பல்லவர் கால அளவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லவர் கால அளவைகள் என்பவை பல்லவ நாட்டில் நிலவிய அளவை முறைகளைக் குறிக்கும். பல்லவர் ஆட்சிக்குட்பட்ட பரப்பில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவைபெற்று இருந்தது. இன்ன பகுதி நிலங்கள் வியற்றைவ என்று முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும் வாி அளவை முதலிய கணக்குகளையும் சிற்றுாா்- பேரூா் அரசியல் அலுவலாளா் வைத்திருந்தனர். பழம் பிரம்மதேயம் இருபத்து நாலு வேலியும் நீக்கி என வரும் பட்டயத் தாெடரானது, பல்லவா் ஆட்சியில் நில அளவைக்கணக்கு முதலியன உண்டு என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்ததும் கள்ளியும் கல்லும் நட்டு எல்லை வகுத்தல் அக்காலப் பழக்கமாக இருந்தது.

நீட்டல் அளவை[தொகு]

நீட்டல் அளவையில் கலப்பை, நிவா்த்தம், பட்டிகா, பாடகம் என்னும் நான்கு அளவைகள் பல்லவா் ஆட்சியில் இருந்தன.

கலப்பை[தொகு]

இரண்டு எருதுகள் பூட்டப்பெற்ற ஒரு கலப்பையைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒருவன் உழும் நிலத்தின் அளவு 'கலப்பை' எனப்பட்டது.

நிவா்த்தனம்[தொகு]

ஒருவன் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றி நடந்து புறப்பட்ட இடத்தை அடைந்தவுடன் அவனால் எல்லை கோலப்பட்ட நில அளவே நிவா்த்தனம் எனப்பட்டது. பிற்காலத்தில் 200 சதுர முழம்கொண்ட நிலபரப்பே 'நிவா்த்தனம்' எனப் பெயா்பெற்றது

பட்டிகா (பட்டி)[தொகு]

பட்டிகா என்பது ஆட்டை ஓா் இடத்தில் கட்டி அதன் கயிற்றின் உதவியால் சுற்றும் அளவையுடைய நிலப்பகுதியே ஆகும்.

பாடகம்[தொகு]

பாடகம் என்பது 240 குழிகொண்ட நிலமாகும். பிற்காலப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் 'வேலழ குழி' என்பன நில அளவைகளாக் காண்கின்றன. குழி என்பது 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை நாட்டுக்கேற்ப வழங்கப்பெற்றது. நிருபதுங்கள் காலத்தில் ஒரு குழி 81 சதுர அடி அளவை உடையதாக இருந்தது. இந்த அளவைகளோடு 1. நாலு காண்கோல் 2. பன்னிரு வாண்கோல் 3. பதினாறு சாண்கோல் முதலிய நீட்டல் அளவைகள் இருந்தது.

நிறுத்தல் அளவை[தொகு]

கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் முதலியன நிறுக்கும் அளவைகள், கழஞ்சி என்பது பல பட்டயங்களில் காணப்படும் அரசாங்க அளவை ஆகும். கழஞ்சின் பன்னிரண்டில் ஒரு பாகம் மஞ்சாடி ஆகும். பட்டயங்களில், கழஞ்சிற்கு வட்டி குறிப்பிட்டபோது மஞ்சாடி அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.

முகத்தல் அளவை[தொகு]

பலவகையான நாழிகள் வழக்கில் இருந்தன அவை 1. கருநாழி 2. நால்வா நாழி 3. மாநாய நாழி 4. பிழையா நாழி 5. நாராயண நாழி முதலியன ஆகும். உறி என ஒரு முகத்தல் அளவைக் கருவி இருந்துள்ளது. பிருதிவீ மாணிக்க உறி என நிருபதுங்கவா்மன் மனைவியான பிருதிவீ மாணவிக்கம் பெயரில் ஒரு உறி அளவை இருந்துள்ளது. விடேல் விடுகு உழக்கு என்பது பொதுவாக மூத்திரையிடப்பட்ட பல்லவா் கால முகத்தல் கருவியாகும். அஃது எல்லாப் பல்லவ அரசா் காலத்தும் இருந்து வந்ததாகலாம், எண்ணெய். நெய், பால் முதலியவற்றை அளக்கப் பயன்பட்ட சிறிய அளவை பிடி எனப்பட்டது. இவை அன்றி, நெல் முதலியவற்றை அளக்கச் சோடு, நாழி, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலிய அளவைகள் பயன்பட்டன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பல்லவா் வரலாறு- டாக்டா். மா. இராசாமாணிக்கனாா் மறு அச்சு 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவர்_கால_அளவைகள்&oldid=3343138" இலிருந்து மீள்விக்கப்பட்டது