பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1773ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் என அறியப்படுகின்ற போராட்டத்தைக் காட்டுகிற செதுக்கல் ஓவியம் (படம் வரையப்பட்ட ஆண்டு 1846). அமெரிக்க குடியேறிகள் தொல்குடி அமெரிக்கர்களைப் போன்று உடையணிந்து கொண்டு 342 சரக்குப் பெட்டிகளை கடலில் எறிகின்றனர்.[1]

பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் (Boston Tea Party) என்பது, 1773 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. அமெரிக்காவில் தேயிலை விற்றுவந்த வணிகர்களுக்கும் விற்கும் விலை வரிகளால் உயர்ந்து அவர்களது இலாபம் குறைந்தது. தவிரவும் வரி செலுத்தாது கடத்தப்பட்ட தேயிலையை, விலை மலிவாக இருந்தமையால், மக்கள் வாங்கத் துவங்கினர். இதனால் தங்களது அரசராக இருந்த மூன்றாம் ஜார்ஜின் ஆட்சிக்கு எதிராக டிசம்பர் 16 அன்று இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.[2] அன்றைய நாளில் சில அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் கடலில் எறிந்தனர்.

தங்களது கோபத்தைக் காட்டுமுகமாக சாமுவேல் ஆடம்சும் விடுதலையின் மகன்கள் என அறியப்படும் அமெரிக்கக் குடியேறிகளும் தொல்குடி அமெரிக்கர்களான மகாகாக் இனத்தவரைப் போன்று உடையணிந்து இருள்நிறைந்த குளிர்கால விடியற்காலை நேரத்தில் பாஸ்டன் துறைமுகத்தில், இறக்குமதிக்காக வந்து சுங்கச்சோதனைக்காக காத்திருந்த தேயிலைப் பெட்டிகள் நிரம்பிய, கப்பல்களில் ஏறினர். தேயிலைப் பெட்டிகளை தூக்கி நீரில் வீசி எறிந்தனர். இது பிரித்தானிய அரசுக்கு மிகவும் கோபமூட்டியது. நடப்புச் சட்டங்களை மாசச்சூசெட்ஸ் மாகாணத்திற்கு மட்டும் மேலும் கடுமையாக்கியது. பொறுக்கவியலாச் சட்டங்கள் என அறியப்படும் இந்த சட்டங்களில் ஒன்றின்படி கடலில் வீசப்பட்ட அனைத்துத் தேயிலைக்கும் மாசச்சூசெட்ஸ் மாநில குடியேறிகள் வரி செலுத்தும் வரை பாஸ்ட்டன் துறைமுகம் மூடப்பட்டது.

அமெரிக்கப் புரட்சிப் போரின் முதன்மையான துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Alexander, Revolutionary Politician, 125–26
  2. Labaree, Benjamin Woods (1979). The Boston Tea Party. Boston: Northeastern University Press. பக். 141–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0930350057. 

வெளி இணைப்புகள்[தொகு]