உள்ளடக்கத்துக்குச் செல்

பழஞ்சோறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழஞ் சோறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழஞ்சோறு அல்லது பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்கின்றார்கள். நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான இது பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாகவும் உள்ளது. இதனால், சமூகத் தகுதியில் உயர்ந்தவர்களும், பணக்காரர்களும், நகரங்களில் வாழ்வோரும் பழஞ்சோற்றைத் தாழ்வாகப் பார்க்கும் நிலை உள்ளது. நொதிக்கவைத்தல், உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் அவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குமான மிகப் பழைய முறைகளுள் ஒன்று.[1]

பழஞ்சோறு மனிதருடைய உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான பல கனிமப் பொருட்களை அதிக அளவில் கொண்ட காலை உணவாகப் பயன்படலாம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும் செலெனியம் என்னும் தனிமமும் சிறிய அளவில் பழஞ்சோற்றில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[2]

சோறு நொதித்தலும் மாற்றங்களும்

[தொகு]

சோற்றை நீரில் இட்டு வைக்கும்போது இலக்டிக் அமில பக்டீரியாக்களினால் நொதித்தல் இடம்பெறுகிறது. நொதித்தலின்போது சோற்றின் சுவை சற்று இனிப்பும், புளிப்பும் கொண்டதாக மாற்றமடைகின்றது. எனினும் பெரிய அளவில் சோற்றின் சுவை மாறுபடுவதில்லை.

பழஞ்சோற்றில் பெருமளவு உடல்நலத்துக்கான பயன்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இலக்டிக் அமில பக்டீரியாக்கள் சோற்றில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்புக் காரணிகளை உடைத்து உடல் உறிஞ்சக்கூடிய நுண்ணூட்டங்களையும்; இரும்பு, பொட்டாசியம், கல்சியம் போன்ற கனிமங்களையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக 12 மணிநேரம் நொதிக்கவிடப்பட்ட 100 கிராம் சோற்றில், உறிஞ்சக்கூடிய இரும்பின் அளவு 3.4 மில்லிகிராமில் இருந்து 73.91 மில்லிகிராமாக அதிகரிப்பதாகக் காணப்பட்டுள்ளது. [3] மேற்படி பக்டீரியாக்களின் தாக்கத்தினால் விட்டமின் B12 உம் வெளிவிடப்படுகின்றன. இதனால் முற்காலத்தில் பழஞ்சோறு சைவ உணவு உட்கொள்வோருக்கான முக்கிய விட்டமின் B12 மூலமாக விளங்கியது.

பெருங்குடலில் இருக்கக்கூடிய உடல்நலத்துக்கு உதவக்கூடிய பக்டீரியாக்களையும் பழஞ்சோறு தருவதால், பலவகையான வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க முடிகிறது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. Praveen Kumar, P., Hazeena Begum, V., and Kumaravel, S., 2012, பக். 151.
  2. Praveen Kumar, P., Hazeena Begum, V., and Kumaravel, S., 2012, பக். 152.
  3. Fermented Rice – A Storehouse of Goodness, Turmeriq.com, Magazine for Health, Heritage, Happiness and more.., February 05, 2013.
  4. Fermented Rice: A neglected Vitamin store, Uni5 Pharmacy, Ancient Knowledge for Modern Therapeutics.

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழஞ்சோறு&oldid=2208721" இலிருந்து மீள்விக்கப்பட்டது