பாரதிய நிருத்யா கலா மந்திர், பாட்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதிய நிருத்யா கலா மந்திர் (Bharatiya Nritya Kala Mandir) இந்தியாவின் பீகார் தலைநகரில் பாட்னாவில் அமைந்துள்ளது.பாரதிய நிருத்யா கலா மந்திர் என்பதற்கு இந்திய நடனக் கலை கோயில் என்று பொருள் ஆகும். இந்த மையம் ஒரு கலை மற்றும் கைவினை அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது. இது ஒரு பல்நோக்கு பண்பாட்டு மையம் ஆகும்.

வரலாறு[தொகு]

பாரதிய நிருத்யா கலா மந்திர் பாட்னாவில் உள்ள தூர்தர்ஷன் கேந்திராவிற்கு அருகே அமைந்துள்ளது. [1] பாரதிய நிருத்யா கலா மந்திர் என்ற பெயரில் அமைந்த இந்தக் கலை நிறுவனத்திற்கான அடிக்கல் டிசம்பர் 8, 1950 ஆம் நாளன்று நாட்டப்பட்டது. [2] மணிப்பூரி மற்றும் கதகளி நடன வடிவங்களில் தேர்ச்சி பெற்ற பத்மஸ்ரி ஹரி உப்பால் அவர்களால் இந்த மந்திர் நிறுவப்பட்டது, இது அதிகாரப்பூர்வமாக 1963 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. [3]

கண்ணோட்டம்[தொகு]

இந்த கட்டிடத்தில் நடன மற்றும் நாடக ஸ்டுடியோக்கள், [4] காட்சிக்கூடத்திற்கான இடம் மற்றும் ஒரு கலை அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. [5] இந்த மந்திரில் நாடகம், [6] நேரடி இசை, நகைச்சுவை, நடனம், காட்சி கலை, பேசும் சொல் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன.

இந்தக் கலை அருங்காட்சியகத்தில் பழங்காலத்தின் பல்வேறு கூறுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் டெரகோட்டா, நகைகள், உலோக பொருள்கள், கல் சிற்பங்கள், கல் கருவிகள், மட்பாண்டங்கள், இசைக்கருவிகள், மர பால்கி, ஜவுளி மற்றும் கி.மு. 500 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 500 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முகமூடிகள் ஆகியவை காட்சியில் உள்ளன. [7] இந்த மந்திரில் நடன பயிற்றுனர்கள் ஒடிஸி, பரத்நாட்டியம், கதக், நாட்டுப்புற நடனம் போன்றவற்றை கற்பிக்கிறார்கள்.

இசைப் பல்கலைக்கழகம்[தொகு]

பீகார் அரசு, பாரதிய நிருத்யா கலா மந்திரை ஒரு இசைப் பல்கலைக்கழகமாக மாற்ற தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பீகார் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. மந்திரை ஒரு இசைப் பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பான விவாதம் எழுந்தபோது, இந்த மந்திரானது தனித்து இயங்கும் நிறுவனம் என்றும், அதற்கான நிதி நல்கையானது கலை பண்பாடு மற்றும் இளைஞர் விவகாரத் துறையினால் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்புடைய அமைச்சர் கூறினார். தற்போதைக்கு இதனை ஓர் இசைப் பல்கலைக்கழகமாக முன்னேற்றம் செய்து மாற்றுவதற்கான எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிறுவனத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பில் முக்கியமான தலைமைப்பொறுப்பில் உள்ள மாநில வளர்ச்சி ஆணையர் பாரதிய நிருத்யா கலா மந்திரின் தலைமைப் பொறுப்பில் உள்ளதாலும், இந்த மந்திரின் உறுப்பினர்களில் ஒருவராக நிதிச் செயலர் இருந்து வருவதாலும் தற்போது இந்த மந்திரானது ஓர் அரசு நிறுவனம் போலவே இயங்கி வருகிறது என்று கூறினார். அரசு நிறுவனமாக இயங்கி வருகின்ற நிலையில் இதனை ஒரு தனித்த நிறுவனமாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார். துணை முதலமைச்சர் 2009-10 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த புகழ் பெற்ற இந்த கலை நிறுவனத்தை ஓர் இசைப் பல்கலைக்கழகமாக மாற்றப் போவதாகக் கூறியிருந்தார். இதனை இசைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதில் உள்ள சிக்கல்களை அரசு ஆராய்ந்து வருகிறது. [8]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]