பாரதேந்து அரிச்சந்திரா விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதேந்து அரிச்சந்திரா விருதுகள் (Bharatendu Harishchandra Awards) இந்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இந்தியில் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வழங்குகிறது. இந்த விருது வழங்கும் திட்டம் 1983-ல் தொடங்கியது.[1]

பின்னணி[தொகு]

பாரதேந்து அரிச்சந்திரா விருதுகள், நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை எனப்படும் பாரதேந்து அரிச்சந்திரா நினைவாக வழங்கப்படுகிறது. அரிச்சந்திரா நவீன இந்தியாவின் தலைசிறந்த இந்தி எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் புகழ்வாய்ந்த கவிஞர், இந்தி உரைநடை-எழுதுவதில் புதிய நடைமுறையினைத் தோற்றுவித்தவர் ஆவார்.

விருதுகள்[தொகு]

பாரதேந்து அரிச்சந்திரா விருதுகள், இந்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சத்தினால் 1983ஆம் ஆண்டு முதல் இந்தி மக்கள் தொடர்புகளில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்த விருதுகள் இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்கள்/கையெழுத்துப் பிரதிகளுக்கு கீழ்கண்ட 4 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.[2] இந்த விருது ஆண்டுதோறும் செப்டம்பர் 9ஆம் நாள் பாரதேந்து அரிச்சந்திரா பிறந்த நாளன்று வழங்கப்படுகிறது.[3]

பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு:[தொகு]

ஊடகவியல், விளம்பரம், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், அச்சுப்பத்திர்க்கை, வெளியீடுகள் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியில் ஆக்கப்பூர்வமான கட்டுரை செய்தி எழுதுபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர் முதல் பரிசாக ரூ. 35,000/-, இரண்டாம் பரிசாக ரூ.25,000/-, மூன்றாம் பரிசாக ரூ. 20,000/- பெறுவார். மேலும் ஐந்து ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000/- வீதம் வழங்கப்படும். இதனுடன் பரிசு பெறுபவர் பரிசிற்கான மேற்கோள் ஒன்றையும் பெறுவர்.

தேசிய ஒருமைப்பாடு[தொகு]

தேசிய ஒருமைப்பாடு தொடர்பான புத்தகங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இப்பிரிவில் முதல் பரிசாக ரூ. 15,000/- இரண்டாம் பரிசாக ரூ. 10,000/- மேற்கோளுடன் வழங்கப்படும்.

பெண்கள் பிரச்சினை[தொகு]

சமூகத்தில் பெண்களின் நிலை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்த புத்தகங்களுக்காகப் பெண் எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இப்பிரிவில் முதல் பரிசாக ரூ. 15,000/- இரண்டாம் பரிசாக ரூ. 10,000/- மேற்கோளுடன் வழங்கப்படும்.

குழந்தைகள் இலக்கியம்[தொகு]

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட புத்தகங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இப்பிரிவில் முதல் பரிசாக ரூ. 15,000/- இரண்டாம் பரிசாக ரூ. 10,000/- மேற்கோளுடன் வழங்கப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhartendu Harishchandra Awards conferred". 10 September 2014.
  2. https://www.gktoday.in/topic/bharatendu-harishchandra-award/
  3. "Prize Money of Bharatendu Harishchandra Awards to be enhanced". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.

வெளி இணைப்புகள்[தொகு]

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை 2000-2001. ப 47.