பழைய காஞ்சிப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிபுரம் நகரின் பெருமைக் கூறும் இலக்கியங்கள், புராணங்கள் பல உள்ளன. சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணம் நூலை அருளியுள்ளார். கச்சாலையார் எழுதிய இந்நூல் பழைய காஞ்சிப் புராணம் எனப்படுகிறது.

நூல் வரலாறு[தொகு]

இந்நூல் பன்னிரண்டு சருக்கங்களையும், ஆயிரத்து இருநூற்று எழுபத்திரண்டு விருத்தங்களையும் கொண்டுள்ளது. காஞ்சியம் புராணம் எனக் கணபதி காப்பில் காணப்படுவதுடன் காமாட்சி ஏகம்பவாணர் புராணம் என்றும் ஏகம்பர் புராணம் என்றும், கம்பர் புராணம் என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது.

நூலாசிரியர்[தொகு]

இந்நூலை இயற்றியவர் கச்சாலையார் என்பவர். இவர் கச்சாலை அகளங்கர் என்றும் பூரண லட்சண கச்சாலை போதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். இவர் காழி வள்ளல் சந்தானத்துச் சோமானன் என்பவரின் சீடராவார். இவர் கச்சிக்கோவை, பாரதம் போன்ற வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

பதிப்புகள்[தொகு]

உவேசா பழைய காஞ்சிப் புராணம் எனும் இந்நூலை 1983 இல் முதன் முதலாகப் பதிப்பித்தார். இது பிரெஞ்சு நாட்டு வின்ஸோன் துறையின் மாணாக்கர் பொண்டெனூ என்பார் ஆர்வமுடன் கேட்டுப் பெற்றுப் படித்துத் தந்த ஒரு ஓலைச் சுவடியாகையால் இதைக் கடல் கடந்த தமிழ் என்கிறார் உ.வே.சா.[1] ஆளவந்தார் ஆதீனக் கச்சாலையார் இயற்றிய காஞ்சிப் புராணம் எனும் தலைப்பில் இந்நூல் சுவடிப் பதிப்பாக வெளிவந்துள்ளது. நூல் தொடக்கத்தில் சுமார் 81 பக்கங்களில், காஞ்சித் திருத்தலங்களைப்பற்றிய குறிப்புகள் எனும் தலைப்பில் சுமார் 84 தலங்கள் அகர வரிசையில் விளக்கப்பெற்றுள்ளன.

உசாத்துணை[தொகு]

எஸ்.கே.இராமராசன் (பதிப்பாசிரியர்) காஞ்சிப்புராணம் உ.வே.சா நூல் நிலையம்.

  1. அன்னி தாமசு (1995). எண்பத்து மூன்றில் தமிழ் பகுதி 2. சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம், நாட்டை.