பாடகச்சேரி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அல்லது பாடகச்சேரி சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர்[1][2]. வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவர். இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் முக்கியமானதாகும். இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார். இவர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு மடம் உள்ளது. [3] பெங்களூர், தஞ்சாவூர், சென்னையில் உள்ள கிண்டி போன்ற ஊர்களில் பாடகச்சேரி சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

தோற்றம்[தொகு]

மௌனசுவாமியைப் போல கும்பகோணத்தில் இருந்த மற்றொருவர் பாடகச்சேரி சுவாமி ஆவார். வெள்ளை வெளேர் என்று வேட்டி அணிந்திருப்பார். இடுப்பைச்சுற்றி வருகிற அதே துணியால் உடம்பை மூடிக் கழுத்துக்குப் பின்னால் கட்டிக்கொண்டிருப்பார். நெற்றி நிறைய விபூதி. ஒரு பித்தளைச் செம்பைக் கயிற்றில் சுருக்குப் போட்டுக் கோத்து அதைத் தம் வயிற்றுக்கு முன்னால் கட்டியிருப்பார். அவருடைய கண்ணைப் பார்த்தால் ஒரு தெளிவு இருக்கும். அவருடைய இடுப்பில் தொங்குகிற பாத்திரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த சில்லறையைப் போட்டுவிடுவர். [4] கும்பகோணத்தில் எண்.14, கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் உள்ள கோதண்டபாணி என்பவர் இல்லத்தில் 1920ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்தார். [5]

திருப்பணி[தொகு]

புகழ் பெற்ற நாகேஸ்வரர் கோயில் கோபுரத்தில் மரம் செடிகள் முளைத்து அது பிளப்புண்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அந்த கோபுரத்தை சீரமைக்க உறுதி கொண்டார். தனிநபராக அவர் சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து, அக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். திருநாகேஸ்வரம் கோயிலில் ராமலிங்க சுவாமிக்கு தனிச் சந்நிதியும், ராஜகோபுரத்தில் திருவுருவச்சிலையும் உள்ளன.

நவகண்ட யோகம்[தொகு]

உடலினை ஒன்பது பாகங்களாக அரிந்து கிடைப்பத்தைப் போல செய்து சிவபெருமானை நினைத்து யோகம் செய்யும் முறைக்கு நவகண்ட யோகம் என்றும் பெயர். சித்தர்கள் செய்கின்ற சித்துகளில் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் இந்த சித்தில் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் தேர்ச்சி பெற்றிருந்தார். சிறுவயதில் இவர் செய்த நவகண்ட யோகமே இவரை சித்தர் என உறவினர்கள் அறிந்து கொள்ள காரணமாக இருந்துள்ளது. அத்துடன் அடியாட்கள் இவரை கொல்ல நினைத்து வரும்போது நவகண்ட யோகத்தில் இருந்தவரை கண்டு திகைத்தி ஓடியுள்ளார்கள். [6]

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை[தொகு]

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை கும்பகோணத்தின் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முத்துப்பிள்ளை மண்டபத்தில் சுவாமிகள் தங்கியிருந்தபோது யோகமார்க்கத்தில் சென்றார். அவர் அங்கிருந்தபோது ஊரில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடியது. அங்கு அவர் ‘கூழ்சாலை” ஒன்றைத் துவங்கி மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார். [7] இந்த கூழ்சாலையில் எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான சபை, சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை ஆகியவை அமைந்துள்ளன.

ஊடகங்களில்[தொகு]

நூல்கள்[தொகு]

விகடன் பிரசுரத்தின் வெளியீட்டில் எழுத்தாளர் பரணீதரன் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் எனும் நூலினை எழுதியுள்ளார். இந்நூல் சுவாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து எழுதப்பட்டதாகும். வள்ளலாரைப் போல இலகிய மனம் கொண்டவராய், கோயில்கள் சிதலமடைந்து கண்டிருப்பதை காண்கையில் அதற்குப் பொறுப்பேற்று செல்வங்களை சேர்த்து குடமுழுக்கு செய்வித்துள்ளார் என இந்நூல் தெரிவிக்கிறது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. வலங்கைமானில் ஆகஸ்ட் 12 ல் பாடகச்சேரி சுவாமிகள் குருபூஜை
  2. வள்ளலார் காட்டிய வழியில்...
  3. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் தலவரலாற்றுச்சுருக்கம், திருக்கோயில் வெளியீடு, 1998
  4. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985
  5. முனைவர் சண்முக. செல்வகணபதி, முனைவர் செ.கற்பகம், அருள்மிகு புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் திருத்தலப்பெருமைகள்,கற்பகம் பதிப்பகம், ஏப்ரல் 2013
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=37463
  7. குரு மகான் தரிசனம் 12 : ஶ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், காமதேனு, 30 ஆகஸ்டு 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  8. http://books.vikatan.com/index.php?bid=74

வெளியிணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

பரணீதரன், ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள், விகடன் பிரசுரம்