பால்வெளி ஆண்டு
பால்வெளி ஆண்டு (Galactic year or cosmic year): சூரியன் ஒரு விண்மீன் (star) ஆகும். விண்வெளியில் சூரியனைப் போன்ற விண்மீன்கள் பல உள்ளன. கோடிக்கணக்கான விண்மீன்கள் சேர்ந்த ஒரு கூட்டம் விண்மீன் மண்டலம் (galaxy) என்று அழைக்கப்படுகின்றது. நம்முடைய சூரியனும் அப்படிப்பட்ட ஒரு விண்மீன் மண்டலத்தில் தான் அடங்கி உள்ளது. அந்த மண்டலத்தின் பெயர் பால்வெளி (milky way) மண்டலம்.[1] இந்தப் பால்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கும். அதன் அகலம் 120,000 ஒளி ஆண்டுகள். அதனுடைய மையம் நம் சூரியனிலிருந்து 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பால்வெளி மண்டலத்தில் ஏறத்தாழ 40,000 கோடி விண்மீன்கள் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது. அதன் மையத்தில் நம்மால் காணவியலாத கரும் பொருள் (dark matter) உள்ளதாகவும் சொல்லப் படுகின்றது. நம் சூரிய மண்டலம் பால்வெளி மையத்தில் உள்ள கரும் பொருளைச் சுற்றி மிகப் பெரிய வட்டப்பாதையில் வந்து கொண்டு இருக்கின்றது. நம் சூரிய மண்டலம் அந்த வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றி வர 2,250 இலக்கம் ஆண்டுகள் ஆகும். இதை ஒரு பால்வெளி ஆண்டு (galactic year) என்று சொல்வார்கள்.[2] இதை வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட கணக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- 61 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் புடவி (universe) தோன்றியது.
- 54 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பால்வெளி மண்டலம் தோன்றியது.
- 18.4 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் புடவியில் சூரியன் தோன்றியது.
- 17 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் கடல் உருவாகியது.
- 15 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் உயிரினங்களுக்கான அடிப்படை மூலக்கூறுகள் தோன்றின.
- 13 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் பாக்டீரியாக்கள் தோன்றின.
- 10 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் கண்டங்கள் தோன்றின.
- 0.001 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் இன்றைய மனிதன் தோன்றினான்.
சூரியன் பால்வெளி மையத்தை சுற்றி வரும் வட்டப் பாதையைக் பக்கத்தில் உள்ள (ஓவியர் வரைந்த) படத்தில் காணலாம்.
References
[தொகு]- ↑ Cosmic Year பரணிடப்பட்டது 2014-04-12 at the வந்தவழி இயந்திரம், Fact Guru, University of Ottawa
- ↑ http://www.ariviyal.in/2015/01/blog-post_11.html