பாரதி மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி மணி
பிறப்புஎஸ். கே. எஸ். மணி
(1937-09-24)24 செப்டம்பர் 1937
பார்வதிபுரம், நாகர்கோயில்
இறப்புநவம்பர் 16, 2021(2021-11-16) (அகவை 84)
குடியுரிமைஇந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

எஸ். கே. எஸ். மணி (Bharathi Mani, 24 செப்டம்பர் 1937 – 16 நவம்பர் 2021) என்ற இயற்பெயர் கொண்ட பாரதி மணி ஒரு தமிழ் எழுத்தாளரும், நாடக, திரைப்பட நடிகரும் ஆவார். பாரதி திரைப்படத்தில் பாரதியாருக்குத் தந்தையாக நடித்த பின் ”பாரதி” மணி ஆனார். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகன்/நாயகிக்கு தாத்தா வேடங்களில் நடித்துள்ளார். உயிர்மை இதழில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ”பல நேரங்களில் பல மனிதர்கள்” என்ற பெயரில் நூலாக வெளியானது. 2015-ல் ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற பெயரில் வம்சி புக்ஸ் பதிப்பாக வெளிவந்தது. 2020-ல் சென்னை வாசகசாலை இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டது. 2019-இல் வாசகசாலை ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ என்ற பாரதி மணியின் புதியபுத்தகத்தை வெளியிட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1937 செப்டம்பர் 24-ம் தேதி நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் சுப்பிரமணியம்-சிவகாமி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப்பிறந்தார். அவரது நாடக அனுபவம் 1944-ல் தொடங்கியது. தனது தந்தையாரால் ஏழாவது வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ மதுரை தேவி பால வினோத நாடக சபாவில் சேர்க்கப்பட்டார். 1955-ல் தில்லி சென்ற இவர் பூர்ணம் விசுவநாதன் இயக்கி நடித்த ஓரங்க நாடகங்களிலும், ஆல் இந்தியா ரேடியோவின் நாடகங்களிலும் பங்குபெற்றார். 1956-ல் தில்லியில் தட்சிண பாரத நாடக சபா வை தமிழ் நாடகத்துக்கான முதல் அமைப்பாக ராமநாதன், ராமதாஸ் ஆகியோருடன் தொடங்கினார். முதல் நாடகம் பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’யில் வேலைக்கார சபாபதியாக நடித்தவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தில்லியில் பம்மல், கோமதி ஸ்வாமிநாதன், கே.கே. ராமன், கே. பாலசந்தர், சோ ராமசாமி, கே. எஸ். ஸ்ரீநிவாசன், இந்திரா பார்த்தசாரதி (இ.பா), சுஜாதா, சி. சு. செல்லப்பா, எஸ். எம். ஏ. ராம் போன்றோரின் பல நாடகங்களில் 2,000 தடவைகளுக்கு மேல் நடித்திருக்கிறார். தில்லி ‘யதார்த்தா’ பென்னேஸ்வரன் இயக்கிய நாடகங்களிலும் இவர் நடித்ததுண்டு. இவரை இயக்கியவர்களில் தி. ஜானகிராமனும் கே. எஸ். ராஜேந்திரனும் அடக்கம். அறுபதுகளில் இப்ராகிம் அல்காஸி இயக்குநராக இருந்த தில்லி தேசிய நாடகப்பள்ளியில் அவரது மாணவராகச் சேர்ந்தார். பம்பாய், கல்கத்தா, சென்னை, சண்டிகர் போன்ற நகரங்களிலும் இவரது நாடகங்கள் மேடையேறின. ”தன்னை நாடகம் எழுதத்தூண்டியவர் பாரதி மணி தான்” என இ. பா. இவரைப் பாராட்டியிருக்கிறார். லண்டன் ஸ்கூல் ஆப் டிராமாவில் குரல் வளத்துக்கான ‘Voice Culture’ சான்றிதழ் பெற்றவர். 2004-ல் தில்லி தேசிய நாடகப்பள்ளியும் ‘நாடக வெளி’யும் பாரதி மணியின் அறுபதாண்டு கால மேடை அனுபவத்தைப் பாராட்டி, ஒரு மாத நாடகப்பட்டறை நடத்தி, விழாவின் முடிவில் மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆளேகர் எழுதிய ‘மஹா நிர்வாணம்’ நாடகத்தின் தமிழாக்கம் இவரது நடிப்பில் நடந்தேறியது. 2011 மார்ச் மாதம் வைக்கம் பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பஷீராக நடித்தது, பரவலான வரவேற்பைப் பெற்றது.

இவரது திரைப்பட வாழ்க்கை 1991-ல் லண்டன் பிபிசி சானல்-4 தயாரித்து, அருந்ததி ராய் கதை வசனமெழுதிய ‘The Electric Moon’ என்ற ஆங்கிலப்படத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு 1991-ல் சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் பாரதி, ஊருக்கு நூறுபேர், நண்பா...நண்பா!, ஒருத்தி, றெக்கை, மொட்டுக்கா, ஆட்டோகிராப், அன்னியன் போன்ற விருதுப்படங்களில் நடித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன்/கதாநாயகியின் தாத்தா பாத்திரங்களில் நடித்துள்ளார். பாபா திரைப்படத்திலும் முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். 2010-ல் நூற்றாண்டு விழா கொண்டாடிய மறைந்த பி. கக்கனாக ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நடித்திருக்கிறார்.

2012-ல் ‘சென்னை அரங்கம்’ என்ற நாடகக்குழுவை அம்ஜத் மணிமேகலை போன்ற நாடக ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்கினார். சென்னை அரங்கத்தின் முதல் நாடகமாக சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்!’ என்ற நாடகத்தை சென்னை ம்யூசியம் அரங்கில் மேடையேற்றினார். இந்நாடகம் திருவண்ணாமலையிலும் அரங்கேறியது.

2015-ல் தனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், பிறகு இவர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்து பரவலான வரவேற்பைப்பெற்றது. பாரதி மணியின் எழுபதாண்டு மேடை அனுபவத்தை முன்னிட்டு ஒரு விழாவும் நடந்துள்ளது

மறைவு[தொகு]

தில்லியில் பல ஆண்டுகளாக உயர் பதவியில் இருந்து, இளைப்பாறிய பின்னர் சென்னையில் வசித்து வந்தார். நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாரதி மணி 2021 நவம்பர் 16 அன்று தனது 84-வது அகவையில் சென்னையில் காலமானார்.[1] அவரது இறுதி விருப்பத்திற்கமைய, அவரது உடல் புனித யோன்சு மருத்துவக் கல்லூரிக்கு குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. மணி பிரபல இலக்கிய திறனாய்வாளர் க.நா.சுவின் மருமகன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_மணி&oldid=3642993" இலிருந்து மீள்விக்கப்பட்டது