பாகியன் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகியன் குகை

பாகியன் குகை (Fa Hien Cave) என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குகை ஆகும். இது புத்த பிக்குவான ஃபாசியெனின் (Faxian) பெயரைத் தழுவியே இக்குகைக்குப் பெயர் ஏற்பட்டதாக மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. ஆனாலும், இதற்கு எவ்விதத் தொல்லியல் சான்றுகளோ வரலாற்றுச் சான்றுகளோ கிடையா. 1960களிலும், 1980களிலும் தொல்பழங்கால மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இக்குகையில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இக்குகை முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாற்றுக்கு முந்தியகால மனித எச்சங்கள்[தொகு]

குகை
பாகியன் குகைத் தொல்லியல் களம்

இந்தக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மனிதப் புதைகுழி 1968ல் தொல்பொருளியல் திணைக்களத்தைச் சேர்ந்த சிரான் யூ. தெரணியகலவினால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1988ல் உதவியாளரான டபிள்யூ. எச். விஜேபாலவுடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு நடத்தினார். நுண்கற்கருவிகள், பழங்கால நெருப்பின் எச்சங்கள், தாவர மற்றும் மனித எச்சங்கள் என்பன ஆய்வின்போது கிடைத்த முக்கிய பொருள்கள். கதிரியக்கக்காபன் காலக்கணிப்பின்படி இக்குகையில் ஏறத்தாழ 33,000 முதல் 4,750 ஆண்டுகள் முன்பு வரை மனிதர் வாழ்ந்தது தெரியவருகிறது. பல்வேறு மட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கோர்னெல் பல்கலைக்கழகத்தின் மனித உயிரியல் ஆய்வுகூடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கே முனைவர் கென்னத் ஏ. ஆர். கென்னடியும் அவரது மாணவர்களில் ஒருவரான யோஆன் எல். சகோர்ஸ்கியும் அவற்றை ஆய்வு செய்தனர்.[1] மனித எலும்புகளின் மிகப் பழைய துண்டுகளில் ஒன்று சிறு பிள்ளைக்குரியது, இரண்டு வயது கூடிய சிறுவர்களிக்கும், இன்னொன்று இளம் பருவம் சார்ந்த ஒருவருக்கும், மேலும் இரண்டு வயது வந்தவர்களுக்கும் உரியதாகக் காணப்பட்டது. இவை இரண்டாம் நிலை புதைப்புக்கு உரிய சான்றுகளைக் கொண்டவையாக இருந்தன. இரண்டாம்நிலைப் புதைப்பு என்பது, இறந்த உடலைச் சிதைவடையவும், பிணந்தின்னி விலங்குகளுக்கு உணவாகவும் விட்ட பின்னர் எலும்புகளைப் புதைப்பதைக் குறிக்கும். பிந்தியகால எச்சங்கள் 6,850 ஆண்டுகள் பழமையான சிறு பிள்ளையொன்றின் எலும்பும், 5,400 ஆண்டுகள் பழமையான இளம் பெண்ணுடைய எலும்பையும் உள்ளடக்கியிருந்தன. இரண்டுமே இரண்டாம்நிலைப் புதைப்புகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Travels of Pahiyangala. Lakvida.com. Accessed May 19, 2012.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகியன்_குகை&oldid=3678924" இலிருந்து மீள்விக்கப்பட்டது