பிக்காசோவின் நீலக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிக்காசோவின் நீலக்காலம் என்பது, புகழ்பெற்ற எசுப்பானிய ஓவியரான பாப்லோ பிக்காசோ தனது ஓவியங்களை நீலத்தின் பல்வேறு சாயல்களை மட்டும் பயன்படுத்தி வரைந்த காலப்பகுதியைக் குறிக்கிறது. அரிதாக வேறு சில நிறங்களும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இக்காலம் 1901 முதல் 1904 வரையான காலப்பகுதியாகும். பார்சிலோனாவிலும், பாரிசிலும் வரைந்த இவ்வோவியங்கள் இன்று அவரது புகழ்பெற்ற ஓவியங்களுள் சிலவாகத் திகழ்கின்றன. ஆனால், இவை வரையப்பட்ட காலத்தில் இவற்றைப் பிக்காசோவால் விற்கமுடியாதிருந்தது.

காரணம்[தொகு]

நீலக்காலம் எப்போது தொடங்கியது என்பது குறித்துத் தெளிவில்லை. இது எசுப்பெயினில் 1901 வசந்த காலத்தில் அல்லது பாரிசில் அவ்வாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1] கண்டிப்பான நிறப் பயன்பாடும், அவர் அடிக்கடி பயன்படுத்திய விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள் போன்ற சோகத்துக்குரிய விடயங்களும், பிக்காசோவின் எசுப்பானியப் பயணத்தின் செல்வாக்காலும், அவரது நண்பர் கார்லோசு கசாகெமாசு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் உண்டான சோகத்தின் விளைவாலும் ஏற்பட்டது.

தனது நண்பனின் இறப்புச் செய்தியைக் கேட்டதிலிருந்துதான் நீல நிறத்தில் ஓவியங்களை வரையத் தொடங்கியதாக பிக்காசோவே ஒருமுறை கூறியிருந்தபோதும்,[2] கலை வரலாற்றாளரான எலன் செக்கெல் இதுகுறித்துச் சில ஐயங்களை எழுப்பியுள்ளார். இவரது கூற்றுப்படி, கசாகேமா பாரிசில் இறக்கும்போது பிக்காசோ அங்கு இல்லை. பிக்காசோ மே மாதம் பாரிசுக்குத் திரும்பியபோது இறந்த நண்பனின் கலையகத்தில் பல வாரங்கள் தங்கி ஒரு கண்காட்சிக்குத் தயார்படுத்தினார். அக்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் பளிச்சிடும் நிறங்களையும், பகட்டான விடயங்களையும் கொண்டிருந்தன.[2] 1901ல் பிக்காசோவின் உளவியல் நிலைமை மோசமானது. அவ்வாண்டின் பிற்பகுதியில் பிக்காசோ கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். இதனால், இவர் தனது ஓவியங்களில் நீலச் சாயையைக் கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆண்டின் முற்பகுதியில் இவரது நண்பர் இறந்தபோது பிக்காசோ வரைந்த "கசாகெமாசின் இறப்பு" (La mort de Casagemas) என்னும் ஓவியத்தில் பிரகாசமான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. நீலக்காலத்தின் முதல் ஓவியம் என்று கொள்ளத்தக்கது "தனது சவப்பெட்டியில் கசாகெமாசு" எனத் தலைப்பிட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியத்தை வரைந்து முடித்த காலத்தில் பிக்காசோ மோசமான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார். வழக்கமாக மற்றவர்களுடன் பழகுவதில் விருப்பம் கொண்டவரான பிக்காசோ இக்கட்டத்தில் தனது நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தார். இவரது மன அழுத்தத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது.

1901க்கு முன்னர் பிக்காசோவின் தொழில் சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், அவர் தனது ஓவியங்களுக்கான விடயங்களாக ஏழைகளையும், விலக்கிவைக்கப்பட்டவர்களையும் பயன்படுத்தியதுடன், நீலச் சாயைகள் மூலம் துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, பொதுமக்களும், திறனாய்வாளர்களும் இவரது ஓவியங்களிலிருந்து விலகிச் சென்றனர். மக்கள் இவ்வாறான ஓவியங்களைத் தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட விரும்பவில்லை. பிக்காசோ தொடர்ந்தும் இவ்வகை ஓவியங்களையே வரைந்தார். இதனால் அவரது பொருளாதார நிலையும் மோசமானது.

1904ம் ஆண்டுக்குப் பின்னரே நிலைமை மாறியது. இதன் பின்னர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் தொடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cirlot, 1972, p.127.
  2. 2.0 2.1 Wattenmaker and Distel, 1993, p. 192.