பழுப்பு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுப்பு ஆந்தை
Strix aluco, juv
Hooting song, UK
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. aluco
இருசொற் பெயரீடு
Strix aluco
லின்னேயஸ், 1758

பழுப்பு ஆந்தை (brown owl) அல்லது தோனி ஆந்தை (tawny owl) என்பது, பருத்த தோற்றம் உடையதும் நடுத்தர அளவு கொண்டதுமான ஆந்தை ஆகும். இது யூரேசியப் பகுதிக் காடுகளில் காணப்படுகின்றது. வெளிறிய நிறம் கொண்ட இதன் கீழ்ப் பகுதிகளில் கடுமையான நிறத்திலான வரிகள் காணப்படும். மேற்பகுதிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக இருக்கும். ஏற்றுக்கொள்ளப்பட்ட 11 துணை இனங்களில் பலவற்றில் இவ்விரு வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை மரப் பொந்துகளில் தமது கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. இக்கூடுகள் முட்டைகளையும் குஞ்சுகளையும் கொன்றுண்ணிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகின்றன. புலம் பெயராத இப்பறவைகள், குறித்த பகுதிகளுக்குள்ளேயே வாழுகின்றன. தாயின் கவனிப்புக் காலம் முடிந்ததும், புதிய பகுதிகள் கிடைக்காவிட்டால் இளம் பறவைகள் பட்டினி கிடக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இரவில் இரைதேடும் இப்பறவை, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளையே பெரும்பாலும் வேட்டையாடுகிறது. மரத்தில் இருந்து சடுதியாக விழுவதன் மூலம் இரையைப் பிடிக்கும் இவ்வகை ஆந்தைகள், இரையை முழுதாகவே விழுங்குகின்றன. கூடிய நகராக்கம் பெற்ற பகுதிகளில் வாழும் பழுப்பு ஆந்தைகளின் உணவில் பறவைகள் கூடிய விகிதத்தில் காணப்படுகின்றன. பார்வை, கேட்டல் என்பன தொடர்பான இசைவாக்கங்களும், அமைதியான பறப்பும் இவற்றின் இரவு வேட்டைக்கு உதவியாக அமைகின்றன. பழுப்பு ஆந்தைகள் பிற சிறிய ஆந்தைகளையும் பிடித்து உண்னக்கூடியவெ. அதேவேளை, இவையும், கழுகு ஆந்தை, வடக்கத்தைய வல்லூறு போன்ற பெரிய பறவைகளால் பிடிக்கப்படக்கூடிய ஆபத்து உண்டு.

பலர் இந்த ஆந்தைகளுக்குச் சிறந்த இரவுப் பார்வை உண்டு என நம்புகின்றனர், ஆனால், இவற்றின் விழித்திரை மனிதரின் விழித்திரையை விடக் கூடிய உணர்திறன் கொண்டது அல்ல. சமச்சீரற்று அமைந்த இவற்றின் காதுகளே சிறப்பான ஒலியின் திசையறியும் பண்பைக் கொடுப்பதன் மூலம், அவை வேட்டையாடுவதற்கு முக்கியமானவையாக அமைகின்றன. இவற்றின் இரவில் திரியும் பழக்கம், பயத்தை விளைக்கும் ஒலி என்பன இவற்றுக்கு "துரதிட்டம், "இறப்பு" என்பன சம்பந்தமான பழங்கதைத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன.

விபரங்கள்[தொகு]

பழுப்பு ஆந்தை, ஒரு உறுதியான பறவை. இது 37–46 சமீ (15–18 அங்குலம்) நீளத்தையும், 81–105 சமீ (32–41 அங்குலம்) இறக்கை அகல்வையும் கொண்டது. எடை 385 தொடக்கம் 800 கிராம் (0.849 தொடக்கம் 1.764 இறா.) வரை இருக்கும்.[2][3] இவற்றின் பெரிய வட்டமான தலையில் காது மடல்கள் இல்லை. இவற்றின் துணை இனங்கள் இரண்டு வகைகளாகக் காணப்படுகின்றன. இவை அவற்றின் இறகுத் தொகுதியின் நிறத்தால் வேறுபடுகின்றன. ஒரு துணைவகை செம்பழுப்பு நிற மேற்பகுதியையும், மற்றது சாம்பல் பழுப்பு நிற மேற்பகுதியையும் கொண்டவை. சிலவேளைகளில் இவற்றுக்கு இடைப்பட்ட நிறங்களும் காணப்படுவது உண்டு. இரண்டு வேறுபாடுகளிலும், கீழ்ப்பகுதி பழுப்பு வரிகளோடு கூடிய வெள்ளை நிறம் கொண்டதாகவே இருக்கும்.[4] யூனுக்கும், டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக இறகுகள் உதிர்கின்றன.[5] இவை பால் அடிப்படையில் ஈருருவத் தன்மை கொண்டவை. அதாவது, இவ்வினத்தில் ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடான தோற்றம் காணப்படுகின்றது. பெண் பறவை ஆணிலும் பெரியது. அது 5% கூடுதலான நீளமும், 25% கூடிய நிறையும் உடையது.[6]

பழுப்பு ஆந்தைகளின் பறப்பு நீண்ட தூரச் சறுக்கும் இயக்கத்துடனும், குறைவான ஏற்றத் தாழ்வுகளுடனும் கூடியது. இவை பிற யூரேசிய ஆந்தைகளை விடக் குறைவாகவே பறப்பின்போது சிறகடிப்பதுடன், கூடிய உயரத்திலும் பறக்கின்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Strix aluco". The IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22725469A86871093. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725469A86871093.en. http://www.iucnredlist.org/details/22725469/0. பார்த்த நாள்: 15 January 2018. 
  2. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), ISBN 978-0-8493-4258-5.
  3. Eurasian Tawny Owl – Strix aluco. The Owl Pages
  4. Killian Mullarney; Lars Svensson (ornithologist); Dan Zetterström; Grant, Peter J. (1999). Collins Bird Guide. London: HarperCollins. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-219728-6. https://archive.org/details/collinsbirdguide0000sven. 
  5. RSPB Handbook of British Birds (2014). ISBN 978-1-4729-0647-2.
  6. "Tawny Owl Strix aluco [Linnaeus, 1758]". BirdFacts. British Trust for Ornithology (BTO). பார்க்கப்பட்ட நாள் 31 May 2008.
  7. Snow, David (1998). Perrins, Christopher M.. ed. The Birds of the Western Palearctic concise edition (two volumes). Oxford: Oxford University Press. பக். 907–910. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-854099-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_ஆந்தை&oldid=3932438" இலிருந்து மீள்விக்கப்பட்டது