உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியர் காலக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாண்டியர் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

12 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது.

சோழர் காலத்தைப் போல பாண்டியர் காலம் கட்டிடக்கலைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களுக்கான அடிப்படைகளை இக்காலக் கட்டிடங்களிற் காண முடியும். பாண்டியர் காலத்துக்கு முற்பட்ட வட இந்தியக் கோயில்களிலும், தென்னிந்தியாவில் பல்லவர், சோழர் காலக் கோயில்களிலும் சிற்பிகளின் அடிப்படைக் கவனம் கோயிலின் கருவறைக்கு மேல் அமைந்த விமானம் அல்லது சிகரம் என்று அழைக்கப்பட்ட அமைப்பின் மீதே இருந்தது. இதுவே கோயில்களின் மிக உயரமான அமைப்பாகவும் இருந்தது. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் முதலியவை மிகப்பெரிய விமானங்களை உடையவையாக அமைக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் இம் முறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிகரம் அதன் கட்டிடக்கலை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. பழைய கோவில்களைச் சுற்றிப் புதிய வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்கின. கோயில்களைச் சுற்றி உயர்ந்த சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுக் கோபுரங்களுடன் கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. படிப்படியாக இக் கோபுரங்கள் கோயில்களின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்களாக ஆயின.