பாப்பா உமாநாத்
பாப்பா உமாநாத் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | birth_name தனலட்சுமி 5 ஆகத்து 1931 கோவில்பட்டு , தமிழ்நாடு |
இறப்பு | 17 திசம்பர் 2010 திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | (அகவை 79)
இளைப்பாறுமிடம் | birth_name தனலட்சுமி |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | ஆர். உமாநாத் |
பெற்றோர் |
|
பாப்பா உமாநாத்(5 ஆகத்து 1931 – 17 திசம்பர் 2010), இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் தலைவர்களில் ஒருவருமாவார்.திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், தமிழகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் நிறுவனத் தலைவராகவும், அகில இந்திய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர்.[1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]தமது சிறு வயதிலேயே பாப்பா உமாநாத் பொன்மலை சங்கத்திடலில் ரயில்வே தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான ரயில்வே போராட்டங்களுக்கு வழிகாட்டிட திருச்சி பொன்மலைக்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சாற்றல் மற்றும் தலைவர்களின் எளிமையான வாழ்க்கை, தலைவர்களின் அயராது பணியாற்றல் போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு பாப்பா மார்க்சியக் கொள்கைகளின்பால் தமது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். ரயில்வே தொழிலாளர் போராட்டங்களின் போது சிறுவயதிலேயே செங்கொடி ஏந்தி போராட்டக்களத்தில் கோஷங்கள் இட்டவாறு சென்றது, அடக்குமுறைக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் என தமது தாயார் லட்சுமி அம்மாளுடன் இணைந்து உதவிப் புரிந்தது, கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டது அவரது அரசியல் பங்கேற்பை உறுதி செய்தது. அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் இளம் தலைவராக விளங்கிய ஆர். உமாநாத்தை திருமணம் செய்து கொண்டார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் திருச்சி மாவட்ட செயற்குழு, மாநிலக்குழு, மாநில செயற்குழு, மத்தியகுழு உறுப்பினராக இருந்தார். தோழர் கே. பி. ஜானகி அம்மாள் அவர்களுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் ஸ்தாபகத் தலைவராக, அகில இந்திய தலைவர்களில் ஒருவராக, புரலவராக தமது இறுதிக்காலம் வரை இயக்கத்திற்கான வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது.[1]
வாச்சாத்தி வன்கொடுமை
[தொகு]தர்மபுரி வாச்சாத்தியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் பெண்களின் மீது அரசு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் நடத்திய மிகக் கொடுமையான பாலியல் வன்கொடுமைக்கெதிராக தமிழகம் முழுவதும் பெண்களை அணிதிரட்டி தலைமையேற்று நடத்திய போராட்டங்கள், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் இவரின் பங்கு இருந்தது.[1]
சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை
[தொகு]சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னணியில் இக்கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கிடைத்திடவும், பத்மினிக்கு அரசு வேலை அரசு நிவாரணம் கிடைத்திடவும், அவர் தொடர் முயற்சிகள் எடுத்தார்.[1]
பிரேமானந்தா ஆசிரம பாலியல் வன்கொடுமை
[தொகு]பிரேமானந்தா ஆசிரமத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிரமத்தில் நடந்த கொலைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பலவேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி, வழக்குகளில் வெற்றிக்கண்டார்.[1]
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
[தொகு]திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது பொன்மலைப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வருவதிலும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் தலையிட்டு அனைத்திலும் தீர்வுகாண்பதில் சட்டமன்றத்திலும், அரசியல் கட்சி தலைவர்களோடும், அதிகாரிகளிடமும் இடைவிடாது பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றியுள்ளார்.[1]