பழந்தின்னி வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழந்தின்னி வௌவால்[தொகு]

பழந்தின்னி வௌவால்

பறக்கும் நரி என்றும் குறிப்பிடுவர். முதுகெலும்பு உடைய விலங்குகளில் வௌவால் மட்டுமே பறக்கக் கூடியது. இது கைரோப்டீரா என்னும் பாலூட்டி வரிசையில் அடங்கும். கிரேக்க மொழியில் கைரோப்டீரா என்பது கை இறக்கை என்று பொருள்படும்.

பொதுப்பண்பு[தொகு]

தோல் மெல்லிய முடியால் மூடப்பட்டுள்ளது. வாயில் பற்களும் நான்கு அறைகள் கொண்ட இதயமும் காணப்படும். பழந்தின்னி வௌவால் மரங்களிலும், பூச்சித் தின்னி வௌவால்இருட்டு குகைகளிலும் தலைகீழாகத் தொங்குகின்றன. இதற்கேற்றவாறு இவற்றின் கீழ்க்கால்கள் மாற்றமடைந்துள்ளன.

முன்கால்கள் மிகவும் நீண்டுள்ளன. மேல்கை எலும்பும், ஆர எலும்பும் நீளமாக இருக்கின்றன. முழங்கை எலும்பு எச்ச உறுப்பாக மாறியுள்ளது. உள்ளங்கை எலும்புகள், அண்மை விரல் கணு எலும்புகள் ஆகியவை 2-5 விரல்களில் மிக மிக நீண்டுக் காணப்படுகின்றன. பாதங்களை தவிர்த்துப் பின்கால்களுக்கிடையே தொடையிடைச் சவ்வு ஒன்று உள்ளது. வால்பகுதி இந்தச் சவ்வில் அமைந்துள்ளது.

முன் கழுத்தெலும்பு உறுதியாகவும், மார்பெலும்பு, தோல்பட்டை ஆகியவற்றுடன் இணைந்தும் அமைந்திருக்கும். விலா எலும்பு தட்டையாகவும் முள்ளெலும்புடன் இணைக்கப்பட்டும் காணப்படுகிறது. பறக்கும் போது கடினத்தன்மை பெறுகிறது. பின்கால் எலும்பு சிறியதாகவும், உறுதியற்றும் உள்ளது. ஏனைய பாலூட்டிகளில் இருப்பதைப் போலன்றி முழங்கால் பின்னோக்கி வளைந்துள்ளது.

மெகாகைரோப்டீரா[தொகு]

இவ்வினம் படிமலர்ச்சியில் முதலில் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதன் கண்களும் காதுகளும் நரி அல்லது நாயின் முக அமைப்பைக் கொண்டுள்ளமையால் பறக்கும் நரி எனக் கூறப்படுகிறது. இதுவே வௌவால்களில் மிகப் பெரியது. இறக்கைகள் இரண்டும் விரிந்த நிலையில் 2 மீ நீளமிருக்கும். வாழ் கிடையாது. உடல் மென்மையான பழுப்பு நிறக் குறுமென் மயிரால் மூடப்பட்டுள்ளது.

வெப்ப நாடுகளில் காணப்படும் பறக்கும் நரி பழங்களை உணவாகக் கொள்கிறது. தட்டையான பல்சிகரங்களையும், பின்கடைவாய்ப் பற்களையும் கொண்டுள்ளது.இப்பற்கள் பழங்களை உடைத்துத் தின்பதற்கு உதவியாக இருக்கின்றன. சில சிறப்பினங்களில் நீண்ட நாக்கு உள்ளது. இது தேனையும், மகரந்தத்தையும் எடுத்து உன்ன உதவுகிறது. மலருக்கு முன்னால் அதன் மேலே உட்காராமலேயயே பறந்து கொண்டே தேனை அருந்துகிறது.

இந்தியா,இலங்கை, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கிந்திய தீவு, பிலிபைன்ஸ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

மைக்ரோகைரோப்டீரா[தொகு]

பூச்சித் தின்னும் வௌவாலாகும். டெஸ்மோடஸ், வெஸ்பர்டிலியோரைவா லோபஸ் போன்றவை இதில் அடங்கும். தொடையிடைச் சவ்வில் வால் அமைந்துள்ளது. புறச்செவி பெரிதாகவும், துணை மடலைக் கொண்டும் உள்ளது. எதிரொலி உணர்தல் மூலம் திசை அறிகின்றன.\

பழக்க வழக்கங்கள்[தொகு]

பகல் பொழுதில் மரக்கிளையில் தொங்குகிறது. மாலை நேரங்களில் கீச்சிட்டுக் கொண்டு மரக்கிளைகளுக்கிடையே பறக்கத் தொடங்கும். முதலில் பறக்கின்ற ஒன்றைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவை ஒரே சமயத்தில் அந்தப் பகுதியை நோக்கிச் செல்லும். சில சமயங்களில் நீண்ட தொலைவும் செல்வதுண்டு.

பெரிய ஆலமரங்கள், அத்தி மரங்கள், புளிய மரங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட மரக் கூட்டங்களில்தான் ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது. வேறு இடங்களை நாடிச் செல்வதில்லை. திறந்த வெளிகளில் உறங்குவதால் எதிரிகளின் கண்ணுக்கு எளிதில் புலனாகின்றது. கும்பலாக வாழும் பழக்கமே கொண்டது. இவ்வௌவால் ஒளிரும் நிறங்களுடன் காணப்படுகிறது. இதன் தலையும் கழுத்தும் பொன்னிறமாகவும், உடலும், இறக்கையும் கருமை நிறமாகவும் உள்ளன.

கூட்டு வாழ்க்கை[தொகு]

கூட்டமாக வாழ்ந்தாலும் இவற்றிற்கிடையே கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பு முறைகள் இல்லை. பெற்றோரும், குட்டிகளும் நீண்ட நாள்கள் இணைந்து வாழ்கின்றன. தலைமை தாங்கி நடத்தும் பழக்கம் இல்லை. பழங்களைப் போட்டியிட்டு கொண்டு உண்ணுகின்றன. தூங்கும் இடங்களுக்காகவும் சண்டையிட்டுக் கொள்கின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

பழத் தாவரங்கள் பூக்கத் தொடங்கும் முன்பாகவே குட்டிகளை ஈனுகிறது. மும்பை பகுதிக்கு அருகில் உள்ள பழந்தின்னி வௌவால் அக்டோபர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் புணர்ச்சியில் ஈடுபடுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் குட்டிப்போடுகிறது. குட்டிகள் தாமாக பறந்து செல்லும் நிலை வரை அவற்றைத் தம்முடன் எடுத்துச் செல்கிறது. சில இந்திய வௌவால்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடாத போது ஆணும், பெண்ணும் தனித் தனியாக உறங்குகின்றன.

[1] [2]

[3]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
  2. Helgen, K.; Salas, L. & Bonaccorso, F. (2008). "Pteropus conspicillatus". IUCN Red List of Threatened Species. Version 3.1 (3.1). International Union for Conservation of Nature. Retrieved 23 December 2013.
  3. "Spectacled Flying-fox". Australian Museum. 2010. Retrieved January 12, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழந்தின்னி_வௌவால்&oldid=2446350" இருந்து மீள்விக்கப்பட்டது