பாலா சுவாமிநாதன்
பாலா சுவாமிநாதன் தமிழ்க்கணிமையில் முன்னோடியான ஆக்கங்கள் தந்த ஆய்வாளர். இவர் மதுரை என்னும் மென்பொருளை பிப்ரவரி 1993 இல் உருவாக்கினார். இதன் உதவியால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து எழுதினால் அதனைத் தமிழில் கணித்திரையில் காண முடிந்தது. வலையிலும் பகிர்ந்து கொள்ள இயன்றது. இதன் பின்னர் சில நாட்களிலேயே மதுரை என்னும் மென்பொருள் வழி லேட்டெக் (LaTex) என்னும் வடிவுக்கும் மாற்றவும் வழி கண்டு பிடித்தார். இவருடைய அண்ணன் ஞானசேகர் சுவாமிநாதன் என்பவருடன் சேர்ந்து அக்டோபர் 1993 இல் லிப்'தமிழ் (LibTamil) என்னும் கிராபிக் தமிழ் வாசிப்பானை (Graphic Tamil Reader for X windows) உருவாக்கி யூனிக்ஃசு (Unix) இயக்குத்தளத்தில் இயங்குமாறு செய்தார்[1][2] . இவை தமிழ்க் கணிமைத் துறையில் முன்னோடியான வளர்ச்சிகள். யூசுநெட் (Usenet) வழி நடக்கும் குமுகம்.பண்பாடு.தமிழ் எனப் பொருள்படும் soc.culture.tamil போன்ற வலைக் குழுமங்களில் இவை சிலகாலம் பயன்பாட்டில் இருந்தன.
பிறப்பு, இளமைக்கால வாழ்க்கை
[தொகு]பாலா சுவாமிநாதன் 1968 இல் தமிழ்நாட்டில், மதுரையில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், அவரது கடின உழைப்பால் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள தனது சிற்றூரான தி.சுப்புலாபுரத்திலிருந்து வநது முதல் அலோபதி முறை மருத்துவர் ஆனவர். இதனால் இவர் வீட்டில் படிப்பிற்கு மிகுந்த முதன்மை தந்து வளர்க்கப்பட்டார். இவருக்கு அண்ணன், அக்கா, தம்பி என மூவர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர்.
கல்வி, பணி
[தொகு]1985 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் (REC) கணினியியல் துறையில் படித்துத் தேர்ந்தார். அங்கிருந்த நான்கு ஆண்டுகளும் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கங்கள் வென்றார். பட்டம் பெற்ற பின்னர் இந்தியவிலேயே நடுவண் அரசு நிறுவிய மேன்மை-கணிணி-வளர்ச்சி மையத்தில் (Center for Development of Advanced Computing C-DAC) பணிக்குச் சேர்ந்து மொழிக் கோர்வையில் (language compilers) பங்காற்றினார். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு மேற்படிப்பை மேற்கொள்ள சென்றார். அங்கே 1990 முதல் 1995 வரை மிசௌரி மாநிலத்தில் செயிண்ட் லூயிசு மாநகரில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று கணினியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஈடுபாடு
[தொகு]இவருக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. வட அமெரிக்காவில் பல தமிழ் மன்றங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார். தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் நல்ல பெயர்சூட்ட வேண்டும் என்று எண்ணி, குழந்தைகளுக்கான பெயர்ப்பட்டியல் ஒன்றை முன்னதாக வெளியிட்டவர். இது தற்பொழுது பேரசிரியர் சித்தார்த் அவர்களின் இணையத்தளத்தில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டுள்ளது[3].
தற்பொழுது இவர் தம் மனைவி மக்களோடு நியூயார்க்கின் லோங் தீவில் வசித்து வருகின்றார்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ லிப்'தமிழ் மென்பொருள்
- ↑ லிப்'தமிழ் மென்பொருள் (இடாய்ட்சு தளத்தில் இருந்து)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தமிழ்ப்பெயர்கள்". Archived from the original on 2009-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.