உள்ளடக்கத்துக்குச் செல்

பாறைவேதிப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பாறைநெய் தூய்விப்பாலையில் பாறைநெய்யைத் தூய்விப்பதன் வழியாக உருவாக்கப்படும் வேதிப்பொருள்கள் பாறைவேதிப்பொருள்கள் என்று வழங்கப்படுகின்றன. பிற புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, இயற்கை எரிவளி போன்றவற்றில் இருந்தும் வருவிக்கப்படும் சில வேதிப்பொருள்களும் பாறைவேதிப்பொருள்களுள் அடங்கும். சோளம், கரும்பு, பனம்பழம் போன்ற புதுப்பிக்கத் தக்க வளங்களில் இருந்தும் பாறைவேதிப்பொருள்கள் தயாரிக்கலாம். பெரும்பாலும் பாறைநெய்யும் எரிவளியுமே பாறைவேதிப்பொருளுக்கு முதன்மையான மூலங்களாக அமைகின்றன. ஏனெனில், இவை விலைகுறைவாகவும், பரவலாகக் கிடைக்கக்கூடியதாகவும், எளிதாகத் தயாரிப்புக்கு உதவுபவையாகவும் இருக்கின்றன. எல்லாப் பாறைவேதிப்பொருள்களையும் தயாரிக்க, உலகில் பயன்கொள்ளப்படும் பாறைநெய், எரிவளி இவற்றின் ஐந்து விழுக்காடு அளவே போதுமானது.

பாறைவேதிப்பொருள்களில் பரவலாய் அறியப்பட்ட இரண்டு பிரிவுகள்: 1) எத்திலீன், புரொப்புலீன் போன்றவற்றை உள்ளடக்கிய ஒலிபீன்கள், 2) பென்சீன், தொலுவீன் போன்றவற்றை உள்ளடக்கிய அரோமேட்டிக்குகள் ஆகியனவாம்.

ஒலிபீன்கள், அரோமேட்டிக்குகள் ஆகிய இவ்விரு பிரிவுப் பாறைவேதிப்பொருள்களையும் தூய்விப்பாலையின் பாய்ம வினையூக்கி உடைத்தல் செயலாக்கத்தின் வழியே பாறைநெய்யில் இருந்து உருவாக்கலாம். ஒலிபீன்களை வேதியாலைகளில் நீராவி வழி உடைத்தல் செயல்பாட்டின் மூலம் ஈத்தேன், புரோப்பேன் போன்ற இயற்கை எரிவளி நீர்மங்களில் இருந்தும் உருவாக்கலாம். அரோமேட்டிக்கு சேர்மங்களை நெய்தையில் இருந்து வினையூக்கிச் சீர்திருத்தல் செயல்பாட்டின் வழியாக உருவாக்கலாம்.

ஒலிபீன்களும் அரோமேட்டிக்குகளும் பல்வேறுதரப்பட்ட பொருள்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன. ஒலிபீன்கள் பலமர்களைத் தயாரிக்கவும் அடிப்படை அலகுகளாய் அமைகின்றன. [1][2]

முதன்மையான பாறைவேதிப்பொருள்களை அவற்றின் வேதிக்கட்டமைப்பைப் பொறுத்துப் பின்வருமாறு பிரிக்கலாம்.

  • ஒலிபீன்கள் - இவற்றுள் எத்திலீன், புரொப்பிலீன், பியூட்டிலீன், பியுட்டா டையீன், போன்றவை அடக்கம். எத்திலீனும், புரொப்பிலீனும் வேதித்தொழிலகங்களில் பயன்படும் வேதிப்பொருள்கலாகவும், நெகிழிப்பொருள் தயாரிப்பிலும் உதவுபவையாகவும் அமைகின்றன. செயற்கை இரப்பர் தயாரிப்பில் பியுட்டா டையீன் பயன்பெறும்.
  • அரோமேட்டிக்கு - இவற்றுள் பென்சீன், தொலுவீன், சைலீன் போன்றவை அடக்கம். பென்சீனானது சாயங்கள், செயற்கைச் சோப்புத் துகள்கள் போன்றவை தயாரிக்க ஆரம்பப் பொருளாக அமைகிறது. சைலீன்கள் நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • செயற்கை எரிவளி என்னும் கார்பன் மோனாக்சைடு ஐதரசன் கலவை - இது மெத்தனால் அம்மோனியா போன்ற பிற வேதிப்பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. அம்மோனியா மேலும் உரமாகப் பயன்படுகிறது.

2007ஆம் ஆண்டில், எத்திலீன் தயாரிப்பு ஏறத்தாழ 115 மெகா டன் அளவும், புரொப்பிலீன் 70 மெகா டன் அளவும் ஆக அமைந்திருந்தது. [3]

பாறைவேதிப்பொருள் தயாரிப்பில் பயன்படும் பொதுவான ஐதரோகார்பன் சேர்மங்களும் அவற்றின் மூலங்களும் குறித்து விளக்குகிறது இப்படம். [1][2][4][5]

Petrochemical feedstock sources

உலக அளவில் எத்திலீன் 115 மில்லியன் டன்களும், புரொப்பிலீன் 70 மில்லியன் டன்களும் ஆண்டொன்றுக்குத் தயாரிக்கப்படுகின்றன. அரோமேட்டிக்குகளும் 70 மில்லியன் டன் அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இப்பாறைவேதிப்பொருள்களைத் தயாரிக்கும் பெரும் வேதிப்பொருள் ஆலைகள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அண்மைய காலத்தின் மிகையான வளர்ச்சி என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியாவிலும் அமைந்திருக்கிறது. அதோடு, பாறைவேதிப்பொருள்களுக்கான வாணிகமும் பல நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது.

பாறைவேதிப்பொருள்கள் உலகில் சில ஆலைப்பகுதிகளிலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, சவுதி அரேபியாவின் சுபைல், யான்பு தொழில்சார் நகரங்கள், அமெரிக்காவின் தெக்சாசு, உலூசியானா மாநிலங்கள், தீசைடு என்னும் இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதி, நெதர்லாந்தின் இராட்டர்டாம் நகர், இந்தியாவின் குசராத் மாநிலத்தின் சாம்நகர், தாகேசு பகுதிகள், மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலே இவை பெரும்பகுதி தயாராகின்றன.

எல்லாப் பாறைவேதிப்பொருளும் அவைமட்டுமே ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படுபவை அல்ல. மாறாக, அடுத்தடுத்த ஆலைகளில் பல்வேறு விதமான வேதிப்பொருள்கள் தயாரிக்கப்படும். செய்திறன் காரணமாகவும், பெரிய அளவில் உற்பத்தி செய்வதன் சிக்கனம் காரணமாகவும், குழாய்கள், சேமிப்புக் கலன்கள், மின்வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொள்ள இயலுமென்பதாலும், இவ்வாறு கூட்டாக ஒரு இடத்தில் பல பாறைவேதிப்பொருள்கள் தயாரிக்கும் வண்ணம் ஆலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகு உத்தியை ஒருங்கிணைந்த உற்பத்தி என்றும் வேதிப்பொறியியல் துறையில் வழங்குவர். காட்டாக, இங்கிலாந்தில் நான்கு முதன்மையான பகுதிகளில் இத்தகு ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் வடகிழக்குப் பகுதியான தீசைடு (Teesside) என்னும் பகுதியில் மட்டும் இங்கிலாந்தின் பாறைவேதிப்பொருள் உற்பத்தியில் பாதி உற்பத்தி செய்யப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Sami Matar and Lewis F. Hatch (2001). Chemistry of Petrochemical Processes. Gulf Professional Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88415-315-0.
  2. 2.0 2.1 Staff (March 2001). "Petrochemical Processes 2001". Hydrocarbon Processing: 71–246. பன்னாட்டுத் தர தொடர் எண்:0887-0284. 
  3. Hassan E. Alfadala, G.V. Rex Reklaitis and Mahmoud M. El-Halwagi (Editors) (2009). Proceedings of the 1st Annual Gas Processing Symposium, Volume 1: January, 2009 – Qatar (1st ed.). Elsevier Science. pp. 402–414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-53292-7. {{cite book}}: |author= has generic name (help)
  4. SBS Polymer Supply Outlook
  5. Jean-Pierre Favennec (Editor) (2001). Petroleum Refining: Refinery Operation and Management. Editions Technip. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7108-0801-3. {{cite book}}: |author= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைவேதிப்பொருள்&oldid=2884940" இலிருந்து மீள்விக்கப்பட்டது