பல்லினபல்லாக்சோ அமிலம்
பல்லினபல்லாக்சோ அமிலம் (Heteropoly acid) என்பது ஐதரசனும் ஆக்சிசனும் ஒரு குறிப்பிட்ட அளவில் உலோகங்கள் அல்லது அலோகங்களுடன் இணைந்து உருவாகும் ஆக்சிஅமிலங்களின் கலவை வகையாகும். வேதி வினைகளில் பொதுவாக இவ்வகை அமிலங்கள் மீள் பயன்பாட்டு அமில வினையூக்கிகாளாக கருதப்படுகின்றன [1].
பல்லினபல்லாக்சோ அமிலமாக இருக்க ஒரு சேர்மத்தில் கண்டிப்பாக பின்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும்.
- தங்குதன், மாலிப்டினம் அல்லது வனேடியம் போன்ற தனிமங்களில் ஒன்று கூட்டியல் அணு தன்மையுடன் இருக்க வேண்டும்.
- ஆக்சிசன்
- சிலிக்கன், பாசுபரசு அல்லது ஆர்சனிக் போன்ற தனிம அட்டவனையின் பி தொகுதி தனிமங்களில் ஒன்று பல்லின அணு என்ற தன்மையுடன் இருக்கவேண்டும்.
- அமிலத்தன்மை ஐதரசன் அணுக்கள்.
ஆக்சிசன் அணுக்களால் இணைக்கப்பட்ட கூட்டியல் அணுக்கள் உட்புறத்தில் ஆக்சிசன் அணுக்களால் பிணைக்கப்பட்ட பல்லின அணுக்களுடன் சேர்ந்து கொத்து அல்லது தொகுதியாக உருவாகின்றன. இத்தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட உலோகக் கூட்டியல் அணுக்கள் வகைகள் நன்கு அறியப்பட்டவையாகும். பல்லினபல்லாக்சோ அமிலத்தின் எதிர்மின் அயனி இணைகாரம் பல்லாக்சோஉலோக அணுத்திரள் அல்லது பல்லாக்சோமெட்டலேட்டு என அழைக்கப்படுகிறது.
பல்வேறு கூட்டியல் அணுக்கள் மற்றும் பல்வேறு பல்லின அணுக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஏராளமான பல்லினபல்லாக்சோ அமிலங்கள் உருவாகின்றன. கெக்கின் கட்டமைப்பு (HnXM12O40) டாவ்சன் க்ட்டமைப்பு (HnX2M18O62) என்ற கட்டமைப்புகள் இரண்டும் இவற்றில் நன்கு அறியப்பட்டவையாகும்.
கெக்கின் கட்டமைப்பு, XM12O40n− | டாவ்சன் கட்டமைப்பு, X2M18O62n− |
சில உதாரணங்கள்:
- H4Xn+M12O40, X = Si, Ge; M = Mo, W
- H3Xn+M12O40, X = P, As; M = Mo, W
- H6X2M18O62, X=P, As; M = Mo, W
பல்லினபல்லாக்சோ அமிலங்கள் பரவலாக ஒரினவரிசை, பல்லினவரிசை வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன[2]. குறிப்பாக கெக்கின் கட்டமைப்பு கொண்ட பல்லினபல்லாக்சோ அமிலங்கள் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன:நல்ல வெப்பநிலைப்புத்தன்மை, உயர் அமிலத்தன்மை, உயர் ஆக்சிசனேற்றப் பண்பு ஆகிய பண்புகளை இவை பெற்றுள்ளன[3].
சில உதாரணங்கள்:
- ஓரினவரிசை அமில வினையூக்கியாக
- H3PMo12O40 மற்றும் H3PW12O40 இரண்டும் புரோப்பீனை நீராற்பகுப்பு செய்து புரோப்பேன்- 2 – ஆல் ஆக மாற்றும் வினை.
- H3PW12O40 அமிலத்தால் நிகழும் பிரின்சு வினை
- H3PW12O40 அமிலத்தால் நிகழும் டெட்ரா ஐதரோ பியூரான் பலபடியாதல் வினை
- பல்லின அமில வினையூக்கியாக
- H3PW12O40 அமிலத்தால் நிகழும் புரோப்பேன் -2- ஆலை புரோப்பீனாகவும் மெத்தனாலை ஐதரோகார்பன்களாகவும் நீரிறக்கம் செய்யும் வினை
- SiO2 கலந்த H3PW12O40 அமிலத்தால் நிகழும் எக்சேனை 2-மெத்தில் பென்டேனாக மீளுருவாக்க வினை
- ஓரினவரிசை ஆக்சிசனேற்றம்
- H3PMo6V6O40 அமிலத்தால் நிகழும் வளையயெக்சேனுடன் H2O2 சேர்த்து அடிப்பிக் அமிலம் தயாரிக்கும் வினை.
- H5PMo10V2O40 அமிலத்தால் நிகழும் கீட்டோனிலிருந்து ஆல்டிகைடு மாற்ற வினை
பகுப்பாய்வியல், திசு அமைப்பியல் போன்ற ஆய்வுகளிலும் பல வினைப்பொருள்களில் ஒரு பகுதிக்கூறாகவும் பல்லினபல்லாக்சோ அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mizuno, Noritaka; Misono, Makoto (1998). "Heterogeneous Catalysis". Chemical Reviews 98: 199–217. doi:10.1021/cr960401q.
- ↑ Kozhevnikov, I. V. (1998). "Catalysis by heteropoly acids and multicomponent polyoxometalates in liquid-phase reactions". Chemical Reviews 98 (1): 171–198. doi:10.1021/cr960400y. பப்மெட்:11851502.
- ↑ "Oxide catalysts in solid state chemistry". T Okuhara, M Misono. Encyclopedia of Inorganic Chemistry. Editor R Bruce King (1994). John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0