பாபாக்னி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபாக்னி ஆறு (Papagni River) தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாய்கின்ற ஒரு ஆறாகும். பெண்ணாற்றின் வலது கரையில் உள்ள கிளை ஆறாகும். [1][2]

பெயர்க்காரணம்[தொகு]

பாபாக்னி என்ற வார்த்தை பாவம் மற்றும் அக்னி ஆகிய வார்த்தைகளின் கூட்டு வார்த்தையாகும். இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களான செஞ்சூ இன மக்களின் ஒன்றுமறியா தலைவன் ஒருவனை அரசனொருவன் கொன்று விட்டதாகவும், அதற்கான தண்டனையாக அந்த மன்னனுக்குத் தொழுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், பாபாக்னி பள்ளத்தாக்கில் உள்ள இந்த ஆற்றில் மூழ்கி எழுந்த பிறகு அரசனின் பாவம் நிவர்த்தியானதாகவும் அன்று முதல் இந்த ஆறு பாபாக்னி என்று வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.[3]

ஆற்றின் போக்கு[தொகு]

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் இந்த ஆறானது உற்பத்தியாகிறது. இது ஆண்டொன்றுக்கு 60–80 செமீ மழைப்பொழிவைப் பெறக்கூடிய நீர்ப்பிடிப்புப் பகுதியையே நீராதாரமாகக் கொண்டுள்ளது. இது கோடை காலத்தில் வறண்டு காணப்படும் ஆறாகும். இந்த ஆறானது, கருங்கல் பாறைப் படிவுகளைக் கொண்டுள்ள பகுதியின் வழியாகவும் அடிக்கடி மண்ணரிப்பிற்கு உள்ளாகும் செம்மண் படிவுகளைக் கொண்ட பகுதியின் வழியாகவும் பாய்ந்து செல்கிறது.[4] இந்த ஆறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வழியாகவும்[5] ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர், அனந்தப்பூர் மற்றும் கடப்பா மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்கிறது.[6] இந்த ஆற்றுப்படுகையானது 8,250  சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கியதாகும் மேலும் இது ஆந்திரப்பிரேதசத்தின் இராயலசீமா பகுதியில் உள்ள 21 தாலுகாக்களை உள்ளடக்கி 30 தாலுகாக்களை வடிநிலப்பகுதியாகக் கொண்டுள்ளது.[7]ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் என்ற இடத்திற்கருகில் இது பெண்ணாற்றுடன் இணைகிறது.[8]

சூழலியல் பிரச்சனைகள்[தொகு]

இந்த ஆறானது சமீபத்திய ஆண்டுகளில் பல மனிதச் செயல்பாடுகளின் காரணமாக பலத்த சீரழிவிற்கு உள்ளாகியுள்ளது. ஆற்றுப்படுகையில் இருந்து வரையறுக்கப்படாத மற்றும் மிகையான மணல் வாரியெடுக்கப்படுவது ஆற்றின் வடிநிலத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. ஆற்றங்கரையிலும், ஆற்றிலும் கட்டுமானப் பயன்பாடுகளுக்காக நிலத்தினை சிதைப்பது ஆற்றுப்படுகையின் ஆழத்தை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தின் தரத்தினையும் குறைப்பதற்குக் காரணமாக இருக்கிறது. [6]சூழலியல் பாதுகாப்புக்கான அறக்கட்டளை மற்றும் சமூகப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளான தடுப்பணைகளை பழுது நீக்கம் செய்வது, கரையோரங்களில் மரங்கள் நடுவது போன்ற செயல்களின் காரணமாக ஓரளவிற்கு நிலத்தடி நீரின் இருப்பு உயர்ந்திருக்கிறது. இந்த முயற்சியின் வெற்றி கர்நாடகாவில் அர்காவதி ஆற்றில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ravindranath, R. "The Role of Participatory Hydrological Monitoring in Groundwater Governance: Towards Evolving Informed Adaptative Mechanisms" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pennar Basin". Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Papagni River". பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
  4. Sinha, Himadri (2006). People and Forest: Unfolding the Participation Mystique. New Delhi: Concept Publishing Company. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180692468. https://books.google.com/books?id=uh8DFm5ckdwC&pg=PA237&lpg=PA237&dq=papagni+river#v=onepage&q=papagni%20river&f=false. 
  5. "PAPAGNI RIVER SUB-WATERSHED, KOLAR DISTRICT". Watershed Development Department, Government of Karnataka. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 Rao, M Chandrasekhara (18 February 2006). "Groundwater Depletion in Papagani Catchment". Economic and Political Weekly. http://waterconflictforum.org/pdf/resources/Economic%20and%20Political%20Weekly%20case%20studies/conflicts_papagani.pdf. பார்த்த நாள்: 29 June 2013. 
  7. Krishnaiah, Y V (1 February 2013). "Landuse Pattern and Landuse Efficiency of the Papagni River Basin, India". Indian Journal of Spatial Science 4.0 (1): 59–68. http://indiansss.org/pdf/2013-issues/summer-issues/Article8_Krishnaiah.pdf. பார்த்த நாள்: 29 June 2013. 
  8. Jain, Sharad Kumar (2007). Hydrology and Water Resources of India. Dordrecht, The Netherlands: Springer. பக். 728. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402051807. https://books.google.com/books?id=ZKs1gBhJSWIC&pg=PA728&lpg=PA728&dq=papagni+river#v=onepage&q=papagni%20&f=false. 
  9. "Papagni's course to show way for River Arkavathy". The New Indian Express. May 16, 2012. http://newindianexpress.com/cities/bangalore/article148468.ece?service=print. பார்த்த நாள்: 29 June 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபாக்னி_ஆறு&oldid=3791481" இலிருந்து மீள்விக்கப்பட்டது