பிக்ரோமெரைட்டு
| பிக்ரோமெரைட்டு Picromerite | |
|---|---|
ஆலைட்டின் மீது பிக்ரோமெரைட்டு கனிமம் | |
| பொதுவானாவை | |
| வகை | சல்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | K2Mg(SO4)2·6H2O |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது; வெள்ளை, சாம்பல், சிவப்பு, மஞ்சள் |
| படிக இயல்பு | பாரிய திரட்டுகள்; மேலோடுகள்; பட்டகப் படிகங்கள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
| பிளப்பு | சரிபிளவு {201}[1] |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| அடர்த்தி | 2.03[1] |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.461 nβ = 1.463 nγ = 1.476[2] |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.015[2] |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 47°[2] |
| கரைதிறன் | குளிர் நீரில் |
| சுவை | கசப்பு |
| மேற்கோள்கள் | [2][1][3] |
பிக்ரோமெரைட்டு (Picromerite) என்பது K2Mg(SO4)2·6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சுகோணைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது. நிக்கல்-சுட்ரன்சு வகைப்பாட்டின் படி கூடுதல் எதிர்மின் அயனிகள் இல்லாத மற்றும் நடுத்தர முதல் பெரிய நேர்மின் அயனிகளைக் கொண்ட நீரேறிய சல்பேட்டுகளின் வகுப்பைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிக்ரோமெரைட்டு கனிமத்தை Pmr[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பெயர்க்காரணம்
[தொகு]"கசப்பு" மற்றும் "பகுதி", என்ற பொருள் கொண்ட கிரேக்க சொற்களில் இருந்து கனிமத்தின் கசப்பான சுவையை தெரிவிக்கும் வகையில் பிக்ரோமெரைட்டு என்ற இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தோற்றம்
[தொகு]பிக்ரோமெரைட்டு ஒப்பீட்டளவில் சில இடங்களில் காணப்படுகிறது. தற்போது (2015) சுமார் 40 இடங்கள் மட்டுமே அறியப்படுகின்றன.[2] முதன்முதலில் 1855 ஆம் ஆண்டில் ஆர்கேஞ்சலோ சுகாச்சியால் வெசுவியசு மலையில் செயலில் உள்ள எரிமலை புகைமூட்டங்களில் அடையாளம் காணப்பட்டது.[5] மேலும் எட்னா மலை மற்றும் அவாய் எரிமலை படிவுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
பிக்ரோமெரைட்டு கனிமம் பொதுவாக சில கடல் உப்பு படிவுகளின் கைனைட்டு மண்டலங்களில் காணப்படுகிறது. இவற்றில் துரிங்கியா, லோயர் சாக்சனி மற்றும் சாக்சனி-அன்கால்ட்டு (செருமனி) ஆகியவற்றில் உள்ள உப்புச் சுரங்கங்கள், ஆல் இன் திரோல் நகரம் அருகே, ஆல்சுடாட்டு நகரம் மற்றும் பேட் இசில் (ஆத்திரியா), விட்பி (ஐக்கிய இராச்சியம்) அருகே, மற்றும் கார்ல்சுபாட்டு பொட்டாசு மாவட்டம் (நியூ மெக்சிகோ), மேற்கு சீனாவில் உள்ள உப்பு ஏரிகளிலும் காணப்படுகிறது.
சல்பேட்டு நிறைந்த நீர்வெப்ப தாது படிவுகளிலும் பிக்ரோமெரைட்டு உருவாகும். மேலும் சில தாது மற்றும் நிலக்கரி சுரங்கங்களின் கசடு குவியல்களிலும் காணப்படுகிறது.
இடத்தைப் பொறுத்து, பிக்ரோமெரைட்டுடன் பெரும்பாலும் நீரற்ற கால்சியம் சல்பேட்டு, எப்சோமைட்டு, ஆலைட்டு, ஓக்மாணைட்டு, கைணைட்டு, மெட்டாசிடெரோனாட்ரைட்டு மற்றும் மெட்டாவோல்டின் ஆகிய கனிமங்கள் சேர்ந்து உள்ளன.
பண்புகள்
[தொகு]பிக்ரோமெரைட்டு கனிமத்தில் வறண்ட காற்றில் நீரிழப்பு ஏற்படுகிறது. மேலும் படிகங்கள் பின்னர் மந்தமான, கோள நீரிழப்பு மண்டலங்களைக் காட்டுகின்றன. படிப்படியாக நீரிழப்பு ஏற்பட்டு இலியோனைட்டு என்ற நீரேறிய இரட்டை சல்பேட்டு உப்புக்கு வழிவகுக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Picromerite, In: John W. Anthony, Richard A. Bideaux, Kenneth W. Bladh, Monte C. Nichols (Hrsg.): Handbook of Mineralogy, Mineralogical Society of America. 2001 (PDF 66,3 kB).
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Picromerite". Mindat.
- ↑ "Picromerite". Webmineral.com.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Arcangelo Scacchi: Memoria sullo incendio vesuviano del mese di Maggio. Nobile, Napoli 1855, p. 191.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Picromerite". American Mineralogist Crystal Structure Database.
