Greece & Rome 6 (1): 46–57. doi:10.1017/S0017383500013280. https://www.jstor.org/stable/641975. பார்த்த நாள்: May 20, 2021. 
  20. Hopper, R. J. (1961). "'Plain', 'Shore', and 'Hill' in Early Athens". The Annual of the British School at Athens 56: 194. doi:10.1017/S006824540001354X. https://www.jstor.org/stable/30096844. 
  21. Pomeroy, Sarah B.; Burstein, Stanley; Donlan, Walter; Roberts, Jennifer Tolbert (1999). Ancient Greece: a political, social, and cultural history. New York, Oxford: Oxford University Press. pp. 169–170.
  22. Goušchin, Valerij (1999). "Pisistratus' Leadership in A. P. 13.4 and the Establishment of the Tyranny of 561/60 B. C.". The Classical Quarterly. New Series 49: 18–22. doi:10.1093/cq/49.1.14. https://archive.org/details/sim_classical-quarterly_1999_49_1/page/18. 
  23. Aristotle, The Athenian Constitution, Part 13, 24; Herodotus, The Histories, 1.59; Plutarch, “Life of Solon”, in Plutarch’s Lives (London: Printed by W. M'Dowell for J. Davis, 1812), 185.
  24. Pomeroy, Sarah B.; Burstein, Stanley; Donlan, Walter; Roberts, Jennifer Tolbert (1999). Ancient Greece: A political, social and cultural history. New York, Oxford: Oxford University Press. pp. 170.
  25. Herodotus (2007). The Landmark Herodotus, The Histories. New York: Anchor Books.
  26. Aristotle (1914). Aristotle on the Athenian Constitution. London, England: G. Bell and Sons, LTD. p. 24.
  27. "Ancient Greek Poleis Systems of Government: Athens and Sparta" (PDF). p. 6-7. பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.
  28. Cole, J. W. (1975). "Peisistratus on the Strymon". Greece & Rome 22 (1): 42–44. doi:10.1017/S0017383500020052. பன்னாட்டுத் தர தொடர் எண்:0017-3835. https://archive.org/details/sim_greece-rome_1975-04_22_1/page/42. 
  29. Starr, Chester (April 2019). "Peisistratus: TYRANT OF ATHENS". Encyclopedia Britannica.
  30. Cartwright, Mark (June 2, 2013). "Piraeus". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் May 15, 2021.
  31. 31.0 31.1 Starr, Chester G. "Peisistratos: Tyrant of Athens". Britannica. பார்க்கப்பட்ட நாள் May 15, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசிசுட்ரேடசு&oldid=3583680" இலிருந்து மீள்விக்கப்பட்டது