பார்வதி கிரி
பார்வதி கிரி | |
|---|---|
| பிறப்பு | 1926 சம்பல்பூர், ஒடிசா |
| இறப்பு | 1995 |
| தேசியம் | |
பார்வதி கிரி (Parbati Giri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். 1926 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.[1] மேற்கு ஒடிசாவின் அன்னை தெரசா என்ற செல்லப்பெயரால் அறியப்படுகிறார்.
ஆங்கிலேய அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளால், இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தனது 16 வயதில் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். சுதந்திரம் அடைந்த பிறகும் இவர் சமூக சேவையைத் தொடர்ந்தார். பைக்மால் கிராமத்தில் அனாதை இல்லத்தைத் திறந்து, தன் வாழ்நாள் முழுவதையும் அனாதைகளின் நலனுக்காக அர்ப்பணித்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கிரி தற்போதைய பர்கார் மாவட்டம் மற்றும் பிரிக்கப்படாத சம்பல்பூர் மாவட்டத்திலுள்ள பிசேபூருக்கு அருகிலுள்ள சம்லைபதர் கிராமத்தில் 19 சனவரி 1926 அன்று பிறந்தார்.
மூன்றாம் வகுப்புக்குப் பிறகு இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்ய கிராமம் கிராமமாகப் பயணம் செய்யத் தொடங்கினார். 1938 ஆம் ஆண்டில், இவருக்கு 12 வயதாக இருந்தபோது, சம்லைபதரில் நடந்த ஒரு கூட்டத்தில் மூத்த காங்கிரசு தலைவர்கள், காங்கிரசில் பணிபுரிய அனுமதிக்குமாறு இவரது தந்தையை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு இளம் பெண்ணாக, இவர் பாரி ஆசிரமத்திற்குச் சென்றார். கைவினைப்பொருட்கள், அகிம்சைத் தத்துவம் மற்றும் சுயசார்பு உள்ளிட்ட பல விசயங்களை பார்வதி ஆசிரமத்தில் கற்றுக்கொண்டார்.[2]
காங்கிரசுக்காகப் பணியாற்றுதல்
[தொகு]இவரது மாமா இராமச்சந்திர கிரி ஒரு காங்கிரசு தலைவராக இருந்தார். மேலும் சமலைபதர் கிராமம் தேசியவாதிகள் கூடும் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. பார்வதி தனது மாமாவுடன் நடைபெறும் கூட்டங்களில் அமர்ந்து கேட்பதால், சுதந்திரப் போராட்ட வீரராகப் பணியாற்றும் தாக்கம் ஏற்பட்டது.[3] 1940 ஆம் ஆண்டில் பர்பதி காங்கிரசுக்காக பர்கர், சம்பல்பூர், பதம்பூர், பனிமாரா, கென்சு மற்றும் பிற இடங்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கினார். கிராம மக்களுக்கு பயிற்சி அளித்து, கதர் நூற்பு மற்றும் நெசவு செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். 1942 முதல் அவர் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார். பல முறை கைது செய்யப்பட்டார். ஆனால் இவருக்கு சிறுவயதாக இருந்ததால் காவலர்கள் இவரை விடுவிக்க வேண்டியிருந்தது.[4] இறுதியாக பர்கரில் உள்ள துணைத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது இவர் கைது செய்யப்பட்டார். சம்பல்பூர் சிறையில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பர்கர் நீதிமன்றத்தில், ஆங்கிலேயர்களை மீறி நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வழக்கறிஞர்களை வற்புறுத்துவதற்காக இவர் ஒரு போராட்டத்தை நடத்தினார்.[5]
சுதந்திரத்திற்குப் பிந்தைய வாழ்க்கை
[தொகு]சுதந்திரத்திற்குப் பிறகு, 1950 இல் பிரயாக்ராஜிலுள்ள பிரயாக் மகிளா வித்யாபீடத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் இரமா தேவியுடன் நிவாரணப் பணிகளில் சேர்ந்தார். 1955 ஆம் ஆண்டில், சம்பல்பூர் மாவட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அமெரிக்க திட்டத்தில் சேர்ந்தார். பெண்கள் மற்றும் அனாதைகளுக்காக நருசிங்கநாத் கஸ்தூர்பா காந்தி மாத்ருநிகேதன் என்ற ஆசிரமத்தையும், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சுசோமுரா தொகுதியின் கீழ் உள்ள பிரசிங் காரில் டாக்டர் சாந்த்ரா பால் நிகேதன் என்ற ஆதரவற்றோருக்கான மற்றொரு இல்லத்தையும் தொடங்கினார். சிறை மேம்பாடு மற்றும் தொழுநோய் ஒழிப்பில் இவர் பணியாற்றினார். இந்திய அரசின் சமூக நலத்துறை 1984 இல் இவருக்கு ஒரு விருதை வழங்கியது.[5]
பாராட்டுகள்
[தொகு]1. சம்பல்பூர் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் - 1998 இல் ஒரிசாவின் அப்போதைய ஆளுநர் சக்ரவர்த்தி ரங்கராஜன் என்பவரால் வழங்கப்பட்டது.[3]
2. பார்வதி கிரியின் பெயரிடப்பட்ட மெகா லிஃப்ட் பாசனத் திட்டம்.- டிசம்பர் 2016[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "StreeShakti - The Parallel Force". Retrieved 11 March 2016.
- ↑ "Parbati Giri- The Mother Teresa of Western Odisha - eOdisha.org - latest Odisha News - Business - Culture -Art - Travel" (in en-US). eOdisha.org - latest Odisha News - Business - Culture -Art - Travel. 2013-10-06. http://eodisha.org/parbati-giri/.
- ↑ 3.0 3.1 "Parbati Giri: The Mother Teresa of Western Orissa" (in en-US). Branolia. http://www.branoliachemicals.com/parbati-giri-the-mother-teresa-of-western-orissa/.
- ↑ "Parbati Giri - The Outstanding Women Freedom Fighter" (PDF). Magazines.odisha.gov.in.
- ↑ 5.0 5.1 http://www.orissa.gov.in/e-magazine/Orissareview/aug2005/engpdf/parbati%20giri.pdf
- ↑ "Naveen Patnaik calls Parbati Giri 'Mother Teresa of Odisha'". The Economic Times. 2016-12-25. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/naveen-patnaik-calls-parbati-giri-mother-teresa-of-odisha/articleshow/56162290.cms.