பல்லின் வகையடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாந்தனின் மேற்தாடையின் குழைப்பதிவு. பற்களின் நான்கு வகைகளையும் இப்படத்தில் காணலாம். முன்வெட்டும்ப் பல், புலிப்பல், முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல். மூன்றில் இரண்டு கடைவாய்ப்பற்கள் படத்தில் உள்ளன.

பல்லின் வகையடுக்கு (Dentition) என்பது வாயில் உள்ள பல்லின் வளர்சியையும், பற்களின் நான்கு வகையான பல்லினது தோற்றங்களையும் அவற்றின் எண்ணிக்கை அமைப்பு முதலியவற்றையும் குறிக்கும்.

பாலூட்டிகளில், மிகச்சிறுபான்மையான, நான்கு குடும்பங்களில் உள்ள, விலங்குகள் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் நான்கு வகையான பற்கள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையே பெருமம் (அதிக எல்லை) ஆகும். விதி விலக்கான பாலூட்டி உயிரின குடும்பம் அல்லது வரிசைகள்: (1) பாலூட்டியாயினும் முட்டையிடும், ஒற்றைக் கழிவாய் விலங்கு எனப்படும் மோனோட்ட்ரீம்(monotremes), (2) அசையாக் கரடி, எறும்புண்ணி, ஆர்மடில்லோ ஆகையன அடங்கிய செனார்த்தரன்(xenarthrans), (3) செதிள் எறும்புண்ணிகள் எனும் பாங்கோலின்(pangolins), (4) நீர்வாழ் திமிங்கிலம், ஓங்கில்கள் அடங்கிய செட்டாசியன்(cetaceans ) வரிசை ஆகிய நான்காகும். உயிரினங்களில் பலவகையான பற்கள் கொண்டிருந்தால் அவற்றை பல் வகைப்பன்மை அல்லது பல் எயிற்றுமை (எயிறு = பல்) (heterodont) கொண்டவை என்றும், அப்படி இல்லாதவற்றை பல் வகையொருமை அல்லது எயிற்றொருமை கொண்டவை என்றும் கூறுவர்.

நான்கு வகையான பற்கள் முன்வெட்டிப் பல், நாய்ப்பல், முன்கடைவாய்ப் பல், கடைவாய்ப்பல்.

ஒவ்வொரு வகையான பற்களிலும் எத்தனை பற்கள் ஒவ்வொரு தாடையிலும் ஒரு பக்கத்தில் (இடத்திலோ, வலத்திலோ) உள்ளன என்பதை ஒரு "பல் வாய்பாடு" ஆக ஓர் அட்டவணையில் எழுதிக் காட்டுவது மரபு. ஆகவே வாயில் உள்ள மொத்த பற்கள் இந்த அட்டவணையில் உள்ளவற்றை இரண்டால் பெருக்கினால் (இரண்டு பக்கத்திற்கும், இடம், வலம்) வருவதாகும். ஒவ்வொரு பக்கத்துக்கும், முதலில் முன் வெட்டிப்பற்களும், அடுத்ததாக நாய்ப்பற்களும் (புலிப்பற்களும்), மூன்றாவதாக முன்கடைவாய்ப் பற்களும், கடைசியாக நான்காவதாக கடைவாய்ப்பற்களும் குறிப்பிடுவது வழக்கம். எடுத்துக்காட்டாக, "பல் வாய்பாடு" மேற்தாடைக்காக 2.1.2.3 என்று குறித்திருந்தால், அந்த விலங்குக்கு 2 முன் வெட்டிப் பற்களும், 1 புலிப்பல்லும், 2 முன்கடைவாய்ப்பற்களும், 3 கடைவாய்ப்பற்களும் ஒரு பக்கத்தில் (இடப்பக்கம் அல்லது வலப் பக்கம்) உள்ளன என்று பொருள்.

வயது வந்த (adult) மாந்தர்களுக்கான பல் வாய்பாடு:

பல் வகையடுக்கு
2.1.2.3
2.1.2.3

பூனைகளுக்கான பல் வாய்பாடு:

பல் வகையடுக்கு
3.1.3.1
3.1.2.1

உசாத்துணை[தொகு]

Adovasio, J. M. and David Pedler. "The Peopling of North America." North American Archaeology. Blackwell Publishing, 2005. p. 35–36.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லின்_வகையடுக்கு&oldid=3351319" இருந்து மீள்விக்கப்பட்டது