பா. ஹேரம்பநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. ஹேரம்பநாதன்

பா. ஹேரம்பநாதன் (P. Heramba Nathan, இறப்பு: 10 மே 2022) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். இவர் நடன ஆசிரியராக இருந்து 200 இக்கும் மேற்பட்ட அரங்கேற்றங்கள், 1000 இற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் என கண்டவர், 60 ஆண்டுகளாக நாட்டிய ஆசிரியராக பணியாற்றியவர்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவரின் தந்தை தஞ்சாவூரில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானாகவும், நாட்டிய ஆசிரியராகவும் இருந்த பாவுப் பிள்ளையாவார். தாய் கர்நாட இசைக் கலைஞரான சாவித்திரி அம்மாள் ஆவார். இவரது ஏழுவயதில் இருந்து தஞ்சாவூர் இராஜம் ஐயரிடம் 10 ஆண்டுகள் மிருதங்கம் பயின்றார். பின்னர் இவரின் தந்தையின் மாணவிகளின் அரங்கேற்றத்தின் போது வாசிக்கத் துவங்கினார். தஞ்சாவூரில் இயங்கிவந்த நாட்டியப் பள்ளிகளில் பாவுப் பிள்ளை மிருதங்க வித்வானாக இருந்துவந்தார். ஆசிரியர்கள் நாட்டியம் பயிற்றுவிக்கும்போது பாவுப் பிள்ளை மிருதங்கம் வாசிப்பார். அப்போது தந்தையுடன் சென்றுவந்த ஹேரம்பநாதனுக்கு நாட்டியக் கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் இவரே முயன்று நட்டுவங்கம் வாசிக்க கற்றுக் கொள்ளத் துவங்கினார். பின்னர் இவரது தந்தை இவருக்கு நட்டுவாங்கம் கற்பித்தார்.[1]

ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் தஞ்சாவூரில் உள்ள சிறீ கணேச வித்தியசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்தார். 1967இல் இருந்து 2003வரை 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.[1]

கலை வாழ்க்கை[தொகு]

1967இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்ட நேரம். அந்தக் கல்லூரி மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று பாவுப் பிள்ளையை அணுகினர். அவர் மகனை அனுப்புவதாகக் கூறி ஹேரம்பநாதனை அவர்களுக்கு நாட்டியம் கற்பிக்க அனுப்பினார். 1970 இவர் பேரைப் போட்டு முதல் அரங்கேற்றம் நடந்தது. 1986இல் இருந்து நாட்டியம் கற்பிக்க மலேசியா செல்லத் துவங்கினார்.[1]

  • இவர் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நாட்டிய நாடகங்களை தயாரித்துள்ளார்.[2]
  • மெலட்டூர் சாலியமங்கலத்தில் நடைபெறும் பாகவதா மேளா கலைஞர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்ததன் மூலம் பல மாணவர்களை உருவாக்கினார்.[2]
  • காங்கேயம் சிவன் மலை குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றினார்.[2]
  • தஞ்சாவூர் சிறீ சரபேந்திர பூபாள குறவஞ்சி நாடகத்தை மீளுருவாக்கம் செய்து அரங்கேற்றினார்.[2]
  • திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் நடைபெற்றுவந்த கைசிக புராண நாட்டிய நாடகத்ததை மீட்டுருவாக்கத்தில் முக்கிய பங்கேற்று, தன் மாணவ மாணவிகளுடன் முனைவர் அனிதா இரத்னத்தின் வழிகாட்டுதலுடன் 1999 முதல் தொடர்ந்து நடத்தி வந்தவர்.[2]
  • தஞ்சை பெரிய கோயிலில் நின்று போன சின்னமேளம் நாட்டிய விழாவை மீளுருவாக்கம் செய்து 2010 இல் நடைமுறைக்கு கொண்டுவந்து தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் நடத்தி வந்தவர்.[3]

பெற்ற விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

2022 மே 10 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 77 ஆவது வயதில் தஞ்சாவூரில் காலமானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "பழமையை உணராமல் புதுமையில் எப்படிச் சாதிக்க முடியும்? - மூத்த நாட்டிய ஆசான் பா.ஹேரம்பநாதன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "நாட்டியக் கலைக்கு சாதி மதம், தடை இல்லை! நாட்டிய ஆசிரியர் ஹேரம்பநாதன்". தினமணி வலைதளம். பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  3. "தஞ்சை அதிரும் சின்னமேளம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  4. "காலமானார் நாட்டிய ஆசிரியர் பா. ஹேரம்பநாதன்". தினமணி நாளிதழ். 11-05-2022. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ஹேரம்பநாதன்&oldid=3429468" இலிருந்து மீள்விக்கப்பட்டது