உள்ளடக்கத்துக்குச் செல்

பாஸ்கர் ராம்சந்திர தம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஸ்கர் ராம்சந்திர தம்பே ( Bhaskar Ramchandra Tambe) (1873 – 1941) இவர், இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்திக் கவிஞராவார்.

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

இவர் 1873 அக்டோபர் 27, அன்று இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியருக்கு அருகிலுள்ள முகவாலி என்ற நகரில் பிறந்தார். [1] 1893 ஆம் ஆண்டில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது உயர்நிலைப் பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் . பின்னர் தனது கல்லூரிக் கல்வியை ஆக்ராவில் தொடங்கினார். தனது சகோதரரின் கல்விக்காக , மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் சுதேச மாநிலத்தில் ஆசிரியராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் இவர் பட்டம் பெறாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து, தேவாஸின் இளவரசனுக்கான ஆசிரியரானார். இந்த நியமனம் அதிர்ஷ்டவசமாக இவருக்கு ஆட்சியாளரின் தனிப்பட்ட நூலகத்தை எளிதாக அணுக முடிந்தது.

வேலை[தொகு]

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தேவாஸ் ஆட்சியாளரின் தனிச் செயலாளராக ஆனார். பின்னர், இவர் ஒரு சிறிய நகரத்தில் நீதிபதியாக சில ஆண்டுகள் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில், குவாலியர் சுதேச மாநிலத்தில் 1941 திசம்பர் 7இல் தான் இறக்கும் வரை அங்கேயே வசித்து வந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

இவர், 1932 ஆம் ஆண்டில் கோலாப்பூரில் நடைபெற்ற மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் "கவிதை" பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1937 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டு குவாலியரின் ஆட்சியாளர் இவரை மாநிலத்தின் கவிஞர் இளவசர் என்று பெயரிட்டு கௌரவித்தது.

1890-1941 காலப்பகுதியில், இவர் சுமார் 225 கவிதைகளை எழுதினார். கவிஞர் வாசுதியோ கோவிந்த் மேடியோ, 1920 இல் இவரது 75 கவிதைகளை தொகுத்தார். 1935 ஆம் ஆண்டில், டாக்டர் மாதவராவ் பட்வர்தன் என்பவர் இவரது முழுமையான தொகுப்பை வெளியிட்டார். இது பல முக்கியமான திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் அச்சிடப்பட்டுள்ளது. இது இவரது கவிதைகளின் தொடர்ச்சியான பிரபலத்திற்கு அஞ்சலியாகும். அவற்றில் பல கவிதைகள் பாலிவுட் பின்னணி பாடகர்களான லதா மங்கேஷ்கரும், ஆஷா போஸ்லேவும் பாடி பிரபலப்படுத்தினர்.

குறிப்புகள்[தொகு]

  1. Dr, Gadre. Jagtik kirtiche 126 sahityik. Manorama.